Last Updated : 24 Oct, 2017 10:11 AM

Published : 24 Oct 2017 10:11 AM
Last Updated : 24 Oct 2017 10:11 AM

நலிவுற்ற கலைகளும்.. நைந்து போன கலைஞர்களும்!- மெல்லச் சாகடிக்கப்படும் நாட்டுப்புறக் கலைகள்

ங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடத்திவிட்டுக் கலைந்திருக்கிறார்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தைச் சுமக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்!

ஆடலும் பாடலும் தமிழர் தம் வாழ்வில் ஆதிமுதல் அந்தம் வரை பின்னிப் பிணைந்தவை. குறிப்பாக, கிராமங்களில் வசிக்கும் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் அவர்களையும் அறியாமலேயே ஏதாவதொரு ஒரு நாட்டுப்புறக் கலை ஒளிந்திருக்கும். இவர்களெல்லாம் இன்னமும் தங்களது ரசனையைத் தொலைக்காமல் வைத்திருப்பதால்தான் கிராமங்களில் இன்னும் கரகம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், குறவன் - குறத்தி ஆட்டம், ஜிக்காட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் கொஞ்சமாவது உயிர்ப்புடன் இருக்கின்றன.

கிடப்பில் போடப்பட்ட விருதுகள்

தங்களது சுய திறமையால் ஆடல், பாடலில் நூற்றுக் கணக்கான கலைஞர்கள் பொதுவெளியில் புகழ்பெற்றிருக்கிறார்கள். அதேசமயம், இவர்களைத் தவிர்த்து இன்னும் ஆயிரக் கணக்கான கலைஞர்கள் தங்கள் அன்றாட ஜீவனத்துக்கே கருமாயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற கலைஞர்களை ஆதரித்துப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் பாராமுகமாக இருப்பதே நாட்டுப்புற கலையும், கலைஞர்களும் நலிவுற்று நைந்து போனதற்கு காரணம் என்கிறார்கள். உதாரணமாக, மத்திய மாநில அரசுகள் நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக ஒதுக்கிய நிதியானது சமீப ஆண்டுகளாக முறையாக பயன்படுத்தப்படவில்லை. இவர்களுக்கான நல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார பயணங்களிலும் கலைக்குழுக்களை கண்டுகொள்ளவே இல்லை. கலைமாமணி, கலைச்சுடர்மணி விருதுகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளன. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை, கல்வி உதவி, வீட்டுமனை பட்டா, மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை சரிவரக் கிடைக்கவில்லை.

கலை நிகழ்ச்சிகளுக்காக கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். சீருடை நிதி, ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவைகளும் உயர்த்தப்படவே இல்லை. இதையெல்லாம் தாண்டி, கலையைத் தவிர வேறெதுவும் அறியாத இந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட சோகச் சுமைகள். அதையும் தாங்கிக் கொண்டு நாட்டுப்புறக் கலைகளையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப்பற்றியெல்லாம் மத்திய மாநில அரசுகள் சட்டைசெய்ததாக தெரியவில்லை.

இந்த அவலங்களை எடுத்துச் சொல்லத்தான் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் கூடி கோரிக்கையைச் சொல்லும் போராட்டத்தை நடத்தினார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நாட்டுப்புறக் கலைஞர்கள். போராட்டத்தை ஒருங்கிணைத்த மாற்று ஊடக மையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் காளீஸ்வரன் நம்மிடம் பேசினார்.

இந்திரா காந்தி காலத்துக்குப் பிறகு..

“தமிழக அரசின் ஆரம்பகால கணக்குப்படி தமிழகத்தில் 30 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் பதிவில் இருக்கிறார்கள். தற்போது லட்சக் கணக்கான கலைஞர்கள் தயாராகியுள்ள நிலையில், அவர்களை முறையாக பதிவு செய்யக்கூட அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. கலைஞர்களுக்கு, ஆரம்பத்தில் வழங்கப்பட்ட ஓய்வூதியமே இன்னமும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படும் நாடகக் குழுவுக்கான ஊதியம் இந்திரா காந்தி காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது. கலைஞர்கள் ஓய்வூதியம் பெறும் வயது வரம்பை அறுபதிலிருந்து ஐம்பதாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 1,075 நாட்டுப்புறக் கலைகள் தமிழகத்தில் இருந்தன. ஆனால், தற்போது அதில் 25 கலைகளைக்கூட அடையாளப்படுத்தப்பட இயலாத நிலை. மீதமிருக்கும் கலைகளையாவது அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 32 மாவட்டங்களில் 150 கலைக்குழுக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். ஆனால் அரசாங்கமோ, நாட்டுப்புற கலையை நலிவுற வைக்கும் செயலைத்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இதைக் கண்டித்தும் எங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும்தான் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்” என்றார் காளீஸ்வரன்.

கோரிக்கைகள் ஒருபக்கம் இருக்க, நாட்டுப்புற கலைகளை நிகழ்த்துவதில் போலீஸ் தரும் நெருக்கடிகளும் கலைஞர்களின் கழுத்தை இறுக்குவதாகச் சொல்கிறார்கள். ”முன்பெல்லாம், விடிய விடிய நடக்கும் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளை இப்போது இரவு பத்து மணிக்குள் முடிக்கச் சொல்லி கெடு வைக்கிறது போலீஸ். இதற்கும் அனுமதி பெறுவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள். தலைவர்களை பற்றி பாடக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். பெண்கள் கண்டாங்கி சேலை கட்டி உடல்முழுக்க மறைத்துக் கொண்டு ஆடுவதைக்கூட சில இடங்களில் அனுமதிக்க மறுக்கிறார்கள்” என்று வேதனைப்படும் நாட்டுப்புறக் கலைஞர்கள், “யாரோ சிலர் ஆபாச நடனம் ஆடுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த நாட்டுப்புறக் கலைஞர்களையும் நசுக்குவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இவர்களின் குமுறல்களை தஞ்சையில் உள்ள தென்னக கலைப்பண்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் ஜோசப்பிடம் கொண்டு சென்றோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவர், “பதிவு செய்வதில் இடை யூறுகளை தவிர்க்கவே நாட்டுப்புற கலைஞர்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களை பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஏராளமான கலைஞர்கள் தங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதன் வழியாக ஒவ்வொரு கலைஞரும் தனித்தனியாகத் தான் பெயர்களை பதிவு செய்யமுடியும். அமைப்பு மற்றும் நிறுவனங்கள் மூலமாக மொத்தமாக பதிவுசெய்ய முடியாது.

அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை

இவ்வாறு பதிவுசெய்துகொண்டவர்களுக்கு, கலைஞர்களுக்கான அனைத்து சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு கலைஞர்களை அனுப்புவதில் எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை. நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப மட்டுமே கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் தாய்லாந்துக்கு கலைஞர்கள் சென்று வந்தார்கள். தஞ்சை சதய விழாவுக்கும் அப்படித்தான் கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட அனைத்து கலைகளுக்கும் அரசு அறுவித்துள்ள சலுகைகளை செய்துதர தென்னக கலைப்பண்பாட்டு மையம் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. மற்றபடி, கலைமாமணி உள்ளிட்ட விருதுகள் வழங்குவது என்பது மாநில அரசு தனிப்பட்ட முறையில் எடுக்கவேண்டிய நடவடிக்கை” என்றார்.

எல்லாமே சரியாக நடந்தால் நூற்றுக் கணக்கான கலைஞர்கள் எதற்காக வள்ளுவர் கோட்டம் வரை வந்து போராட்டம் நடத்த வேண்டும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x