Published : 17 Sep 2017 03:05 PM
Last Updated : 17 Sep 2017 03:05 PM

யானைகளின் வருகை 37: மாங்கரையில் அமைந்த பறவைகள் ஆராய்ச்சி மையம்

 

1992 ஆம் ஆண்டிலிருந்து மாங்கரைக்கு மேலே செயல்படுவதுதான் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம். பறவைகள் ஆராய்ச்சிக்கென்றே நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரே மையம். இங்கே இருப்பது இந்த சுற்றுப்பகுதிவாசிகளுக்கே தெரியாமல் இருந்தது என்பது நான் அங்கே போய் விசாரித்த போதுதான் தெரிந்தது. 'காடாறு மாதம்; நாடாறு மாதம்' என்பதெல்லாம் நாம் விக்கிரமாதித்தன் கதைகளில்தான் படித்திருப்போம்.

ஆனால் உண்மையிலேயே இந்த ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் வாழ்க்கையை அவர்களுடன் பேசியதில் அப்படித்தான் உணர முடிந்தது. இன்றைக்கு விதவிதமான பறவைகளை பற்றி விதவிதமான கானுயிர்களை பற்றி நம் தமிழகத்தில் வீதிக்கு ஒருவர் தன்னார்வலர், இயற்கை ஆர்வலர் என்ற பெயரில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு சந்தித்த விஞ்ஞானி ரவிசங்கரன், 'Bengal florical' எனும் அபூர்வப் பறவை ஆராய்ச்சிக்காக மட்டும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் காடுகளில் தலா ஆறு மாதங்கள் அலைந்ததை கேள்விப்பட்டு அதிசயித்தேன். தாம் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்த ஏழு வருடங்களில் (20 ஆண்டுகளுக்கு முன்பு) ஆறு வருடங்கள் அந்தமான் நிகோபார் தீவுகளிலேயே காலங்கழித்துள்ளார் என்பதும் கூடுதல் ஆச்சர்யப்பட வைத்தது.

''அந்தமானில் அழிந்து வரக்கூடிய பறவை இனம் நிறைய இருக்கிறது. அங்கே 'மெகாபோட்' என ஒரு பறவை. பெரிய, பெரிய கால்களை உடையது. அது முட்டையிடுவது படுசுவாரஸ்யமாக இருக்கும். மணல் பரப்பை இரண்டு மீட்டர் உயரத்திற்குக் கால்களால் பறித்து உயர்த்தும். அதற்குள் இலை தழைகளை போட்டு முட்டையிட்டு மூடி வைத்து விடும்.. இரண்டு, மூன்று பறவைகளை உதவிக்கு கூட்டி வைத்துக் கொண்டே இதை செய்யும். இலை, தழைகளின் உஷ்ணத்தில் முட்டை பொறிந்து தானே குஞ்சு வெளியே வந்து விடும்.

அதேபோல் 'எடிபில் நெஸ்ட் ஸ்விப்லெட்' என்ற பறவை. தன் எச்சிலையே துப்பித் துப்பி வெண்சங்கு போல் உருவாக்கி கூடுகட்டி முட்டையிடும். அவை தவிர்த்து 'அந்தமான் டீல்' 'மலபார் ஜெயிண்ட்' போன்ற அங்குள்ள பறவைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. காணக்கிடைக்காத அற்புதங்கள். அவை பெரும்பாலும் அழிந்து வருவது வேதனையானது!'' என அந்த ஆராய்ச்சியாளர் சொன்னது எல்லாமே பிரமிப்பு ஊட்டக்கூடியவையாக இருந்தன.

இந்த பறவை விஞ்ஞானி மட்டுமல்ல, இவரைப் போலவே இங்கே இருந்த மேலும் 10 விஞ்ஞானிகளும் பறவைகள் குறித்தே பேசினர். பறவைகளின் மூலம் காடுகள் பெருக்கம், காடுகள் பெருக்கத்தால் கானுயிர் பெருக்கம், கானுயிர் பெருக்கத்தால் ஏற்பட்ட சூழலியல் மேம்பாடு, அதனால் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி, அதை மனிதன் தன்னலத்திற்காக அழித்து வரும் அபாயம் பற்றியெல்லாம் கொத்துக் கொத்தாக ஆராய்ச்சி செய்து வைத்திருந்தார்கள் அவர்கள்.

பொதுவாக பறவைகளில் பெரும்பாலானவை தங்களுக்கு புகலிடமாகத் தீவுகளையே தேர்ந்தெடுக்கின்றன. அதிலும் அபூர்வப் பறவைகள் பல தீவுகளிலேயே தங்கி விட்டவை. அங்குதான் அவற்றால் சுதந்திரமாக உலா வர முடிந்திருக்கிறது. எப்போது மனிதன் தீவுகளிலும் தன் காலடியை பதித்தானோ, அப்போதே அவற்றுக்கு ஆபத்தும் வந்து விட்டது. மனிதனிடமிருந்தும், அவன் வளர்த்த, அவன் கொண்டு வந்த மிருகங்களிடமிருந்தும் தப்பிக்க தெரியாமல் பறவையினங்கள் அழிந்தே இருக்கின்றன.

ஒரு முறை அந்தமானில் இருக்கும் மரங்களை வெட்டிக் கொண்டு வர யானைகளை கொண்டு போன மனிதன் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் யானைகளை அங்கேயே விட்டுவிட்டு திரும்பி வந்துவிட்டான். அங்கே யானைகள் புகுந்த கதை இது என்றால், அந்த யானைகளின் காலடியில் சிக்கி குறிப்பிட்ட பறவைகள் அழிந்த விதமும் தனி. அதாவது ஒரு காலத்தில் நாடு விட்டு நாடு சுற்றி வந்த பறவைகள் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளில் தமக்கு அபரிமிதமாய் தனக்கான இரை (மீன்கள்) கிடைப்பதை அறிந்து அங்கேயே தங்கி விட்டன. கொத்துக்கொத்தாய் உட்கார்ந்த இடத்திலேயே கிடைத்தது இரை. அங்கேயே நல்லதாக கூடு கட்டி வாழ ஏதுவாய் மரங்கள். ஒரு கட்டத்தில் அவற்றுக்கு இரைக்காகவோ, கூடுகட்டவோ பறக்கவே வேண்டியதில்லாத சூழ்நிலை உருவாக அங்கேயே தங்கி விட்டன.

இப்படியே இதன் வம்ச விருத்தி ஆக, அவற்றின் குஞ்சுகளுக்கு பறக்கும் வித்தையே மறந்து போனது. அந்த நேரத்தில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் அந்தமான் தீவுக்கு சிறையை கொண்டு வந்தது. அதன் மூலமாக மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் வாயிலாக, குதிரைகள், மாடுகள், யானைகள் வந்தன. இவற்றின் திடீர் வருகையால் இங்கே குவிந்திருந்த அந்த இடத்தையே வாழ்வியல் தலமாக கொண்டிருந்த பறக்க மறந்த பறவைகள் படாதபாடு பட்டன. திடீர் என வந்திறங்கின இந்த எதிரிகளிடமிருந்து தப்பிக்க அவற்றுக்கு பறக்கத் தெரியவில்லை. அவற்றின் காலடியில் சிக்கியே பெரும்பாலானவை நசுங்கி மடிந்தன என்பதெல்லாம் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சம்பவங்கள்.

 

ஒவ்வொரு பறவையினங்களும் அழிந்து வரும் அபாயம் கருதியே இவர்கள் தங்கள் ஆராய்ச்சி மையத்தில் ஒரு பறவையை கூடப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை. நான் அப்போது இங்கே பார்த்தபோது கூட மருந்துக்கு கூட ஒரு பறவை கூண்டிற்குள் வைத்து ஆராய்ச்சி செய்யப்படவில்லை. எந்த ஆராய்ச்சியானாலும், விஞ்ஞானிகள் நேரம் காலம் பார்க்காமல் காட்டுக்குள் சென்று, அதற்கு இம்சை எதுவும் கொடுக்காமல் ஆராய்ந்து வந்த தீஸிஸ் தயாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அதிலும் மொத்தமிருந்த 11 விஞ்ஞானிகளில் மூவர் மட்டுமே முழுமையான பறவை ஆராய்ச்சியில் இருந்தார்கள். மீதமுள்ள எட்டு பேர் பறவைகளோடு, பறவைகள் சார்ந்த பிற விஷயங்களை ஆராய்ந்து வருவதாக கூறினார்கள்.

பறவைகள் சார்ந்த விஷயங்கள் என்றால்?

பறவைகள் மூலம் காடுகள் எப்படிப் பெருகின? அதனால் வனவிலங்குகளும், சிறு விலங்குகளும், ஊர்வனமும், சூழலும், மழையளவும், ஆறுகளும் எப்படியெல்லாம் பரிமாணம் கொண்டன. அவற்றின் ஒன்றோடொன்றான இயக்கங்களும், அழிவுகளும் எப்படியெல்லாம் நிகழ்கின்றன. அதைக் காப்பாற்றிட இச்சமூகம், இந்த அரசு என்ன செய்ய வேண்டும்? போன்றவை குறித்த விரிவான ஆராய்ச்சி வெளிப்பாடுகள் அதில் இருந்தன.

இவர்களின் ஆராய்ச்சியும், புள்ளி விவரங்களும் முழுக்க, முழுக்க வனத்துறைக்கே அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர். ஒரு பகுதியில் வனங்களின் அடர்த்தி எவ்வளவு? அவை எவ்வளவு குறைந்துள்ளது? அதற்கு காரணம்? தடுப்பதற்கான பரிந்துரை. யானைகள் மற்ற வனவிலங்குகள் வரத்து எவ்வளவு? அழியக்கூடிய அபாயத்தில் உள்ளவை எவை? அவற்றை காப்பது எப்படி? என்கிற அனைத்து விவரங்களையும் வனத்துறை கேட்கும்போது ஆராய்ந்து தருவதை தங்கள் கடமையாக இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

அத்தோடு, ஓர் ஆற்றுக்கு குறுக்காக ஓர் அணைக்கட்டு போட அரசின் நீர்பாசனத்துறை அணுகுவதும் இவர்களைத்தான். குறிப்பிட்ட இடத்தில் அணைக்கட்டு எழுப்புவதன் மூலம் அழியும் வனங்கள், பல்லுயிர்கள் (மனிதர்கள் உட்பட) பாதிப்பு பற்றிய விவர அட்டவணை கொடுத்து, 'வனங்களுக்கும், பல்லுயிர்களுக்கும் பாதகமில்லை!' என இவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்தாலே அங்கே ஓர் அணைக்கட்டு எழும் என்பதையும் சொன்னார்கள். இத்தனை விஷயங்களுடன் பக்கத்தில் இருந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் பறவையியல், வனவிலங்குகள் சம்பந்தமான ஆராய்ச்சியில் 12 பிஎச்டி மாணவர்கள் வேறு இங்கே படித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட அமைப்பை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத விதமாக இதை இவ்வளவு தூரம் கொண்டு வந்து அடர்ந்த காட்டுக்குள், இந்த ஆனைகட்டி மலைப்பிரதேசத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் அப்போதைய இம்மைய இயக்குநர் விஜயனே இப்படி விளக்கினார்.

''இப்படியொரு மையம் என்பது எங்கள் ஆசிரியர் சலீம் அலியின் நீண்ட கால கனவு. அவரே இதற்கு பிதாமகர். ஏழு வயதிலேயே பறவைகள் ஆராய்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சலீம் அலி தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 100 பறவைகளை பற்றி, அவற்றின் நுணுக்கமான விஷயங்களை, அசைவுகளை துல்லியமாக ஆராய்ந்து 'இந்திய-பாகிஸ்தான் பறவைகள்' என்றொரு புத்தகமே கொடுத்துள்ளார். அதை முன்வைத்து பறவைகள் ஆராய்ச்சிக்கு நிரந்தர இடம் தேவை என பறவை ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் ஒட்டுமொத்தமாய் கோரிக்கை வைத்ததன் விளைவுதான் இது.

1983ல் மும்பையில் பி.என்.எச்.எஸ் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி) நூற்றாண்டு விழா நடந்த போது அதில் கலந்து கொண்ட அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, இந்த பறவையியல் மையத்திற்கு ஒரு வடிவம் கொடுத்தார். முழுக்க, முழுக்க இதற்கு அரசே நிதி உதவி செய்கிறது. அரசு அலுவலகங்களின் நேரம் கால அட்டவணை இதற்கு பொருந்தாது என்பதால் (காலையில் பறவைகள் எழும் முன்னே இவர்கள் எழுந்து வெளியே செல்ல வேண்டும். அவை கூடடையும் வரை இருந்து ஆராய்ந்து செயல்பட வேண்டும்) மையம் அரசின் கட்டுப்பாடுகளற்று சர்வ சுதந்திரமாய் இயங்குவது என்றும் திட்டம் செய்யப்பட்டது. இதற்காக ஓர் இடம் தேடியபோது பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு இணைகிற, பெரும்பான்மை சரணாலயங்குளும் நெருக்கத்தில் உள்ள இந்த இடம் பொருத்தமானதாக அமைந்தது!'' என்றார்.

இம்மைய இயக்குநர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தந்த இந்த விளக்கத்தின் மூலம் பறவைகள் ஆராய்ச்சி என்பது எந்த அளவுக்கு கானுயிர் பெருக்கத்திற்கு துணை நிற்பது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதில் பெரிய விலங்கான யானைக்கு எந்த அளவு இடமிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. அதையெல்லாம் விட இந்தியாவிலேயே இம்மையம் அமைந்திருக்கும் இடம் எந்த அளவுக்கு சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உணர முடிகிறது.

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடும் மையத்திற்கு சொந்தமான இடத்தில்தான் ஒரு நாள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் மூலம் யானைகள் வலசைப்பாதை குறித்த புதுவித சர்ச்சைகளும் கிளம்பின.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x