Last Updated : 21 Oct, 2017 10:13 AM

 

Published : 21 Oct 2017 10:13 AM
Last Updated : 21 Oct 2017 10:13 AM

பொன்விழா காணும் பொன்னிரை முருகையன் டீக்கடை!

‘எ

த்தனையோ டீக்கடைகளை பார்த்திருப்பீங்க.. ஆனா, எங்க ஊர் முருகையன் டீக்கடை மாதிரி வராது. ஒரு துளி பாலோ, டீத்தூளோ கீழ சிந்தாம சிரத்தையா அவர் டீ போடுவதே ஒரு தியானம் மாதிரி இருக்கும், அவரைப் பத்தி எழுதுவீங்களா?’ பொன்னிரை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் அய்யப்பன், ‘தி இந்து, இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படிக் கேட்டிருந்தார். முருகையனை பார்த்துவர பொன்னிரைக்குப் புறப்பட்டோம்.

திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரயில் மார்க்கத்தில் இருக்கிறது பொன்னிரை கிராமம். ஆலத்தம்பாடி ரயில் நிலையம் என்பது பெயர். ஆலத்தம்பாடி சுற்று வட்டாரத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இதுதான் டவுன். தொட்டது அத்தனைக்கும் இந்த கிராமங்களின் மக்கள் பொன்னிரையில்தான் வந்து விழ வேண்டும். அதனால் இங்கு டீக்கடைகளும் ஏராளம்.

இங்குள்ள முருகையன் டீக்கடைக்கு இது பொன்விழா ஆண்டு. இன்னமும் கீற்றுக் கொட்டகையில்தான் இருக்கிறது. டீப்போடும் மேடை மட்டும் மண் கட்டிலிருந்து சிமென்ட் கட்டாக மாறியிருக்கிறது. ஆனால், முருகையனுடைய டீயின் தரமும் சுவையும் கொஞ்சமும் மாறவில்லை. அதனால்தான் டீக்கடைகள் பல வந்தாலும் இவரது கடையை அசைக்க முடியவில்லை!

முருகையனின் கடையில் இன்றுவரை பாக்கெட் பாலை அனுமதித்ததில்லை. பசும்பாலில் மட்டுமே டீ போடுகிறார். “ஆயிரம் இருந்தாலும் பசுமாட்டு பால் மாதிரி வருமா.. பாக்கெட்ல வர்றது என்ன பால்னே தெரியாது. நம்ம கடையில பால் வாங்கி குடிக்கிற பச்சப் புள்ளைங்களுக்கு அதை கொடுக்கலாமா?” என்று அக்கறைப்படுகிறார் முருகையன்.

பாக்கெட் பால் புழக்கத்துக்கு வரும் முன்பு, பாலுக்கு கிராக்கி ஏற்பட்ட சமயத்தில், தானே முதல்போட்டு மாடு வாங்கி பலருக்கும் கொடுத்திருக்கிறார் முருகையன். அவர்களும் பசுமாட்டில் பாலைக் கறந்து முருகையன் கடைக்கு கொடுத்திருக்கிறார்கள். பாலுக்கான பணத்தில் மாட்டுக் கடன் கழிந்ததும் மாடு அவர்களுக்கே சொந்தமானது. இப்படி வெண்மைப் புரட்சி செய்த முருகையன், டீத்தூளிலும் தரம் பார்த்தே பயன்படுத்துகிறார். இவரது டீக்கடை, வாடிக்கையாளர்களை தக்கவைத்திருப்பதற்கு இதுவும் காரணம்.

அடுத்தது, முருகையன் டீ போடும் நேர்த்தி. எத்தனை பேர் வந்தாலும் எந்த அவசரமும் காட்டாமல் நிறுத்தி நிதானமாக டீ போடுகிறார். இவர் டீ போடுவதைப் பார்க்கையில் நாட்டியம் பார்ப்பது போல் இருக்கிறது. டீயை ஆற்றும்போது அத்துடன் சேர்ந்து மேலும், கீழுமாக முருகையனின் உடலும் ஆடுகிறது. டீயுடன் சேர்த்து இவரது ஆட்டத்தையும் ரசிக்கிறார்கள் மக்கள்.

64 வயதிலும் ஓய்வில்லை

“அப்பெல்லாம், டீ ஒரு அணா, ஒத்தை ரூபாய கண்ணுல பார்க்கிறதுக்கே பதினாறு டீ போடணும். மிக்சர் பொட்டலம், பிஸ்கட் பாக்கெட் எல்லாமே ஒரு அணா, பால் சேர் கணக்கு. ப்ரூக்பாண்ட் டீத்தூள்தான் அப்ப பிரபலம். பித்தளை அண்டாவுல பால் காஞ்சுக்கிட்டே இருக்கும். பொன்னிரை வாரவங்க என் கடைக்கு வந்து டீ சாப்பிடாம போகமாட்டாங்க. பக்கத்துல உள்ள எஸ்டேட் காரங்களும் ஆளனுப்பி டீ வாங்கிட்டுப் போவாங்க” என்று கடை வளர்ந்த கதை சொல்கிறார் முருகையன்.

இந்த டீக்கடைதான் முருகையனின் நான்கு மகள்களைக் கட்டிக் கொடுக்கவும், மூன்று மகன்களை ஆளாக்கவும் ஆதாரமாய் இருந்தது. என்றாலும், 64 வயதிலும் ஓய்வை நினைக்காமல் தனது மகன்களில் இருவரை துணைக்கு வைத்துக் கொண்டு இன்னமும் அழகாய்.. ஆனந்தமாய் டீ ஆற்றுகிறார் முருகையன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x