Published : 11 Aug 2019 15:11 pm

Updated : 11 Aug 2019 15:11 pm

 

Published : 11 Aug 2019 03:11 PM
Last Updated : 11 Aug 2019 03:11 PM

அடேங்கப்பா கீரைகள்... அசத்தலான  உணவுகள்! 

keerai

- ஜெமினி தனா

’கண்ணு சரியா தெரியலியா... அப்படின்னா பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாப்பிடுங்க. பகல்ல கூட நட்சத்திரம் பார்க்கலாம். வயித்துல புண்ணா மணத்தக்காளி கீரையைச் சாப்பிடுங்க. இருமல் குறையவே இல்லையா தூதுவளைக்கீரையைத் துவையலாக்கி சாப்பிடுங்க. வாய்ப்புண்ணா... அகத்திக்கீரை சாம்பார் சாப்பிடுங்க. மூட்டு வலியால அவதியா உங்களுக்கு முடக்கத்தான் கீரைதான் சரியான சாய்ஸ்...
இவையெல்லாம் முன்பு பாட்டிகள் சொன்னவை. இன்று இதைத்தான் மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள்.

தினம் ஒரு கீரையைச் சமைத்துச் சாப்பிடச் சொல்லி பாடாய்படுத்திய பாட்டிகளின் பெருமைகளையெல்லாம் இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறோம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்றாலும் இருக்கும் காலம் வரை இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆரோக்கியத்தையேனும் காப்பாற்றிக் கொள்ளலாம். அதோடு அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்தையும் காக்கலாம் என்பதை மருத்துவர்களே வலியுறுத்தும் போது, பிறகென்ன?

முன்னோர்களின் காலம் உணவே மருந்து என்பதை அறிவோம். ஒவ்வொரு நாள் உணவிலும் ஒவ்வொரு சத்துக்களைக் கொண்டிருக்கும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தினார்கள். தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று எல்லாமே சரிவிகித அளவில் இருந்ததாலேயே எந்த விதமான நோய்களும் நம் வீட்டு வாசலை எட்டிக்கூட பார்ப்பதில்லை எனும் நிலை இருந்தது. ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவற்றில் ஒன்றான கீரைகள் பற்றி பார்ப்போம்.

கீரைகள்:
இத்தனை வகையான கீரைகள் உண்டு என்று சரியாக பட்டியலிட முடியவில்லை. வயல் ஓரங்களில் இருக்கும் சிறு செடிகள் கூட நம் மூதாதையர்களின் கண் ணுக்குத் தப்பவில்லை. அவை மசியலாக்கப்பட்டது, உணவாக்கப்பட்டன. என்றாலும் தற்போது நம்மிடையே புழக்கத்தில் இருப்பது 40 வகையான கீரைகள் என்றே சொல்லலாம். மக்கள் அதிகமாக பயன்படுத்துவது முருங்கைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங் கண்ணி, பாலக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளிக் கீரை, வெந் தயக்கீரை போன்றவை.
வீட்டில் பெரியவர்கள் இருந்தால் வல்லாரை, தூதுவளை, பசலைக்கீரை, முடக்கத்தான் கீரை, கலவைக்கீரை, பருப்புக்கீரை, முள்ளங்கிக் கீரை,வாத நாராயணன் கீரை, சுக்காங்கீரை, புளிச்சக் கீரை, பண்ணைக்கீரை என்னும் மசிலிக் கீரை, காசினிக்கீரை, வெள்ளை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, கல்யாண முருங்கை போன்றவை அதிகம் பயன்படுத்தினார்கள்.

கீரைகளில் சத்துகள்:
மனித உடலில் வாயு, பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த விதமான நோய்களும் அண்டாது என்கிறது சித்தமருத்துவம். இந்த மூன்றையும் சமநிலையில் வைக்கும் அளவுக்கு சத்துக்களைக் கொண்டிருக்கிறது கீரை வகைகள். கூடவே ஒவ்வொரு விதமான கீரையிலும் தனித்துவமான சத்துக்களும் இணைந்திருக்கின்றன. இதைப் பட்டியலிட்டால் அதைத் தனி கட்டுரையாகவே எழுதலாம்.
பொதுவாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ,சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் இன்னும் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கீரை:
இவற்றையும் பட்டியலிட்டு தான் முழுமையாக தெரிந்துகொள்ளமுடியும் என் றாலும் குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்தாகும் கீரைகளைப் பார்ப்போம்.

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கைக்கீரை நல்ல பலனளிக்கும். மேலும் இது கண்பார்வை, நரம்புகள், ஆண்மைபெருக்கி முதலான குணங்களையும் பலன்களையும் தரவல்லது.

வயிற்றுப்புண், குடல் புண், வாய்ப்புண், கல்லீரல் பிரச்சினை, உடல் உஷ்ணம் இருப்பவர்களுக்கு மணத்தக்காளிக் கீரையே மாமருந்து. இவை தவிர துத்திக்கீரை, முருங்கைக்கீரையும் சொல்லலாம். அகத்திக்கீரை வயிற்றில் இருக்கும் குடற்புழுக்களை வெளியேற்றுவதோடு பித்தத்தையும் தணிக்கும். ரத்தத்தையும் சுத்தமாக்கும்.

மலச்சிக்கல் பிரச்சினை இன்று அனைத்துவயதினருக்கும் இருக்கிறது. அவர்கள் சிறுகீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, கலவைக்கீரை என எடுத்து வந்தால் நாளடைவில் சரியாகும்.

ஆண்மையைப் பெருக்கவும், பால்வினை நோய்கள் தீரவும் சிறுபசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, தூதுவளை, நருதாளி கீரை போன்றவற்றை உணவில் சேர்க்கலாம்.

மூட்டுகளின் தேய்மானத்தைத் தள்ளிப்போட வைப்பதிலும் உடலிலுள்ள வாயுக்களை வெளியேற்றுவதிலும் முடக்கத்தான் கீரைக்கு முக்கிய பங்கு உண்டு.

அழகைக் கூட்டவும் சருமப் பிரச்சினைகளைத் தீர்த்து அதைப் பராமரிக்கவும் கூட கீரைகள் உண்டு. சொரி, சிரங்கு, தேமல், படை, இளவயதில் முகச்சுருக்கம், கரப்பான் போன்ற பிரச்சினைகளை நீக்கி தேக பலத்தையும் முகப் பொலிவையும் கொடுக்கக்கூடிய கீரைவகைகளாக வெந்தயக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை, சுக்காங்கீரை, தூதுவளைக் கீரை அவற்றோடு பொன்னாங்கண் ணிக் கீரையையும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதை மின்னும் மேனி என்றும் சொல்வார்கள்.

சத்து குறையாமல் சமைக்க வேண்டும்:
இயற்கையான முறையில் கீரைகள் விளைவதில்லை. அவற்றிலும் பூச்சிகள் வராமல் இருக்க ரசாயனம் கலந்த உரங்களைத் தெளிக்கிறார்கள். எனவே மரத்திலிருந்து பறிக்கப்படும் முருங்கை, அகத்திக்கீரையை சுத்தம் செய்தால் போதும். மற்ற கீரைகளை நன்றாக ஆய்ந்து நீரில் மண் போக அலசியே பயன்படுத்த வேண்டும்.

அவசர சமையலுக்கு ஏற்ப கீரையை குக்கரில் வேகவைப்பவர்கள் இனி அப்படிச் செய்யாதீர்கள். மண் சட்டியில் (அடியில் சிறு கற்கள் பதித்திருக்கும்) கீரையை வேக வைக்க வேண்டும். அதிக நேரம் வேக வைக்க கூடாது. அரை வேக்காடாகவும் இருக்கக்கூடாது.
கீரையை மசியல், கூட்டு, பொறியல், தோசை, துவையல் எனச் செய்யலாம். சிறு கீரை, பருப்புக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரையை பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்புடன் சேர்த்து கூட்டாக வைக்கலாம்.

எல்லா கீரைகளையும் (முடக்கத்தான், தூதுவளை தவிர்த்து, பசலைக்கீரை) மசியல் செய்யலாம். சட்டியில் இரண்டு கைப்பிடி அளவு பூண்டு, காரத்துக்கேற்ப பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கீரையைச் சேர்த்து வேகவைத்ததும், புளி சேர்த்து மசியலாக்கி வடகம் தாளித்துக்கொட்டி நெய் விட்டு சாப்பிடலாம். (கீரையை வேகவைக்கும் போது புளி சேர்த்தால் கீரையின் நிறம் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது ) கீரைகளுடன் பருப்பு சேர்த்து வேகவைத்து மசிக்கலாம்.

முடக்கத்தான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து இட்லி மாவில் கலந்து க்ரீன் தோசையாக ஊற்றலாம். இதேபோன்று பசலைகீரையை வதக்கி தோசை மாவில் கலந்து அல்லது துவையலாக்கி தோசை மீது தடவிக் கொடுக்கலாம். காசினிக்கீரையை போண்டா மாவில் கலந்து செய்யலாம். தூது வளை, பிரண்டை, வல்லாரை வகைகள் துவையலுக்கு ஏற்றவை. கீரை வகை களை இரவு நேரங்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டும் இது செரிமான பிரச் னைகளை உண்டாக்கும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இன்னும் பல கீரைவகைகள் உண்டு என்றாலும் கிடைக்கும் இந்த கீரை வகைகளை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தாலே போதும். உடல் ஆரோக்கியம் நிச்சயம். இனி கீரையின்வாசம் உங்கள் இல்லத்தில் எல்லா நாளும் மணக்கட்டும்.அடேங்கப்பா கீரைகள்கீரைகளின் பயன்கள்கீரைகளில் இவ்வளவு சத்துகளா?கீரைவகைகள்அசத்தலான கீரை உணவுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

document-on-sterilite-shooting

வரலாற்று ஆவணம்

சமூக வலைதளம்

More From this Author

x