Last Updated : 19 Jun, 2014 09:18 AM

 

Published : 19 Jun 2014 09:18 AM
Last Updated : 19 Jun 2014 09:18 AM

கர்நாடக மாநிலத்தில் நாய் துரத்தியதால் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்புப் பணியில் மதுரை மணிகண்டன்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜாப்பூர் அருகே 4 வயது பெண் குழந்தையை நாய் துரத்தியதால் ஆழ்துளை கிணற்றில் செவ்வாய்க்கிழமை இரவு விழுந்தது. இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்ற போதும் குழந்தையை மீட்க முடியவில்லை.

ஆழ்துளை கிணற்றில் விழுவோரை ரோபோ உதவியுடன் காப்பாற்றும் மதுரையைச் சேர்ந்த மணிகண்டனும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டம் இப்னால் கிராமத்தை சேர்ந்தவர் ஹ‌னுமந்த பாட்டீல். கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சாவித்ரி,மகள் அக் ஷதா (4) உடன் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள நாகத்தானே கிராமத்தில் தங்கி வேலைசெய்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணி அளவில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அக் ஷதாவை இரண்டு தெருநாய்கள் துரத்தின. நாய்களுக்கு பயந்து ஓடிய அக் ஷதா தாயின் கண் முன்னாலே திறந்திருந்த 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். உடனடியாக பீஜாப்பூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விடிய விடிய மீட்பு பணி

போலீஸாரும், தீய‌ணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியைத் தொடங்கினர்.அப்பகுதியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டிருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. செயற்கை சுவாசத்திற்காக ஆக்ஸிஜன் செலுத்தினர். அப்பகுதியில் பாறைகள் நிறைந்திருப்ப‌தால்,ஆழ்துளை கிணற்றுக்கு அருகே குழி தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையில் பீஜாப்பூர் மாவட்ட ஆட்சிய‌ர் குண்டப்பா மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருக்கும் மீட்பு குழுவினரையும் வரவழைத்தார். ஆழ்துளை கிணற்றில் கேமராவை செலுத்தி பார்த்த போது அக் ஷதா தலை கீழாக விழுந்திருப்பது தெரிய வ‌ந்தது.மேலும் குழந்தைக்கு முதுகிலும்,கைகளிலும் காயம் ஏற்பட்டதால் ரத்தம் வந்திருப்பதும் தெரிய வந்தது.

அக் ஷதா தலைகீழாக சிக்கி இருப்பதால் அவருக்கு தண்ணீர் உள்ளிட்ட உணவு வழங்க முடியாமல் மீட்பு படையினர் திணறினர்.இருப்பினும் விடிய விடிய வேகமாக மீட்பு பணியில் ஈடுபட்டு, குழந்தையின் உயிரைக் காப்பாற்ற போராடினர்.

விரைந்தார் மணிகண்டன்

மாவட்ட ஆட்சியர் குண்டப்பா, தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த‌ குழந்தையை ரோபோ உதவியுடன் மீட்ட மணிகண்டனை வரவழைக்க நடவடிக்கை எடுத்தார். மாலை 4.30 மணிக்கு பீஜாப்பூரை சென்றடைந்த மணிகண்டன் குழுவினர் 5 மணிக்கு மீட்பு பணி தொடங்கினர்.

அக் ஷதா 40 முதல் 45 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றுவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x