Last Updated : 14 Jan, 2015 02:29 PM

 

Published : 14 Jan 2015 02:29 PM
Last Updated : 14 Jan 2015 02:29 PM

ஜெ. மீதான வழக்கில் வருமானவரி தீர்ப்பாயத்தின் சான்றிதழை கவனத்தில் கொள்ளவேண்டும்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991-96–ல் மிகச்‌ சரியாக வருமான வரி செலுத்தியுள்ளதாக வருமான வரி தீர்ப்பாயம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று வாதிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதியும், வழக்கறிஞருமான ஆர்.பசன்ட், வழக்கறிஞர்கள் பி.குமார் உள்ளிட்ட பலர் ஆஜராகின‌ர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது:

1991-96 காலகட்டத்தில் ஜெய லலிதா மிக‌ச் சரியாக தனது வருமான வரியை செலுத்தியுள்ளதாக வருமான வரி தீர்ப்பாயம் சான்றிதழ் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இதை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்கை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், வருமான வரி தீர்ப்பாயத்தின் ஆணை, குற்றவியல் நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளது. இதை கடந்த 2010-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் அதே முறையை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

திமுக அரசின் தலையீடு

இவ்வழக்கு தொடர்பான அசையும் மற்றும் அசையா சொத்துகளை மதிப்பிட்ட வல்லுநர் குழு, திமுக அரசால் நியமிக்கப்பட்டது. நல்லம்ம நாயுடு கண்காணிப்பின் கீழ் செயல்பட்ட அந்தக் குழு சுதந்திரமாக செயல்படவில்லை. மேலும் மதிப்பீட்டுக் குழுவுக்கு ‘ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிடும் குழு' என வெளிப்படை யாக பெயரிடப்பட்டதால் அவர்கள் திமுக அரசுக்கு சாதகமாக நடந்து கொண்டனர்.

இந்திய சாட்சிய சட்டப்படி, விசாரணையின் போது சுதந்திரமாக செயல்படாத அதிகாரிகளின் வாக்கு மூலங்களை வழக்கில் சாட்சியமாக ஏற்கக்கூடாது. இதன்படி மதிப்பீட்டுக் குழு சமர்ப்பித்த அனைத்து விலைப் பட்டியல்களையும் கருத்தில் கொள்ளக்கூடாது. மேலும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய அந்த‌க் குழுவின் ஒட்டுமொத்த சாட்சியங்களையும் ஏற்கக் கூடாது.

மதிப்பீட்டுக் குழுவினரின் மதிப்பீட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா ஏற்க மறுத் துள்ளார். ஆனால் இந்த மதிப்பில் 20 சதவீதத்தை மட்டும் எடுத்துக்கொள்வ‌தாக கூறியுள்ளார். இவ்வாறு சட்டவிதிகளை மீறி ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் கருத்தில்கொள்வது ஏற்புடையதல்ல. அதையே புதிய‌ வழக்காக கருதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் தனித்தனியான வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால், சிறப்பு நீதிமன்றம், நால்வரும் ஒரே வீட்டில் வசித்ததால் அதை ஒரே வருமானமாக பதிவு செய்துள்ளது. அவர்களின் வருமானத்தை ஜெயலலிதாவின் வரு மானத்துடன் இணைப்பது தவறானது.

இன்பசாகரன் வழக்கு

தமிழக சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் இன்பசாகரனின் வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை யிட்டபோது, 3 கிலோ தங்கம், பல லட்ச ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தது. அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இன்பசாகரன் தெரிவித்தார். அதே நேரத்தில் அவை அனைத்தும் தன்னுடையவை என்று அவரது மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், இன்பசாகரனை வழக்கில் இருந்து விடுவித்தது.

ஜெயலலிதாவுக்கு தொடர்பில்லை

அதேபோல ஜெயலலிதாவுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப் பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்ட அனைத்து சொத்துகளுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி தெரிவித்துள்ளனர். ஆனால் அதை சிறப்பு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இன்பசாகரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை கருத்தில் கொண்டு, இவ்வழக்கின் வருமான குற்றச்சாட்டை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நாகேஸ்வர ராவ் வாதிட்டார்.

மறு மொழிபெயர்ப்பு சரி

இதையடுத்து கடந்த 6-ம் தேதி ஜெயலலிதா தரப்பில், “வழக்கில் நால்வர் மீதான‌ குற்றச்சாட்டு மற்றும் அதற்கான விளக்கங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மறு மொழிபெயர்ப்பு செய்யப்படவேண்டும்” என கோரப்பட்டது. மறு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணங்களை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமாரிடம் கொடுத்து சரிபார்க்குமாறு நீதிபதி குமாரசாமி கூறினார்.

அவற்றை ஆராய்ந்த பி.குமார், மறு மொழிபெயர்ப்பு மிகச் சரியாக இருப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு(இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x