Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

திருச்சி தி.மு.க வேட்பாளர் யார்?- கே.என்.நேரு விசுவாசிக்கே வாய்ப்பு அதிகம்

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். ஆனால், இன்னொரு முக்கியக் கட்சியான திமுக-வில் திருச்சிக்கு யார் வேட்பாளர் என்பதில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை.

திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக-வில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, செல்வராஜ், திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், இளைஞரணி ஆனந்த், மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் மனு அளித்துள்ளனர். இதில் நேருவின் ஆதரவாளரான ஆனந்த் நேர்காணலுக்கே செல்ல வில்லை, காரணம், ‘நாடாளுமன்றத் தேர்தலில் செலவளிக்கும் அளவுக்கு தம்மிடம் வசதி இல்லை’ என்று சொல்லி இருக்கிறார் ஆனந்த்.

திருச்சி திமுக வேட்பாளர் தேடல் குறித்து நம்மிடம் பேசிய மாவட்ட திமுக முக்கிய நிர்வாகி ஒருவர், “அதிமுக வேட்பாளர் குமார் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு, திருச்சி தொகுதியில் முக்குலத்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த முறை குமார் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

இந்தமுறை குமாரை வீழ்த்த வேண்டுமானால் திமுக-வும் முக்குலத்தோர் ஒருவரை களமிறக்க வேண்டும் என மாவட்டத் தலைமை யோசிக்கிறது.

அப்படியொரு முடிவெடுக்கப் பட்டால், செட்டியார் சமூகத் தைச் சேர்ந்த ரகுபதிக்கு வாய்ப்பிருக்காது. முன்னாள்

எம்.எல்.ஏ. சேகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் நேருவை புறந்தள்ளிவிட்டு சென்னையில் ஸ்டாலினுக்கு வேண்டியவர்களை பிடித்து சீட் வாங்கி வந்தார். இவர் முக்குலத்தோராக இருந்தாலும் தன்னுடைய கையை மீறிப் போய்விடுவார் என்பதால் நேரு இவருக்கு முட்டுக்கட்டை போடுகிறார். அதேசமயம், தனக்கு பல வகையிலும் ஏற்றவரான மாநகரச் செயலாளர் அன்பழகனை திருச்சி தொகுதியில் நிறுத்த நினைக்கிறார் நேரு. அன்பழகன் முக்குலத்தோர்தான் என்றாலும் இந்த ஒரு தகுதிக்காக மட்டுமே தலைமை அவருக்கு சீட் கொடுக்குமா என்பதும் கேள்விக்குறிதான்’’ என்றார்.

இது ஒருபுறமிருக்க, முக்குலத் தோரும் தஞ்சை தொகுதிஎம்.பி-யுமான பழநிமாணிக்கத்தை திருச்சியில் நிறுத்துவது குறித்து திமுக தலைமையில் ஆலோசிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இதையும் நேரு அவ்வளவாய் விரும்பவில்லை என்கின்றனர். காரணம் ஐந்து முறை எம்.பி. முன்னாள் மத்திய அமைச்சர் இந்த அடையாளங்களைக் கொண்ட பழநிமாணிக்கம் திருச்சிக்கு வந்தால் தன்னை மிஞ்சி விடுவார் என்று அச்சப்படுகிறார் நேரு.

திமுக-வில் வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளரின் பரிந்துரையையும் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும்.

அண்மையில் திமுக-வின் 10-வது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி தலைமையின் பாராட்டைப் பெற்றவர் நேரு. அவரது விருப்பத்துக்கு மாறாக திருச்சி திமுக-வில் எதையும் திணிக்க நினைக்காது தலைமை என்கிறார்கள் திருச்சி திமுக பிரமுகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x