Published : 23 Oct 2017 03:01 PM
Last Updated : 23 Oct 2017 03:01 PM

யானைகளின் வருகை 61: திரும்பத் திரும்ப எதிர்ப்புகள்!

 

பல சாய, சலவை ஆலைகள் பார்த்துவிட்டோம். அமெரிக்கக் கழிவுகளை கப்பல் கப்பலாக கொண்டு வந்து சூழல் கேட்டை உருவாக்கிய ராட்சஷக் கம்பெனியின் அமிலத் தண்ணீரையும் சுவாசித்து விட்டோம். கேளிக்கை விடுதிகள், தீம் பார்க் விளையாட்டுப் பூங்காக்கள், வாட்ச் டவருடன் கூடிய தங்கும் விடுதிகள், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி பெரிய ஜீவன் என்றும் பாராமல் கொல்லும் வேளாண் உற்பத்தியாளர்களையும் கண்டுவிட்டோம். புதிய குடியிருப்புகள், வீட்டு மனைகள் உருவாக்கும் ரியல் எஸ்டேட் புள்ளிகளின் இடையூறுகள் என்னென்ன என்பதையும் பட்டியலிட்டு விட்டோம்.

விஸ்கோஸ் ஆலையில் புகுந்த திருடர்களும், அவர்கள் ஏற்படுத்தின விஷரசம் பவானியில் பாய்ந்த கோலங்களையும் மூக்கை உறிஞ்சி எரிச்சலுற்று விட்டோம். அதையும் தாண்டி வேலியே பயிரை மேய்ந்த கதையாக யானைகளின் வலசைப் பகுதிகளையே வளைத்து ஆராய்ச்சி மையம், கல்லூரியை ஏற்படுத்திய வனக்கல்லூரியையும் ஸ்பரிசித்து தெரிந்து கொண்டோம். இதனால் ஏற்பட்ட சுவாசக் கோளாறுகள், தலைமுறை நோய்கள், வாழ்வியல் இடைஞ்சல்கள் மனித குலத்திற்கு மட்டும்தான் என எண்ணிக் கொண்டால் அது தனிமனித சுயநலமேயன்றி வேறில்லை.

அது நம்முடன் வாழும் வீட்டு விலங்குகள், செல்லப் பிராணிகளுக்கும், காட்டில் வாழும் வனவிலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் அனுபவப்பூர்வ உண்மை. அதை அனைவரும் நீக்கமற, உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வனங்களையும் வனப்பகுதிகளையும் ஒட்டியிருக்கும் நிலங்களில் நடந்திருக்கும் சூழலியல் மாற்றங்களை அங்குலம் அங்குலமாக விவரித்து வருகிறேன். அதில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச் சரகங்களில் நடந்திருக்கும் மாற்றங்கள், அதனால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் சாதாரணமானதல்ல. இவற்றில் இங்கே முத்தாய்ப்பாக நிற்பது எது என்று பார்த்தால் ஆச்சர்யமாவீர்கள்.

அதுதான் மேட்டுப்பாளையத்தில் தமிழக அரசு கோயில் யானைகளை வைத்து நடத்திய நல வாழ்வு முகாம். ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் முதுமலையில் நடத்தப்பட்ட யானைகள் முகாம்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதற்கு சூழலிலயாளர்கள் 2003-ம் ஆண்டில் இது தொடங்கப்பட்ட போது எப்படியெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதைப் பற்றியும், அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலு வரை இது எப்படி அரசியல் ஆனது என்பதையும் பார்த்துள்ளோம்..

2006 தொடங்கி 2011 வரை திமுக ஆட்சியில் யானைகள் முகாம் நடக்கவில்லை. திரும்ப தான் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் முதுமலையில் கோயில் யானைகள் முகாமை ஜெயலலிதா அரசு நடத்தியது. அந்த ஆண்டும் கோயில் யானைகளை லாரிகளில் ஏற்றுவது, இறக்குவது, அவற்றை ஏற்றிக்கொண்டு மலைகளில் பயணிப்பது ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டி பிரச்சினைகள் எழுந்தன.

அதன் பிறகுதான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உள்ளிட்ட தேக்கம்பட்டிக்கு அந்த முகாமை கொண்டு வந்தார்கள். 2003 ஆம் ஆண்டில் மட்டுமல்லாது, அதற்குப் பிறகும் இதையொட்டி நடந்த பிரச்சனைகள், அரசியல், அதிகார விளையாட்டுகள், அதிலுண்டான சர்ச்சைகள் கணக்கிலடங்காது. அதில் நிறைய சூழல் பாதிப்புகள். இயற்கைக்கு ஒவ்வாத விஷயங்கள் நிகழ்ந்தேறின. அதற்குள் நுழைவதற்கு முன்பு முதுமலையில் நடந்த முகாம்களை ஒட்டிய நிகழ்வுகளைப் பார்த்துவிட்டுச் செல்வது அதை அடர்த்தியாக புரியவைக்கும்.

2003-ஆம் ஆண்டில் 55 யானைகளுக்கு 30 நாட்களும், 2004-ஆம் ஆண்டில் 65 யானைகளுக்கு 48 நாட்களும், 2005-ஆம் ஆண்டில் 63 யானைகளுக்கு 48 நாட்களும், 2011(டிசம்பர்)--2012 (ஜனவரி)--ம் ஆண்டில் 37 யானைகளுக்கு 48 நாட்களும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் இம்முகாம் நடந்தது. அதற்குப் பிறகுதான் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றின் கரையில் 2012 (டிசம்பர்)--13 (ஜனவரி)-ஆம் ஆண்டில் 35 யானைகளுக்கு 48 நாட்களும், 2013--14-ஆம் ஆண்டில் 52 யானைகளுக்கு 48 நாட்களும், 2014--15-ஆம் ஆண்டில் 30 யானைகளுக்கு 48 நாட்களும், 2015-16 ஆம் ஆண்டில் 32 யானைகளுக்கு 48 நாட்களும் இம்முகாம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு (2016-2017 ஆம் ஆண்டு) ஜெயலலிதா மரணம், ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக அதிகாரிகளே இந்த முகாமைத் தொடங்கி நடத்தி முடித்தனர்.

2003-ம் ஆண்டில் இம்முகாம் தொடங்கிய போது சூழலிலயாளர்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் வழக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு கடிதம் என வலம் வந்தோம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டித்தான் கோயில் யானைகளின் முதலாம் முகாம் முதுமலையில் நடந்து முடிந்தது.

அந்த வேகத்தில் ஐந்தாறு மாதங்களில் முதுமலை வனத்துறையின் வளர்ப்பு யானைகள் முகாமில் ராஜேஸ்வரி, சத்யன் என்ற இரண்டு யானைகள் உயிரை விட்டன. உடனே முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிலிருந்த மற்ற முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள் அனைத்தும் தற்காலிகமாக அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அபயாரண்யம் பகுதிக்கு மாற்றப்பட்டன.

''இங்குள்ள பல யானைகளுக்கு தொடர்ச்சியாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வருகிறது. அதனாலேயே அநியாயமாக ஆரோக்கியமாக இருந்த யானைகள் திடீர் நோய்வாய்ப்பட்டு இறந்தன. இன்னும் சில யானைகள் கூட இறந்து விடும் அபாயம் உள்ளது. அந்த அளவுக்கு அவற்றை ஒரு வித மர்ம நோய் தாக்கியுள்ளது. இது அண்மையில் நடந்த கோயில் யானைகள் நல வாழ்வு முகாமினால் ஏற்பட்ட நோய்த் தொற்றாகக் கூட இருக்கலாம்!'' என்பது அப்போது கூடலூர் தன்னார்வலர்களின் பேச்சாக இருந்தது..

''ஏற்கெனவே நடந்த கோயில் யானை முகாமை நடத்த அறநிலையத்துறை, கால்நடைத்துறை ஒத்துழைத்தாலும், வனத்துறை அதற்கு அவ்வளவு சுலபமாக ஒத்துழைக்கவில்லை. ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டம், அதிலும் அவர் நேரடியான உத்தரவு என்பதாலேயே அவர்களால் வாய்திறக்க முடியவில்லை.

என்றாலும், 'கோயில் யானைகள் வெவ்வேறு ஊர்களிலிருந்து வருபவை. அவை மனிதர்களின் பழக்கவழக்கத்தை மட்டுமல்ல, உணவுப் பழக்கத்தையும் கற்று வைத்திருக்கின்றன. அத்துடன் மனிதர்களைப் போலவே டயாபடீஸ், சயரோகம், காசநோய்கள் அவற்றுக்கும் உண்டு. அவற்றை இங்கே காட்டில் கொண்டு வந்து வைத்தால் அதன் நோய்த் தொற்று எளிதில் காட்டு விலங்குகளுக்கு மட்டுமல்ல; வனத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் யானை முகாமில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கும் பரவி விடும். எனவே கோயில் யானைகளை இங்கே நடத்தலாகாது!'' என என்ஜிஓக்கள் மீடியாக்கள் மூலம் அதிகாரிகளுக்கு மறைமுகமாக எதிர்ப்பு குரல் கொடுத்துப் பார்த்தனர்.

சி.எம்மின் ஸ்பெஷல் ஸ்கீம் என்பதால் இந்தக் குரலை மற்ற துறை அதிகாரிகள் சட்டை செய்யவேயில்லை. விடாப்பிடியாக கோயில் யானைகள் முகாமை நடத்தி முடித்ததால்தான் இங்கே நோய்த்தொற்றுகள் கிளம்பி விட்டன. இந்த யானைகள் மட்டுமல்ல; இன்னும் பல யானைகள் இறக்கலாம்!'' என்பது வனத்துறை ஊழியர்களின் சலசலப்பாக அமைந்தது.

இன்னொரு பக்கம், ''இங்கு யானைகள் பராமரிக்கும் மாவுத்தன்கள் சரிவர யானைகளை கவனிப்பதில்லை. அவற்றுக்கு உரிய மருத்துவப் பரிசோதனையோ, சிகிச்சையோ அளிப்பதில்லை.அதனாலேயே யானைகளின் வயிற்றில் கீரிப்புழுக்கள் (Tap warms) நிறைந்து விட்டன. தவிர யானைகளுக்கு கொடுக்கப்படும் களியுருண்டைகளும், இன்னபிற உணவு வகைகளும் மோசமானவையாகவே இருக்கின்றன. இதை டெண்டர் எடுத்தவர்கள் தரமற்ற உணவுப் பொருள்களையே சப்ளை செய்கின்றனர். அதற்காக வனத்துறை அலுவலர்கள் கமிஷன் பெறுகின்றனர். அப்படிப்பட்டச் சாப்பிட்டே யானைகள் உயிர் விட்டுள்ளன!'' என்ற கருத்துகளும் பொதுமக்கள் மத்தியில் உருண்டது.

கூடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அப்போது பேசும்போது, ''இங்கே யானைகள் மரணத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால், எப்போதுமே வனத்துறை உண்மையை வெளியிடுவதில்லை. இப்போதும் அதேதான் நடக்கிறது. இங்கே ஒரு டாக்டர் இருக்கிறார். அவருக்கு கால்நடைகளைப் பற்றித்தான் தெரியும். யானைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவருடன் ஒரு கம்பவுண்டர் இருந்தார். அவர்தான் இங்கே ரொம்ப காலமாக ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக இருந்தார். அவரை ஒரு மாதம் முன்புதான் வேறு இடத்திற்கு மாறுதல் செய்தார்கள். அதன் பின்பு சத்யன் யானை உயிருக்குப் போராடிய போது கூட இங்கிருந்த மருத்துவருக்கு வைத்தியம் பார்க்கத் தெரியவில்லை. அது இறப்பதற்கு முன் உள்ளூரிலுள்ள பல மருத்துவர்களைக் கூப்பிட்டுத்தான் வைத்தியம் பார்க்க கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒரு வனத்துறை யானைகள் வளர்ப்பு முகாமில் ஒரு மருத்துவரே இந்த அளவுக்குத்தான் என்றால் மற்றவை எப்படியிருக்கும்?'' என உணர்ச்சி பொங்கினர்.

இந்த விவகாரமும் இதில் உள்ளெழுந்த சர்ச்கைளும் உள்ளூர் உளவுத்துறை மூலம் மேலிடம் வரை சென்றது. ஆனால் இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது. எனவே இந்த முறை கோயில் யானைகள் முகாம் இங்கே நடக்காது என்றே பேசிக் கொண்டனர் வனத்துறையினர். இந்த விவகாரம் செய்தியும் ஆனது. தொடர்ந்து, 'உயிர்ச்சூழல் மண்டலமான முதுமலையில் கோயில் யானைகள் முகாம் இனிமேல் நடத்தக் கூடாது!' என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து போராடவும் செய்தனர். என்றாலும் விட்டேனா பார் என்று 2004-ம் ஆண்டிலும் யானைகள் முகாம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது மட்டும் அமைதியாக முகாம் நடந்ததா என்றால் இல்லை. அது ஆரம்பிக்கும் முன்பே யானைகளுக்கான மின்சார வேலி அமைக்கும் விவகாரம் புதிய பிரச்சினையாக வடிவெடுத்தது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x