Published : 18 Feb 2015 08:59 AM
Last Updated : 18 Feb 2015 08:59 AM

நீலகிரியில் பெண்ணைக் கொன்ற புலியை பிடிக்க ஆளில்லா குட்டி விமானம், கும்கி யானையை பயன்படுத்த முடிவு: கிராம மக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

பாட்டவயல் பகுதியில் பெண்ணைக் கொன்ற புலியைப் பிடிக்க கும்கிகள், துரோன்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பாட்டவயல் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை 14-ம் தேதி காலை தேயிலை தோட்டத்தில் புலி கடித்து கொன்றது, ரெஜீஸ் என்ற இளைஞரை தாக்கியது. பாட்டவயல், பாலப்பள்ளி பகுதிகளில் இந்த மனித வேட்டை புலியை தேடும் பணியில் 5 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. புலியை கண்டறிய 10 இடங்களில் கேமராக்களும், 5 இடங்களில் கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது வரை புலி பிடிபடவில்லை.

தேடுதல் வேட்டையில் கும்கி களை ஈடுபடுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் தயார் நிலையில் உள்ளன. மேலும், புலியை கண்டறிய துரோன்கள் (ஆளில்லா குட்டி விமானம்) பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் கேமராக்கள் பொருத்திய சிறிய துரோன்கள் வரவழைக்கப்பட உள்ளன. இந்த துரோன்களை புலி நடமாட்டம் உள்ள பகுதியில் பறக்கவிட்டு, படம் எடுத்து அதன் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்க முடியும் என வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சாதிக் அலி தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் தமிழக முதன்மை தலைமை வனப் பாது காவலர் மால்கானி மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆயுஷ்மணி திவாரி ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.

நடவடிக்கை

கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் கூறியது:

தற்போது பாட்டவயல் பகுதி சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, வனத்துறையினர் அடையாளம் காட்டிய நபர்கள் மற்றும் எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புலி நடமாட்டம் உள்ள பாட்ட வயல், பாலப்பள்ளி, மானிவயல், பன்சாரா ஆகிய கிராமங்களில் உள்ளவர்கள் வெளியே தனியாக நடமாட வேண்டாம் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளனர். வெளியே செல்லும்போது ஒரு குழுவாகச் செல்ல வேண்டும் என்றும், புலி அகப்படும் வரை இப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பணிக்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x