யானைகளின் வருகை 62: புத்துணர்ச்சி நிதிக்கு ஈகோ யுத்தம்
முதலாவது கோயில் யானைகள் நலவாழ்வு முகாம் முடிந்து சில மாதங்களில் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த 2 யானைகள் மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து வனத்திலும் இரண்டு குட்டி யானைகள் இறந்தன. இவையிரண்டும் கூட இனம்புரியா நோய்த் தொற்று தாக்கியே இறந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இது எல்லாமே கோயில் யானைகள் முகாம் நடந்த இடத்திலிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவிலேயே நடந்ததால் இதற்கு வந்து போன கோயில் யானைகளின் நோய்த்தொற்றுதான் காரணம் என்ற சர்ச்சைகள் கூடுதல் பலம் எடுத்தன. அதை உறுதிப்படுத்துவதாகவே வனத்துறை வளர்ப்பு யானை முகாம் இடமாற்றமும் அமைந்தது. இதில் வேறொரு சர்ச்சையும் புறப்பட்டது.
ஏற்கெனவே வனத்துறை வளர்ப்பு யானைகள் முகாம் இருந்த இடத்தின் கரையில் ஓடுகிறது மாயாறு. அந்த நதியில் பல்வேறு கழிவுகள் கலக்கின்றன. அங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் ஒரு பண்ணை உள்ளது. அது ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு சொந்தமானது. அதில் நூற்றுக்கணக்கான வெண்பன்றிகள், பசுமாடுகள், எருமைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் ஒட்டுமொத்த கழிவுகளும் மாயாற்றில்தான் விடப்படுகின்றன. அந்த ஆற்று நீரை அருந்தியதால்தான் முதுமலை முகாம் யானைகளும், இன்னும் சில வனவிலங்குகளும் சமீப காலமாக முதுமலையில் உயிரை விட்டுள்ளன.
அந்த பண்ணையாளர்களின் செல்வாக்கு சாதாரணமானதல்ல. அதை அப்புறப்படுத்தவோ கேள்வி கேட்கவோ முடியவில்லை அதிகாரிகளால். அதனால்தான் வளர்ப்பு யானைகள் முகாமை இடம் மாற்றியிருக்கின்றனர் என்றனர் இப்பகுதிவாசிகள். இதை வனத்துறை அதிகாரிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. யானைகள் ஏன் இறந்தன என்பதற்கு மட்டும் குடல்பகுதியில் ஏற்பட்ட நோய்தான் என்ற அளவோடு நிறுத்திக் கொண்டனர். இதன் பின்னணியில்தான் 2004 ஆம் வருடம் டிசம்பர் 18- தேதியன்று இரண்டாவது முறையாக கோயில் யானைகள் நல வாழ்வு முகாமை தொடங்கியது. ஏற்கனவே நடந்த இடத்தில்தான் இந்த முகாமும் நடந்தது.
என்றாலும் முந்தைய வருடம் 30 நாட்கள் மட்டுமே நடந்த நிகழ்வு இந்த முறை அது 48நாட்களாக நீடிக்கப்பட்டது. முந்தைய முகாமில் இடத்தைக் கொடுத்து மின்வேலி அமைத்து, டென்ட் அடித்து, மருத்துவ உதவிகள் செய்வது உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்ட வனத்துறையினரை, 'இந்த முறை நீங்கள் இடத்தை மட்டுமே கொடுங்கள்!' என ஒதுக்கிவிட்டது அரசு. இதைப் பார்த்து முதலில் அதிர்ந்தது முதுமலை சரணாலய அதிகாரிகள்தான்.
'முந்தைய சில ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு மழை அதிகம். காட்டு விலங்குகள் நடமாட்டமும் மிக அதிகமாக இருந்தது. அதனால் காட்டு விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருந்தது. தவிர தெப்பக்காட்டிலும் சூழல் சரியில்லை. வனத்துறை யானைகள் வளர்ப்பு முகாம் யானைகளுக்கே நோய்த் தொற்று தாக்கி பல பாதிப்புகள். அதனால் அவை இடம் மாற்றப்பட்டிருக்கின்றன. அது கோயில் யானைகளுக்கும் தொற்றினால் விளைவு விபரீதமாகி விடும். எனவே இங்கே கோயில் யானைகள் நல வாழ்வு முகாமை தவிர்ப்பதே நல்லது!' என மேலிடத்திற்கு தகவல்களை அனுப்பியுள்ளனர் முதுமலை சரணாலய அதிகாரிகள். அது எதுவுமே அங்கே எடுபடவில்லை.
மேலும், 'இது முதல்வரின் செல்ல திட்டம். இதற்கு ஏதாவது முட்டுக்கட்டை போட்டாலோ, நெகட்டிவ்வான விஷயங்களைச் சொன்னாலோ நம் பதவிக்கே பங்கம் வந்துவிடும்!' என உயர் அதிகாரிகளால் எச்சரிக்கையும் விடப்பட்டதாக வனத்துறையினர் மத்தியில் தகவல்கள் வந்தன. எனவே வனத்துறை அதிகாரிகள் யாவரும் மெளனியாகிவிட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகளே முன்னின்று பணியை ஆரம்பித்துள்ளனர். அதிலும் எடுத்த எடுப்பில் சிக்கல் வந்தது.
முந்தைய ஆண்டு கோயில் யானைகள் முகாமிற்காக போடப்பட்ட மின்வேலி ஒன்றரை கிலோமீட்டர் தூரம். அது அப்படியே காணாமல் போய்விட்டது. அந்த மின்வேலியை எடுத்த வனத்துறையினர், வனவிலங்குகள் பாதுகாப்புக்காக கோழிக்கரை என்ற இடத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்குப் போட்டுவிட்டிருந்தனர். மேலும் இந்த முறை புதிய மின்வேலி போட அறநிலையத்துறைக்கு வனத்துறை எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. தானாக போய் அறநிலையத்துறையினர் தேடிப்பிடித்து வந்த மின்வேலி அமைப்பவர்களிடமும் எதிர்பார்த்த தொழில்நுட்பங்கள் இல்லை.
பொதுவாக அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள் நுழைவதை தடுக்க முக்கியமான சில விஷயங்களை வரையறுத்து வைத்துள்ளது வனத்துறை. மின்வேலி போடுபவர்களு்கு 10 வருடங்கள் அனுபவம் இருத்தல் வேண்டும். குறைந்தது கடைசி மூன்று வருடங்களில் 200 கிலோமீட்டருக்கு மின்வேலி போட்டிருக்க வேண்டும். அது எந்த இடையூறும் இல்லாமல் செயல்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக அதில் கூடுதல் மின்சாரம் தாக்கி காட்டு விலங்குகள் ஏதும் இறந்திருக்கககூடாது. இதற்கென மாநில, மத்திய அரசுகளின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதுவெல்லாம் இல்லாத ஒரு மின்வேலி அமைப்பாளருக்கு அறநிலையத்துறை ஒப்பந்தம் கொடுத்திருக்க, அந்த மின்வேலி ஒப்பந்ததாரர் தகுதியில்லாதவர் என்பதை சுட்டிக்காட்டி முந்தைய வருடம் மின்வேலி போட்டவர் புகார் தெரிவித்து சி.எம்.செல் வரை அனுப்ப, யாருக்கு மின்வேலி கான்ட்ராக்ட் கொடுப்பது என்பதில் கட்டப்பஞ்சாயத்துகளும் நடந்தன.
இந்தப் பணியின் மதிப்பு வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்தான். ஆனால் இது மிக முக்கியமான பணி. வெறும் 12 வோல்ட் டி.சி மின்சாரத்தை 8 ஆயிரம் வோல்ட்டாக கன்வெர்ட் செய்து மின்வேலியில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இதில் மின்சாரம் விநாடிக்கு இத்தனை முறை என விட்டு விட்டு வரவேண்டும். அதில் கொஞ்சம் குளறுபடி ஏற்பட்டாலும் இந்த மின்வேலியில் சிக்கும் வனவிலங்குகளின் இதயம் நின்று உயிரிழப்பும் ஏற்பட்டு விடும். வோல்டேஜ் குறைவாக இருந்தாலும் ரொம்ப சுலபமாக வேலியை முறித்துக் கொண்டு விலங்குகள் உள்ளே நுழைந்துவிடும். குறிப்பாக முகாமிற்கு வரும் பெரும்பாலான கோயில் யானைகள் பெண் யானைகள்தான். அவற்றின் வாசத்திற்கு காட்டில் வாழும் ஆண் யானைகள் தேடி வரும். அப்படி வந்துவிட்டால் அவற்றை கட்டுப்படுத்துவது ரொம்ப சிரமம். அதை உத்தேசித்து மின்வேலி அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வலியிறுத்தி வந்தனர் வனத்துறை அதிகாரிகள்.
அதை அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டைசெய்யவில்லை. மற்ற விஷயங்களுக்கு எதுவும் ஒத்துழைக்காத போது இவர்கள் சொல்லும் ஒப்பந்ததாரர்களுக்கு எதுக்கு இந்த வேலையைத் தரவேண்டும் என்பது அவர்கள் எண்ணம்.
பதிலுக்கு வனத்துறையினரும், ''இடம் மட்டும்தான் நாங்கள் கொடுக்கிறோம். அதற்காக பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் கண்டுகொள்ளாது இருக்க முடியுமா? இங்கே காட்டு யானைகளுக்கும், கோயில் யானைகளுக்கும் மோதல் ஏற்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நாங்களும்தானே பதில் சொல்ல வேண்டி வரும். அதற்கு மேலே இவர்கள் 48 நாட்கள் இங்கே முகாம் அமைத்து விட்டு போய்விடுவார்கள். அதற்கு பிறகு இந்த முகாமினால் ஏற்பட்ட நோய்த்தொற்று உள்ளிட்ட சாதக பாதகங்களுக்கு நாங்கள்தானே அல்லாட வேண்டும்?'' என்ற கோபதாபத்துடனே பேசினர். இது நிழல் யுத்தமாகவே இவர்களுக்குள் நடக்க, அந்த ஆண்டு 48 நாள் கோயில் யானைகள் முகாமும் மேலும் பல சர்ச்சைகளை கிளறிக் கொண்டே நடந்து முடிந்தது.
இந்த காலகட்டத்தில் கோடநாட்டில் தங்கியிருக்கும் ஜெயலலிதா - சசிகலா வரப்போகிறார்கள். கேரள நம்பூதிரிகளை வைத்து ரகசிய கஜமோட்ச யாகம் நடத்தப்போகிறார்கள் என்றெல்லாம் பரபரப்பு கிளம்பிய வண்ணம் இருந்தது. அதனால் இந்த கோயில் யானைகள் முகாமின் நாட்களில் முதுமலை என்றைக்கும் இல்லாத சுறுசுறுப்புடனே இயங்கிக் கொண்டிருந்தது. கடைசி வரை அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக வனத்துறைக்கும், கால்நடைத்துறைக்குமான ஈகோ யுத்தம் மட்டும் விடாமல் நடந்து கொண்டிருந்தது.
அதாவது முந்தைய வருடம் இந்த யானைகள் முகாமை பார்க்க சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கில் வந்தனர். அவர்களெல்லாம் இலவசமாகவே முகாமிற்குள் நுழைந்தனர். ஆனால் 2004-ம் ஆண்டு முகாமில் முகாமிற்குள் வரும் பார்வையாளர்களுக்கு ரூ 10 போட்டு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர் அறநிலையத்துறையினர். இதைப் பார்த்த வனத்துறையினர் சும்மாயிருக்கவில்லை. அந்த ஏரியாவின் நுழைவுப் பகுதியிலேயே திடீர் சோதனைச்சாவடி அமைத்து தலைக்கு ரூ. 15 வசூல் செய்யத் தொடங்கினர். வனத்துறையினர் இடம் கொடுத்திருந்தாலும், அழைப்பிதழிலும், வரவேற்று வளைவுகள், பேனர்களில் அறநிலையத்துறை நடத்தும் புத்துணர்ச்சி முகாம் என்றே குறிப்பிட்டு வனத்துறையினரை கடுப்பேற்றினர் அறநிலையத்துறையினர்.
மின்வேலியில் ஏற்கெனவே நடந்த சர்ச்சையில் இறுதியில் மின்வேலி அமைத்தவர்களிடம் எனர்ஜைஸர் கருவியை பொருத்த கட்டாயப்படுத்தியது. அது அவர்களிடம் இல்லை என்றதும், அதை வனத்துறையே தருவித்து கொடுத்தது. அதை முன்வைத்து அறநிலையத்துறை பேனர்களுக்கு போட்டியாக, ''இந்த மின்மாற்றிக் கருவி உலகத்தரம் வாய்ந்தது. இது இந்திய வனத்துறை சான்றிதழ் பெற்றது. இப்படிக்கு தமிழக வனத்துறை!'' என்று பெரிய போர்டு வைத்து தங்களை ஆறுதல்படுத்திக் கொண்டனர்.
இந்த கூத்துகளையெல்லாம் பார்த்து, ''இவர்கள் யாவரும் கோயில் யானைகளுக்கு அக்கறையோடு புத்துணர்ச்சி முகாம் நடத்தவில்லை. யார் பெரியவர்கள் என்று ஒரு பக்கம் அதிகாரப் போட்டி நடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் கலெக்ஷன். 2003-ம் ஆண்டில் முகாமிற்காக அறநிலையத்துறை மட்டும் நாற்பது லட்சம் ரூபாய் செலவிட்டது. அதில் பெரும்பகுதி வனத்துறை மூலமே செலவிடப்பட்டது. அதனால் அதை ஒட்டி வனத்துறையினர் ஓரளவு கமிஷன் பார்த்தனர். அதில் நொறுங்கிப் போய்த்தான் அறநிலையத்துறையினர், 'நம்ம பணத்தில் அவங்க கமிஷன் பார்த்து கொழுப்பதா? நமக்கு நாமேதான் பார்க்க வேண்டும்?' என மேலிடத்தில் சொல்லி எல்லா வேலைகளையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள். முந்தைய வருடம் நாற்பது லட்சம் ரூபாய் என்றால் இந்த வருடம் தொகை ரூபாய் எண்பது லட்சமாக இரட்டிப்பாகியிருக்கிறது. அதுதான் இவர்களுக்குள் இவ்வளவு மோதல்!'' என வெளிப்படையாகவே பேசினர் அப்போது நாம் பார்த்த சூழல் ஆர்வலர்கள்.
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
