

வி.ராம்ஜி
’மூன்றெழுத்து’ திரைப்படத்தில் இடம் பெறும் காட்சியும் வசனமும் இப்போது திடீரென சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த படம் ‘மூன்றெழுத்து’. மேலும் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் உட்பட பலரும் நடித்திருந்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
1968ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி இந்தப் படம் ரிலீசானது. மெல்லிசை மன்னர்கள் என்று பெயரெடுத்திருந்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் ஒருகட்டத்தில் பிரிந்து இசையமைத்தார்கள். டி.கே.ராமமூர்த்தி என்ற பெயரில் . ‘மூன்றெழுத்து’ திரைப்படத்துக்கு ராமமூர்த்தி தான் இசை. பாடல்களும் ஹிட்டாகியிருந்தன. ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்பட்டு, தகதகவென ஜொலித்தது திரைப்படம். அசோகன், மனோகர் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில், கொள்ளைக்கூட்ட பாஸ்... என்னத்தே கன்னையா என்றால் நம்புவீர்களா?
தன்னுடைய முதலாளியின் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக, வீட்டில் வேலை செய்யும் மேஜர் சுந்தர்ராஜன் ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அந்த இடம் குறித்த ரகசியக் குறிப்புகளை மூன்று எழுத்துகளாகப் பிரித்து, ஒவ்வொருவரிடம் கொடுத்து வைத்திருப்பார். மகன் ரவிச்சந்திரனிடம் இந்தத் தகவலைச் சொல்லுவார். முதலாளிக் குடும்பத்தை கண்டுபிடிப்பதும் அந்த ரகசிய மூன்றெழுத்தைக் கண்டுபிடிப்பதும் ஹீரோவுக்கு வேலை.
படத்தில் முக்கியமானதொரு இடத்தில் வரும் வசனம்தான் இப்போது டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் மூன்றெழுத்து. ஒரு காட்சியில் இருப்பவர்கள் அனைவரும் மூன்றெழுத்து வார்த்தைகளாகப் பேசுவார்கள்.
‘அந்த மாறன்ங்கற மூன்றெழுத்துக்கும் மாலதிங்கற மூன்றெழுத்துக்கும் மணம்ங்கற மூன்றெழுத்தை செஞ்சு வைச்சீங்கன்னா, ப்ளான்ங்கற மூன்றெழுத்து உங்க கையில கிடைச்சிரும். இல்லேன்னா இல்லைங்கற மூன்றெழுத்துதான் பதில்’ என்று ஒரு கேரக்டர் வசனம் பேசும்.
இதையடுத்து, நாகேஷ் ‘செல்விங்கறதும் மூன்றெழுத்துதான். மாறன்... மூன்றெழுத்து. கடமைங்கற மூன்றெழுத்தை நிறைவேத்தலேன்னா, உன் நேர்மைங்கற மூன்றெழுத்து கெட்டுப் போகும். காதல்ங்கற மூன்றெழுத்தை நிறைவேத்தலேன்னா, பாவம்ங்கற மூன்றெழுத்தைத்தாண்டா சுமக்க வேண்டி வரும். இப்போ, உன் நிலைமைங்கற மூன்றெழுத்து, மோசம்ங்கற மூன்றெழுத்தா இருக்கு’ என்பார்.
அடுத்து அசோகன் மூன்றெழுத்து மூன்றெழுத்தாகப் பேசுவார். அதன் பிறகு நாயகியான ஜெயலலிதா தொடருவார். பிறகு, ஹீரோ ரவிச்சந்திரன் பேசுவார். தேங்காய் சீனிவாசன் கடைசியாகப் பேசி நிறைவு செய்வார்.
இந்த வசனக் காட்சிகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.