Published : 23 Jan 2015 08:23 PM
Last Updated : 23 Jan 2015 08:23 PM

பொது விவாதத்திற்குத் தயாரா?- தயாநிதி மாறனுக்கு குருமூர்த்தி சவால்

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தயாநிதி மாறன் வெளிப்படையான விவாதத்திற்குத் தயாரா? என்று எஸ்.குருமூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

சன் நெட்வொர்க் அலுவலகத்திற்கு 323 தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்காக தனது இல்லத்தில் ஒரு மினி-தொலைபேசி நிலையத்தை தயாநிதி மாறன் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் கவுதமன், சன் டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்த கண்ணன், ரவி ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் தயாநிதி மாறன் கூறும்போது, “எனக்கும் சன் டி.வி.க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறேன். எனது வீட்டில் 300 தொலைபேசி இணைப்புகள் இல்லவே இல்லை. ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டும்தான் இருக்கிறது.” என்று மறுத்துள்ளார்.

மேலும் அதே சந்திப்பில், “தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அறிவு ஜீவி ஒருவரை திருப்திப்படுத்தவே, சிபிஐ இப்படி செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. என்னை குற்றவாளியாக்கியே தீரவேண்டும் என்று சிபிஐ தீவிர முயற்சி மேற்கொள்கிறது.” என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

இதனையடுத்து எஸ்.குருமூர்த்தி, ’தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “நான் அவரை பொது விவாதத்திற்கு அழைக்கிறேன். அங்கு அவர் தன்னை நிரூபிக்கட்டும். மேலும் என் மீது ஏன் இப்போது வரை அவதூறு வழக்கு தொடரவில்லை என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.” என்றார்.

கலாநிதிமாறன் உரிமையாளராக இருக்கும் சன் நெட்வொர்க் அலுவலகத்திற்கு 323 தொலைபேசி இணைப்புகளை வழங்குவதற்காக தயாநிதி மாறன் தனது சென்னை, போட்கிளப் இல்லத்தில் மினி தொலைபேசி நிலையத்தையே நடத்தி வந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதன் முதலாக இந்த விவகாரத்தை 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குருமூர்த்தி வெளியே கொண்டு வந்தார்.

323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததோடு அதனை பி.எஸ்.என்.எல். பணியாளர் தவிர வேறு ஒருவரும் இயக்க முடியாத நிலையில் அது பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்த மாதிரி ஆய்வில், 24371515 என்ற ஒரு எண்ணிலிருந்து, மார்ச் 2007-இல் மட்டும் உத்தேசமாக 48,72,027 யூனிட் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது. இது பி.எஸ்.என்.எல்-க்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியது என்று குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தயாநிதி மாறன் குற்றச்சாட்டுகளை மறுத்ததற்கு பதில் அளித்த குருமூர்த்தி, “இணைப்புகளுக்கான கேபிள்கள் இப்போது கூட இருக்கின்றன. தன்னிடம் ஒரேயொரு எண் மட்டும்தான் உள்ளது என்று அவர் பொய்யுரைக்கிறார். இந்த வழக்கைப் பொறுத்த மட்டில் சாட்சியம் கண்கூடானது...” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x