

இஸ்லாமாபாத்,
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசியபோது பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுக்கு மின்சாரம் தாக்கியது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீது அகமது பேசும்போது, "உங்களின் நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியும் மோடி" என்று கூறினார். அவ்வாறு பேசும்போதே அமைச்சர் தன் மீது லேசான அளவில் மின்சாரம் பாய்ந்ததை உணர்ந்தார்.
உடனே, "மின்சாரம் தாக்கியது என நினைக்கிறேன். பிரதமர் மோடி அவர்களே நீங்கள் என்ன செய்தாலும் இந்தக் கூட்டத்தை தடுக்க முடியாது" எனப் பேசினார்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.
ரயில்வே அமைச்சர் சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர் போனவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பேசும்போது, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே அக்டோபர் அல்லது அதற்கு அடுத்த மாதத்தில் முழு வீச்சில் போர் நிகழும். இதுதான் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான கடைசிப் போராக இருக்கப் போகிறது. காஷ்மீருக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் இந்தியா தயங்காது என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5-ம் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே பதற்றமான சூழக் நிலவுகிறது.