Published : 20 Oct 2017 10:03 AM
Last Updated : 20 Oct 2017 10:03 AM

ஜிமிக்கி கம்மல்: கொண்டாட்டத்துக்கு கூடுதல் அர்த்தம்

ற்ற தீபாவளிகளுக்கு மாறாக, இந்த ஆண்டின் தீபாவளி பல்வேறு சிக்கல்களால் உற்சாகம் குன்றியே காணப்பட்டது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பணப்புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்கள்.

பண்டிகை மனநிலையும் கொண்டாட்டங்களும் பெரும் மக்கள் கூட்டத்தினருக்கு சிறிய அளவு ஆசுவாசத்தையாவது தரக்கூடியவை. அந்த வகையில் கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தையும் கேரளத்தையும் கலக்கிவரும் ‘ஜிமிக்கி கம்மல்‘ பாடல், பண்டிகைக் கொண்டாட்ட மனநிலையை சற்றளவேனும் அதிகரித்திருக்கிறது.

மனிதக் கூட்டம் உழைப்பிலிருந்தே அனைத்தையும் கற்றுக்கொண்டது, வாழ்வது உட்பட. கடும் உடல் உழைப்பில் ஏற்பட்ட களைப்பைப் போக்கவும் மனதுக்கு உற்சாகம் தந்துகொள்ளவும் மனிதர்கள் ஆடிக் களித்தார்கள். பழங்குடிச் சமூகங்களின் கூடுகைகளில் அவரவர்க்கே உரிய பிரத்யேக ஆட்டத்தைப் பார்க்கலாம். வயல்களில் குனிந்தபடியே உழைத்துக் களைத்த பெண்கள், குனிந்து நிமிர்ந்து அசதியைப் போக்கிக்கொள்வதற்கு கும்மி, ஒயில் போன்ற ஆட்டங்களை மாலையிலும் விழாக் காலங்களிலும் ஆடினார்கள். நம் காலத்தில் உடல் உழைப்பைக் காணாமல் அடித்துவிட்டோம். ஆனாலும் மனதுக்கு உற்சாகம் தர நல்ல மெட்டு கொண்ட பாட்டைப் போலவே, உடலுக்கு உற்சாகமூட்ட ஆட்டமும் தேவைப்படுகிறது. இதற்கான வாய்ப்பை 'ஜிமிக்கி கம்மல்' போன்ற பாடல்கள் வழங்குகின்றன. ஆட மறந்த சமூகமாக வாழ்க்கையை நாம் கடத்திக்கொண்டிருந்தாலும், உடலுக்கும் மனதுக்கும் தொடர்ந்து உற்சாகம் ஊட்டவும் தூண்டுதல் தரவும் ஆட்டம் அவசியமாக இருக்கிறது.

செவ்வியல் இசை-நடனம், ஓவியம்-சிற்பம், உலக சினிமா போன்றவை மனதை ஆற்றுப்படுத்துகின்றன, புத்துயிர் அளிக்கின்றன, சிந்தனையை மேம்படுத்துகின்றன. ஆனால் அவற்றை ரசிக்கவும், அவற்றிலேயே ஆழ்ந்துபோகவும் தொடர் பயிற்சி தேவை. பெரும் மக்கள் கூட்டத்துக்கு அந்தப் பயிற்சி கிடைப்பது அத்தனை எளிதல்ல. அதேநேரம் எல்லா மனிதர்களும் இசைத் தேவை, ஆட்டத் தேவை மனதின் ஆழத்தில் பொதிந்து கிடக்கவே செய்கிறது. வெகுமக்களின் இந்தத் தேவைக்கும் ரசனைக்கும் எப்படித் தீனி போடுவது?

இந்தப் பின்னணியில் மெனக்கெடாமல் தாளம் போட வைக்கும் பாடல்கள், இயல்பாகவே ஆடவும் தூண்டுகின்றன. 'ஜிமிக்கி கம்மல்' இந்தத் திறன்களை தனக்குள் வைத்திருப்பதால்தான் இத்தனை பிரபலத்தை அடைந்துள்ளது. பெருமக்கள் கூட்டத்தை தன் பிடிக்குள் கொண்டுவந்துள்ளது. பொதுவாகப் பிரபலமாகும் அல்லது ஆக்கப்படும் பாடல்களில் இருக்கும் பெண்களை இழிவுபடுத்துதல், ஆபாசம் போன்ற அம்சங்கள் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலில் இல்லாதது அதை பல வகைகளில் தனித்துக் காட்டுகிறது. இந்தப் பாடலை வைத்து ‘வடிவேலு வெர்ஷன்’, ‘கவுண்டமணி வெர்ஷ’னில் ஆரம்பித்து ‘மோடி வெர்ஷன்’ வரை நெட்டிஸன்களும் கற்பனையைப் பறக்க விட்டிருக்கிறார்கள்.

பல்வேறு சமூகச் சிக்கல்களில் நாடு சிக்கித் தவிக்கும்போது, இப்படி ஒரு சினிமா பாடலே கதியாகக் கிடப்பதும், அதைப் பார்த்து கூட்டம் கூட்டமாக ஆடுவதும் அவசியமா என்ற கேள்விகளும் சில பக்கங்களில் இருந்து எழாமல் இல்லை. ஆனால், இத்தனை காலம் இசையும் ஆட்டமுமே மனித வாழ்க்கைக்கு கூடுதல் அர்த்தம் சேர்க்கவும் - அடிப்படை மனத் தேவைகளை பூர்த்தி செய்தும் வந்திருக்கின்றன. சமூகத்தில் நாளும் வளர்ந்துவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மனஉறுதியை நாம் இழக்காமல் இருக்கவும், அன்றன்றைக்குரிய பொழுதுகளை சிறிய உற்சாகத்துடன் கடத்தவும் பாடல்களும் ஆட்டமும் உதவும். 'ஜிமிக்கி கம்மல்' போன்ற பாடல்கள் அந்தத் தேவையை ஏதோ ஒரு வகையில் நிறைவு செய்கின்றன.

- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x