Published : 07 Sep 2017 10:09 am

Updated : 07 Sep 2017 10:09 am

 

Published : 07 Sep 2017 10:09 AM
Last Updated : 07 Sep 2017 10:09 AM

நெடிதுயர்ந்து நிற்கும் நடுகல்.. தெய்வமாய் வணங்கும் மக்கள்..!

தி

ருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ளது குமரிக்கல்பாளையம். இங்கே, வீரன் ஒருவனுக்காக நடப்பட்ட மிக உயரமான நடுகல் ஒன்று கம்பீரமாய் காட்சிக்கு நிற்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நடுகல்லை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் குமரிக்கல்பாளையத்து மக்கள்!


வீரனுக்காக வைக்கப்பட்டது

பொதுவாக நம் மக்களிடத்தில், இறப்புக்குப் பின்பும் ஆன்மா உயிர் வாழ்வதாக ஒரு நம்பிக்கை இருக் கிறது. இன்றைக்கு நேற்றல்ல.. காலங்காலமாக உலகம் முழுவதுமே இந்த நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான், முன்னோரை வழிபடும் வழக்கமும் தொடர்கிறது.

அந்தக் காலத்தில், ஒரு இனத்துக் காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ தங்களது உயிரைத் தியாகம் செய்யும் வீரனுக்கு நடுகல் வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது. போரில் வீரமரணம் அடையும் தளபதிகளுக்கும்கூட இப்படி நடுகல் வைத்து கவுரவிக்கும் வழக்கம் மன்னர் காலத்தில் இருந்தது.

இந்த நடுகல்லும் அப்படியொரு வீரனுக்காக வைக்கப்பட்டதுதான் என்கிறார் திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் பொறியாளர் சு.ரவிக்குமார்.

இதுகுறித்து இன்னும் கூடுதலான தகவல்களை நமக்குத் தந்த அவர், “தன் இனத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரனுக்காக எழுப்பப்பட்ட நினைவுக் கல் தான் இது. நீத்தார் நினைவாக இப்படி நடுகற்கள் வைத்து நினைவுச் சின்னம் எழுப்பும் காலத்தை பெருங்கற்படைக்காலம் என தொல்லியல் அறிஞர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

ஒரு சமூகமே சேர்ந்து..

தமிழகத்தில் கி.மு. ஆயிரத்திலிருந்து கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை பெருங்கற்படைக்காலம் இருந்திருக்கிறது. சுமார் 10 முதல் 15 டன் எடை வரை இந்த பெருங்கற்படைச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நடுகல்லானது தரைக்கு மேலே 35 அடி உயரத்திலும் தரைக்குக் கீழே 10 ஆடி ஆழத்திலும் உள்ளது எனவே, இது நிச்சயம் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டிருக்க முடியாது. ஒரு சமூகமே சேர்ந்து இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியிருக்க வேண்டும்” என்றார்.

தொல்லியல் துறை உதவி இயக்குநர் (ஓய்வு) இரா.பூங்குன்றனிடம் இந்த நடுகல் குறித்துக் கேட்டோம். “இலக்கியங்களில் நெடுங்கல் என்று சொல்லப்படுவதுதான் நடுகல் என மருவிவிட்டது. குமரிக்கல்பாளையத்தில் ஏற்கெனவே, ஏராளமான முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அந்தப் பகுதியானது அக்காலத்தில் பெரிய ஈமக்காடாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம்..

இறந்தவர்களுக்கு நடுகல் எழுப்பும் வழக்கம் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது. யாராவது இறந்து போனால், செயற்கை மலைக்குகை மற்றும் பெரிய கல் எழுப்பி, அங்கே ஆண்டுதோறும் அவர்களது நினைவாக படையலிட்டு வணங்கும் வழக்கம் ஆஸ்திரேலிய பழங்குடிகளிடம் இருக்கிறது. அதுபோல, இனத்துக்காக வாழ்ந்து மடிந்த, ஒரு மாவீரனின் ஆன்மாவானது கல்லில் தங்கியிருக்கும் என்கிற நம்பிக்கையில் இந்தக் கல்லை தொன்மையான தமிழ்ச்சமூகம் அன்றைக்கு எழுப்பியிருக்கும்” என்கிறார் பூங்குன்றன்.

இறந்தவர்களை வழிபட்டு அவர்களின் ஆன்மாவை குளிர்வித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நம் மக்களிடமும் இருக்கிறது. அத்தகைய நம்பிக்கையில் தான் குமரிக்கல்பாளையத்து மக்கள் இந்த நடுகல்லின் அடியில் சப்தகன்னியர் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.

கல் குவாரிகளால் ஆபத்து

இதுகுறித்துப் பேசிய அந்த மக்கள், ”சில வருடங்களுக்கு முன்பு, இந்த நடுகல்லின் தலைப்பகுதியில் 4 அடி அளவுக்கு உடைந்து கீழே விழுந்துவிட்டது. உடைந்து விழுந்த பகுதியையும் பாதுகாத்து வழிபட்டு வருகிறோம். நடுகல் இருக்கும் பகுதியைச் சுற்றி மூன்று கல் குவாரிகள் இருக்கு. அங்கெல்லாம் பாறைகளை உடைப்பதற்காக வைக் கப்படும் அதிகப்படியான வெடிகளால் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அடையாளச் சின்னத்தில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளது. கல் குவாரிகளால் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுத்துஇந்த நடுகல்லைப் பாதுகாக்க வேண்டும்” என்று சொன்னார்கள்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x