

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், மலைப்பகுதியில் மிகப்பெரிய முதலையை அனகோண்டா வகை மலைப்பாம்பு முழுவதுமாக விழுங்கிவிட்டு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மவுண்ட் இசா பகுதி உள்ளது. அங்குள்ள மூன்தாரா ஏரிக்கு மார்டின் முல்லர் என்ற புகைப்பட பத்திரிகையாளர் கடந்த 1-ம் தேதி சென்றுள்ளார்.
அங்குள்ள ஏரியில் ஏராளமான நன்னீர் முதலைகள் வசிக்கின்றன. அந்த ஏரியில் அனகோண்டா வகை பாம்புகள் இருப்பது மிகவும் அரிதானதானது என்றபோதிலும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படும் ஆலிவ் அனகோண்டா மலைப்பாம்புகள் இருக்கின்றன. ஆலிவ் மலைப்பாம்புகள் ஏறக்குறைய 13 அடிவரை வளரக்கூடியவை. பறவைகள், மீன்கள், சிறிய விலங்கினங்களை விழுங்கும் தன்மை கொண்டவை.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி புகைப்படக்காரர் மார்ட்டின் முல்லர் ஏரியைக் கடந்தபோது, அங்கு அந்த காட்சியைக் கண்டுள்ளார். ஒரு மிகப்பெரிய முதலையை, ஆலிவ் வகை அனகோண்டா பாம்பு, அதை லாவகமாக விழுங்கும் காட்சியைக் கண்டுள்ளார். இந்த காட்சியை மறைந்திருந்து மார்டின் புகைப்படும் எடுத்துள்ளார்.
தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த முதலை, அனகோண்டாவிடம் கடுமையாகப் போராடியும், அனகோண்டாவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. முடிவில் அனகோண்டாவின் வாய்க்குள் இரையானது.
மிகப்பெரிய முதலையை பாம்பு மெல்ல, மெல்ல தனது உடலை ரப்பர் போல விரித்து, தனது தாடையை விரித்து விழுங்கும் காட்சியை மார்டின் வீடியோவாகவும் எடுத்துள்ளார், புகைப்படமாகவும் எடுத்துள்ளார்.
ஏறக்குறைய 5 மணிநேரம், அந்த முதலையை முழுவதுமாக பாம்பு விழுங்கிவிட்டு அங்கிருந்து தனது உடலை அசைக்க முடியாமல் அசைத்து மெதுவாக நகர்ந்து சென்றது.
இந்த காட்சியை பதிவு செய்து மார்ட்டின் முல்லர் தனது பேஸ்புக் பக்கத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜிஜி வைல்ட்லைப் ரெஸ்கியூ அமைப்பிடமும் வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை வைல்ட்லைப் ரெஸ்கியு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தப் படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டவுடன் 20 ஆயிரத்துக்கும் மேலாக ஷேர் செய்யப்பட்டுள்ளது.