Published : 28 Aug 2014 10:37 AM
Last Updated : 28 Aug 2014 11:00 AM
இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 4 மணி முதல் 5.55 மணிவரை இத்தாக்குதல் நீடித்துள்ளது.
எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அண்மைகாலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இதுவரை, இத்தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் இருவர் பலியாகியுள்ளனர். எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) இருநாட்டு கமாண்டர்கள் தரப்பிலான கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை முடிந்து சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. நேற்றிரவு 11.50 மணியளவில் தாக்குதல் நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 4 மணி முதல் 5.55 மணிவரை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இத்தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.