Published : 01 Sep 2017 10:57 AM
Last Updated : 01 Sep 2017 10:57 AM

வைஷாலி மறுபிறவி எடுத்த உண்மைக் கதை... 4: கைகளைக் கூப்பிச் சொன்ன முதல் வார்த்தை - ‘சுக்ரியா’

கு

ஜராத்தி மண்டல் தோழர்களின் அரவணைப்பில் வைஷாலி மற்றும் குடும்பத்தினரின் நாட்கள் விரைவாக நகர்ந்தன. அறுவை சிகிச்சைக்கான நாள் குறிப்பதற்காக அவர்களோடு சேர்ந்து நாமும் காத்திருந்தோம்.

ஜூலை 8, சனிக்கிழமை...

மருத்துவர் பாலாஜியின் உதவியாளர் தனலட்சுமி தொலைபேசியில் அழைத்தார். ''ஜூலை 10-ம் தேதி அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தாகி விட்டது'' என்றார். 9-ம் தேதி வைஷாலி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாளும் விடிந்தது...!

ஜூலை 10, திங்கட்கிழமை...

அந்த விபரீத விபத்தில் வைஷாலி சிக்கிய பின்பு ராஜ்கோட், அகமதாபாத், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவை எதுவுமே வெற்றி பெறாமல் போனதால்தான், வாய்ப்பகுதி இறுகி, முழுவதுமாக மூடியிருந்தது. இப்போது இந்த அறுவை சிகிச்சை நல்லபடி பலன் தருமா என்ற கவலை வைஷாலியின் தாய்க்கும், சகோதரருக்கும் எழுந்ததில் வியப்பில்லை. கண்களை மூடி பிரார்த்தித்தபடியே இருவரும் அமர்ந்திருந்தனர்.

அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது வைஷாலியின் அம்மா தன் பையில் இருந்து ஒரு புகைப்படத்தைக் கையில் வைத்து நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து, கட்டுப்படுத்த முடியாமல் நீர்த் துளிகள் வழிந்துகொண்டே இருந்தன. என்ன படமென்று அருகில் நெருங்கிப் பார்த்தேன். அது விபத்துக்கு முந்தைய வைஷாலியின் புகைப் படம்.

அங்கிருந்த ஒரு செவிலியரும் இதைப் பார்த்துவிட்டு, ‘’ஆபரேஷன் பண்றாங்களே... அந்தப் பொண்ணாம்மா இது? பளிச்சுனு எப்படி பூப்போல இருந்திருக்கு பாருங்களேன். இந்த போட்டோவைப் பார்க்கறப்ப, இரக்கமே இல்லாத அந்த ஆக்ஸிடெண்ட் மேலே ஆத்திரம் ஆத்திரமா வருதும்மா” என்று குமுறினார்.

அறுவை சிகிச்சை முடிந்து, ஆபரேஷன் தியேட்டர் கதவு திறக்கப்பட்டது. மருத்துவர் பாலாஜி புன்னகையுடன் வெளியே வந்தார். 'சக்ஸஸ்' என்றன அவரைப் பின்தொடர்ந்து வெளியில் வந்த மருத்துவக் குழுவினரின் முகங்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் மயக்க மருந்து அளிப்பதே பெரும் சவால் என்று மருத்துவர் பாலாஜி கூறியிருந்தார். பொதுவாக வாய்ப் பகுதியில் எந்த ஆபரேஷன் என்றாலும் மூக்கு வழியாகவும், மூக்குப் பகுதியில் சிகிச்சை என்றால் வாய் வழியாகவும்தான் அனஸ்தீஷியா அளிக்கப்படும். ஆனால் வைஷாலியைப் பொருத்தவரை மூக்கு வழியாக மயக்க மருந்தைச் செலுத்தினாலும், வாயோடு சேர்த்து தொண்டையிலும் அவருக்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக, சுவாசப் பிரச்சினை ஏற்படும் ஆபத்து இருக்கிறது” என்று முன்கூட்டியே நம்மிடம் சொல்லப்பட்டிருந்தது.

அதனால், 'ட்ரக்கியாஸ்டமி' செய்து, அதன் வழியேதான் அனஸ்தீஷியா கொடுக்கப் போவதாக மருத்துவர் பாலாஜி சொல்லியிருந்தார்.

தன் இருக்கைக்குச் சென்று ஆசுவாசமாக அமர்ந்த பாலாஜியிடம், ‘’எல்லாம் திட்டமிட்டபடியே நடந்ததா, டாக்டர்?” என்றோம் ஆர்வமாக. நடந்ததை சுருக்கமாக விளக்கினார். அதாவது...

'ட்ரக்கியாஸ்டமி' முறையில், தொண்டைப் பகுதியில் துளையிட்டு, மூச்சுக்குழல் வழியாக மயக்க மருந்து செலுத்தப்பட்டது. சற்றே பிசகி மூச்சுக்குழலுக்கு அருகில் இருக்கும் உணவுக்குழலில் மயக்கமருந்து சென்றுவிட்டால் வேறுவிதமான ஆபத்து ஏற்படும் சூழலும் இருந்தது. மயக்கவியல் நிபுணரின் துல்லியமான செயல்பாட்டால், அனஸ்தீஷியா மிகச் சரியாக அளிக்கப்பட்டது. அதுவே இந்த சிகிச்சையின் முதல் வெற்றி!

அடுத்தகட்டமாக வாயைத் திறந்து மூடச் செய்வதற்கான படலம்! வைஷாலியின் வாய் மேல் அண்ணப்பகுதி விபத்தில் முற்றிலுமாக நொறுங்கி, பெரிய வெற்றிடம்தான் அங்கே இருந்தது. இதற்கு முன்பு நடந்த சிகிச்சைகளின் பக்க விளைவால் அப்பகுதி முழுவதும் ரத்த ஓட்டத்தை இழந்திருந்தது.

அதுமட்டுமல்ல... இதற்கு முன் மற்ற மருத்துவமனைகளில் வைஷாலி உடலின் வேறு வேறு பகுதிகளில் இருந்து சதையை எடுத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் தோல்வியில் முடிந்திருந்தன. இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட மருத்துவர் பாலாஜி, வைஷாலியின் கன்னத்தில் உள்ள சதையை எடுத்து, அதை வாயின் உள்பகுதியில் வைத்துத் தைத்தே இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டார்.

''மயக்கம் தெளிந்து இரவுக்குள் அந்தப் பெண் விழித்து விடுவாள். நாங்கள் அளிக்கும் பயிற்சியால் நாளை முதலே கொஞ்சம் கொஞ்சமாக வாயைத் திறக்க முடியும்'' என்று டாக்டர் சொன்னபோது, நம்மையும் அறியாமல் கைகள் அவரை நோக்கிக் குவிந்தன.

சிரித்தபடியே...

''நன்றியை உங்களுக்குப் பக்க பலமாக நிற்கும் வாசகர்களுக்குச் சொல்லுங்கள். நான் சவாலான இந்த ஆபரேஷனை, காசு பணம் வாங்காமல் செய்து கொடுக்க முன்வந்ததே, நானும் 'தி இந்து'வின் ஒரு வாசகன் என்பதால்தான்'' என்றார்.

சொன்னபடியே, மறுநாள் காலை நாம் போனபோது, வைஷாலியால் வாயைத் திறந்து மூட முடிந்தது. ''அறுவை சிகிச்சையின் காயங்கள் ஆறி, தையல் கூடுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். வாய் மற்றும் மூக்குப் பகுதி இயல்பான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கழுத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ட்ரக்கியாஸ்டமி குழாயை அகற்றுவோம்'' என்றார் அருகில் இருந்த செவிலியர்.

ராஜ்கோட் விபத்தின் போது வைஷாலியின் இடது கண்ணில் வெற்றிடம் உண்டானதால், அந்தக் கண் தானாகவே மூடிக்கொண்டது. இதனால் முக அமைப்பு மாறியிருந்தது. அதனை ஓரளவு இயல்பான நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இடது கண்ணில் ஏற்பட்டிருந்த பள்ளத்தைச் சரிசெய்ய சிலிகன் பயன்படுத்தப்பட்டது. அதற்குமேல் செயற்கைக் கண் பொருத்தப்பட்டது. பார்வை இன்னும் வராவிட்டாலும், செயற்கைக் கண் மூலம் முகத்தில் இயல்பு நிலை ஓரளவு திரும்பியிருந்தது.

ஜூலை 14, வெள்ளிக்கிழமை...

வைஷாலியின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ட்ரக்கியாஸ்டமி குழாய் அகற்றப்பட்டது. படுக்கையிலிருந்து முழு உற்சாகத்துடன் எழுந்து வைஷாலி அமர்ந்திருக்க... இதுவரை பார்த்திராத ஒரு பளீர் புன்னகையுடன் அவருடைய அம்மா! குஜராத் மண்டலைச் சேர்ந்த நரேந்திராவும் நம்முடன் வந்திருக்க...

''என் பொண்ணு சீக்கிரமே நல்லா ஆயிடுவா...'' என்று சந்தோஷக் கண்ணீரும் சிரிப்புமாக நெகிழ்ந்தார் அந்தத் தாய்.

''வாயில் உள்ள திசுக்களில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து இயக்கம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வாய் மீண்டும் மூடிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனால் அறுவைசிகிச்சை முடிந்து குணமாகும் காலம் (Healing Period) வரை பிஸியோதெரபி சிகிச்சை தருகிறோம். இதன் மூலம் வாயை இயல்பாக அசைக்கப் பயிற்றுவிக்கிறோம்'' என்று விளக்கினார்கள் மருத்துவர்கள்.

ஆகஸ்ட் 16, புதன்கிழமை...

அன்று காலை நாம் மருத்துவமனைக்குள் நுழைவதற்காகவே காத்திருந்தாற்போல், வேக வேகமாக எதிரில் ஓடி வந்தார் வைஷாலியின் தாய். முகம் கொள்ளாத பூரிப்புடன், ''பதிமூணு மாசத்துக்குப் பிறகு அவ பேச ஆரம்பிச்சிட்டா... உங்களைப் பார்த்து முக்கியமா ஏதோ சொல்லணுமாம்” என்றார். நம்மைப் பார்த்ததுமே மகிழ்ச்சியின் உச்சத்தைக் காட்டிச் சிரித்த வைஷாலி, தன் கைகளைக் கூப்பிச் சொன்ன முதல் வார்த்தை - 'சுக்ரியா'!

நாமும் பதிலுக்குச் சிரித்து, ''நன்றி சொல்ல இன்னும் நேரம் இருக்கு. இதோட உன் சிகிச்சை முடியலை. எத்தனை நாளைக்கு வயித்துல குழாய் வச்சு ஜூஸ் குடிக்கிறது. எங்களை மாதிரி நீயும் வாயால ருசியா சாப்பிட வேணாமா?'' என்றோம்.

ஆம், அடுத்து எங்கள் மூத்த நிருபர் கண்ணன் பொறுப்பெடுத்துச் செய்ய வேலை காத்திருந்தது.

- பயணம் தொடரும்...

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x