

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி ஓய்வுபெறப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு சிஎஸ்கே அணி தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அப்போதைய கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடிய படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.
அத்துடன் அந்தப் பதிவில், “இந்த ஆட்டத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. சிறப்பு வாய்ந்த இரவு. இந்த மனிதர் (தோனி), என்னை உடற்தகுதி சோதனையில் ஓடுவது போன்று ரன் எடுக்க ஓட வைத்தார்” என்று கூறியிருந்தார்.
இந்த ட்வீட்டைத் தொடர்ந்து தோனி ஓய்வுபெறப் போவதை மறைமுகமாக கோலி கூறி இருக்கிறார் என்றும், மாலை 7 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொள்கிறார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதனைத் தொடர்ந்து தோனியின் பெயர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. ரசிகர்கள் உண்மையில் தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்று குழப்பம் அடைந்தனர்.
இந்நிலையில் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், பத்திரிகையாளர்களைச் சந்தித்து இது தொடர்பான செய்தி வதந்தி என்று பதிலளித்தார். மேலும் தோனியின் மனைவி சாக்ஷியும் இது வெறும் வதந்திதான் என்று ரசிகர் ஒருவருக்குப் பதிலளித்தார்.
தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு சிஎஸ்கே அணி தனக்கே உரிய பாணியில், ''Not 7oday..'' (இன்று அல்ல) என்று பதிலளித்துள்ளது.
இது 'கேம் ஆப் த்ரோன்ஸ்' என்ற தொடரில் பயன்படுத்தப்பட்ட பிரபல வசனம்.
மேலும் இதற்கு சில ரசிகர்கள் விளக்கம் கேட்டதற்கு, ''முற்றுப்புள்ளி அல்ல... காற்புள்ளி'' என்று பதிலளித்தது சிஎஸ்கே நிர்வாகம்.
Not 7oday.