Published : 05 May 2014 02:31 PM
Last Updated : 06 May 2014 01:33 PM
அது ஐந்தாம் வகுப்பு நடக்கும் அறை. டீச்சர் குழந்தைகளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.
“கிண்டில சில்ரன்ஸ் பார்க்ல ஒரு குரங்கு இருக்கு. சூரியன் அஸ்தமனம் ஆனா அதுக்குத் தமிழ் மறந்துபோயிடும். இங்கிலீஷ்லயே பேச ஆரம்பிச்சிடும். திரும்பவும் சூரியன் உதயம் ஆகறவரைக்கும் அப்படித்தான். அந்தக் குரங்கை நடு ராத்திரில எழுப்பி ஏதாவது கேள்வி கேட்டா அது எந்த மொழில பதில் சொல்லும்?”
ஆனந்தி டக்கென்று பதில் சொன்னாள்: “இதுகூடத் தெரியாதா? இங்லீஷ்லதான் பேசும்.”
அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரவீண் உடனே, “ஹய்யோ, குரங்குக்கு எப்படித் தமிழ், இங்லீஷ் எல்லாம் தெரியுமாம்?” என்றான்.
ஆனந்தி, பிரவீண் இருவரில் யார் சொன்னது சரி?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். டீச்சர், “குரங்குக்கு மொழி தெரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லாமலேயே “குரங்குக்குத் தமிழ் மறந்துவிட்டது” என்று சொல்கிறார். ஆனால் அவர் எதுவும் சொல்லாமலேயே இந்தக் குரங்குக்கு மொழி தெரியும் என்று ஆனந்தி அனுமானித்துக்கொள்கிறாள்.
பிரவீணோ வேறு மாதிரி யோசிக்கிறான். குரங்குக்கு மொழியே தெரியாது, அப்புறம் எப்படி அதற்குத் தமிழ் மறக்கும் என்பது அவன் யோசனை.
இதில் சரி, தவறு என்று எதுவும் கிடையாது. இரண்டும் இரண்டு அணுகுமுறைகள்.
ஆனந்தியிடம் கற்பனைத் திறன் அதிகம். ஒரு சூழலை அனுமானித்துக் கொள்ள வேண்டியிருந்தால் அதில் முழுமையாக மூழ்கிவிடுகிறாள். அதன் தர்க்கத்திற்குள் சென்று யோசிக்கிறாள். வெளி உலகத்தின் தர்க்கத்தை அதன்மேல் போட்டுப் பார்க்கவில்லை.
பிரவீண் அப்படி அல்ல. அவனுக்குத் தர்க்க ரீதியான தகவல்கள் முக்கியம். குரங்குக்குத் தான் மொழி தெரியாதே, அப்புறம் எப்படி அது தமிழை மறக்கும் என்பது அவன் கேள்வி. உங்கள் கேள்வியே தப்பு என்று அவன் டீச்சரைப் பார்த்துச் சொல்கிறான். அந்த அளவுக்குத் தர்க்க ரீதியான அணுகுமுறை கொண்டவன் அவன். கேள்வி கேட்டதும் அந்தக் கேள்வியின் அடிப்படையை ஆராயத் தொடங்குகிறான். மேலும் கேள்விகளை எழுப்புகிறான்.
ஆனந்தியும் பிரவீணும் இரு வேறு அணுகுமுறைகளின் அடையாளங்கள். இவர்கள் இருவருமே இரு வேறு துறைகளில் பிரகாசிக்கக்கூடியவர்கள். ஒன்று கற்பனை வளம் சார்ந்த துறை. இன்னொன்று தர்க்க ரீதியான அலசல்கள் சார்ந்த துறை. இந்த இரு துறைகளுமே சுவாரஸ்யமானவை. ஒருவரது உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவை.
கற்பனையில் மிதந்தபடி
கற்பனையின் மூலம் என்னவெல்லாம் செய்யலாம்? கலைகள் அனைத்துக்கும் கற்பனை வளம் முக்கியம். ஓவியம், கதை, கவிதை, நாடகம் ஆகியவற்றுக்குக் கற்பனை வளம் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே எழுத்துத் துறை, சினிமா, தொலைக்காட்சி, விளம்பரப் படம் எடுத்தல் ஆகியவற்றில் கற்பனை வளம் கொண்டவர்களுக்கான தேவை இருக்கிறது.
அது மட்டுமல்ல. நடனம், இசை, வடிவமைப்பு என்று எல்லாவற்றுக்கும் கற்பனை வளம் முக்கியம். ஆடை வடிவமைப்பு, கட்டிடம் உருவாக்குதல், விளம்பரங்களை வடிவமைத்தல், நகைகளுக்கான வடிவமைப்பு, நூல்களின் முகப்பை உருவாக்குவது, அரங்கை அமைத்தல் என எல்லா விதமான வடிவமைப்புகளிலும் கற்பனைத் திறனின் மூலம் புதிய எல்லைகளை உருவாக்கலாம்.
இன்று எல்லாத் துறைகளிலும் படைப்புத் திறனுக்கென்று க்ரியேட்டிவ் விங் என்னும் பிரிவு உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் க்ரியேட்டிவ் ஹெட் என்னும் பதவியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிகழ்ச்சியைப் படைப்பூக்கத்துடன் நடத்திச் செல்ல வேண்டியது இவர்கள் பொறுப்பு.
மேலே சொல்லப்பட்ட அனைத்துத் துறைகளிலும் நிறைய வேலைகள் இருக்கின்றன. கற்பனை வளத்தை வளர்த்துக்கொள்வதற்கான படிப்பும் பயிற்சிகளும் உள்ளன.
கற்பனை வளம் கொண்ட ஆனந்தி என்ன செய்வாள் என்று பார்த்தோம். இப்போது பிரவீண் என்ன செய்வான் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.