

கேரள வெள்ளத்தில் நடிகர் விஜய்யின் வேண்டுகோளுக்கு ஏற்ப அவரது ரசிகர்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
கேரளாவில் கனமழை காரணமாக பலத்த வெள்ளம் ஏற்பட்டது முதலே அங்குள்ள விஜய் ரசிகர்கள் பல்வேறு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கேரள ரசிகர்களை சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் முழு வீச்சாக நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளனர் .
சமீபநாட்களாக விஜய் ரசிகர்கள், திரையரங்குகளை நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர் . அதுமட்டுமில்லாது விஜய் படத்திற்காக அவர்கள் வைத்திருந்த நிதியை வெள்ள நிவாரணத் தொகைக்கும் அளித்துள்ளனர். இதனையே விஜய்யும் விரும்புவார் என்று கேரள விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள விஜய் ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சாஜி கூறும்போது, “நாங்கள் கேரள வெள்ளம் ஏற்பட்ட முதல் நாளிலிருந்து களத்தில் இருக்கிறோம். எங்களுக்கு நன்கு தெரியும் விஜய் நிச்சயம் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்யச் சொல்வார் என்று. அவர் இப்போது 'பிகில்' படத்தில் பிஸியாக இருக்கிறார். இருப்பினும் கேரள வெள்ளம் தொடர்பாக கேள்விப்பட்டதும், மாவட்டங்களில் உள்ள ரசிகர் மன்றத் தலைவர்களை விரைந்து உதவுமாறு தொடர்புகொண்டு பேசினார்” என்றார்.
கொல்லம் நண்பன்ஸ் அமைப்பைச் சேர்ந்த, முரளி கணேஷ் கூறும்போது, “ நாங்கள் கொல்லத்தில் மட்டும் ஐந்து திரையரங்குகளில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துள்ளோம். நிவாரணப் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக கிடைக்குமாறு ஏற்பாடு செய்துள்ளோம். ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாத விஜய் ரசிகர்கள் இதில் உதவினர்” என்று தெரிவித்துள்ளார்.
- நவமி சுதிஷ்