Published : 16 Aug 2019 17:00 pm

Updated : 16 Aug 2019 17:36 pm

 

Published : 16 Aug 2019 05:00 PM
Last Updated : 16 Aug 2019 05:36 PM

எலும்பும் தோலுமாக ஒரு யானை: 'டிக்கிரி'யின் வைரல் புகைப்படம் சொல்லும் வேதனைச் செய்தி

this-is-tikiiri-a-70-year-old-ailing-female

பிரம்மாண்டம் அதுதான் யானையின் அடையாளம். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு என்றுதான் குழந்தைகளுக்கு யானையைப் பற்றி கற்றுக் கொடுக்கிறோம்.

ஆனால், உலக அளவில் வைரலாகிக் கொண்டிருக்கும் டிக்கிரி என்ற யானையின் படத்தைக் காட்டி குழந்தைகளிடம் இப்படி வேண்டுமானால் பாடம் சொல்லலாம், 'பிற உயிர்களை வதைக்கும் மனிதத்தன்மை மிருகத்தன்மையைவிட மோசமானது' என்று...


சேவ் எலிஃபன்ட் ஃபவுண்டேஷன் (Save Elephant Foundation) மூலமாகவே டிக்கிரிக்கு எதிரான வன்முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த அமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இதுதான் டிக்கிரி. 70 வயது நிரம்பிய பெண் யானை. இலங்கையில் பெரஹேரா விழாவில் பயன்படுத்தப்படும் 60 யானைகளில் இதுவும் ஒன்று. டிக்கிரி ஒவ்வொரு நாளும் மாலையில் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. பின்னிரவு வரை அலங்காரப் போர்வைக்குள் மறைத்து வைக்கப்பட்டு நிற்கச் செய்யப்படுகிறது.

10 நாட்களாக இது தொடர்கிறது. பெரும் கூச்சல், வேட்டு அதிர்வுகள், புகை இவற்றிற்கு நடுவே டிக்கிரி. இந்தத் திருவிழாவுக்கு வருபவர்களை ஆசிர்வதிக்க பல கிலோ மீட்டர் தினமும் நடக்கிறது. அலங்கார ஆடைக்கு கீழ் ஒளிந்திருக்கும் அதன் ஒல்லியான தேகத்தையும் சோர்வையும் யாரும் கவனிப்பதில்லை. திருவிழா மின் ஒளி அதன் கண்களைக் கிழிப்பதனால் நிரம்பி வழியும் கண்ணீரையும் யாரும் பார்ப்பதில்லை.

அடுத்தவர் வாழ்வை வருத்தம் நிறைந்ததாக்கும் இந்தச் செயலை எப்படி ஆசிர்வாதம், புனிதம் என்றெல்லாம் உருவகப்படுத்த முடியும்? இன்று உலக யானைகள் தினம். இந்தஒ புகைப்படத்தை ஏற்றுக் கொள்வோமேயானால் எப்படி நாம் யானைகளின் உலகில் அமைதியை சேர்க்க முடியும். அன்பு செலுத்துவதும், யாரையும் துன்புறுத்தாதும், நேசத்தையும் இரக்கத்தையும் கடத்துவதும்தான் புத்தரின் வழி. அதனைப் பின்பற்ற வேண்டிய தருணம் இது" எனப் பதிவிட்டிருந்தது.

ஆக்ஸ்ட் 13-ம் தேதி இந்தப் பதிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இணையத்தில் இது வைரலாகிக் கொண்டிருக்கிறது. டிக்கிரியின் வைரல் புகைப்படம் சொல்லும் வேதனைச் செய்தி, 'பிற உயிர்களை வதைக்கும் மனிதத்தன்மை மிருகத்தன்மையைவிட மோசமானது' என்பதற்கு சாட்சி.

ஒருமுறை தொலைக்காட்சியில் யானைகள் முகாமின்போது பாகன் ஒருவர் அளித்த பேட்டியைக் காண நேர்ந்தது. அந்தப் பாகன் சொன்ன வார்த்தை இன்று சிந்தையைத் தூண்டுகிறது. "யானை ஒரு முட்டாள் என்றுதான் சொல்வேன். அதன் பலம் அதற்கே தெரியவில்லை. இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய உருவம் நம்மைப் போன்ற மனிதர்களின் வாக்குக்குக் கட்டுப்படுமா?" என்று அந்தப் பாகன் பேசியிருந்தார்.

அந்த வார்த்தைகள் இன்று என் சிந்தையைத் தூண்டுகின்றன. யானைக்கு ஆறாவது அறிவில்லை. அதனால் ஒருவேளை அது முட்டாளாகக்கூட இருக்கலாம். ஆனால், நமக்கு ஆறறிவு இருக்கிறதே அப்புறம் ஏன் நம்மை ஆசிர்வதிக்க ஒரு யானையை இம்சிக்க வேண்டும்?!

யானைகளை மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் காப்போம்.

டிக்கிரியின் தற்போதைய நிலை இதுவே..

டிக்கிரியின் தற்போதைய நிலவரத்தையும் சேவ் எலிஃப்ன்ட்ஸ் பவுண்டேஷன் பதிவிட்டுள்ளது. "தயவு செய்து டிக்கிரிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அவள் மிகவும் சோர்வாக இருக்கிறாள். நடக்கவோ, வேலை செய்யவோ முடியவில்லை. நாங்கள் அவளைப் பார்த்த முதல் நாளில் கால்நடை மருத்துவர் அவளால் நடக்க முடியும் வலிமையாகவே இருக்கிறாள் என்றார். சிலரின் இதயக்கண்ணில் ஒளி இல்லை. அவர்களுக்கு அடுத்தவர் பற்றி அக்கறையில்லை. இதோ கீழே விழுந்துகிடக்கும் இந்த பாவப்பட்ட உயிரைப் பாருங்கள். ஒட்டுமொத்த உலகமே அவளைப் பார்க்கிறது. நாம் இதை மவுனமாகக் கடந்துவிட அனுமதிக்கக்கூடாது. எழுந்து நின்று குரல் கொடுக்க வேண்டிய தருணம். திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்தும் முறையை ஒழிக்க வேண்டிய நேரம் இது" எனப் பதிவிட்டுள்ளது.


TikiiriSave Elephant Foundationடிக்கிரி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x