Published : 08 Sep 2017 02:08 PM
Last Updated : 08 Sep 2017 02:08 PM

யானைகளின் வருகை 30: வனத்தை மெல்ல இழக்கும் கோவை குற்றாலம்

கோவை குற்றாலத்தில் ஒரு பாவமும் அறியாத சிறுமியை காட்டு யானை மிதித்துக் கொன்றது 2004 ஆம் ஆண்டில். சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்தது 2017 ஆம் ஆண்டு. இந்த 13 ஆண்டுகள் இடைவெளிக்குள் இந்தச் சுற்று வட்டாரத்தில் புறப்பட்ட புதுப்புது கட்டிடங்களும், குடியிருப்புகளும், சொகுசு மாளிகைகளும், அதனால் நடந்த சூழலியல் மாற்றமும், அதன் விளைவாய் காட்டு மிருகங்களுக்கும் ஏற்பட்ட தொந்தரவுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

கோவை குற்றாலம் 2004-ம் ஆண்டில் இருந்தது போல் இப்போது இல்லை.

கோவை குற்றாலத்தின் முகப்பு கிராமங்களாக இருக்கும் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், காருண்யா நகர், நல்லூர் வயல், நண்டங்கரை, சாடிவயல் என ஒவ்வொன்றிலும் ஏராளமான கான்கிரீட் கட்டிடங்களை - இல்லையில்லை கான்கிரீட் காடுகளையே காண முடிகிறது. இப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனம் மட்டும் 13 ஆண்டுகளில் 10 மடங்குகளுக்கு தன் கட்டிடங்களை விஸ்தீரணப்படுத்திவிட்டது.

பழங்குடிகள் மேம்பாடு காரணம் சொல்லி கோவை குற்றாலம் மலைகளுக்கு மேலே அடர்ந்த காட்டுக்குள் இருந்த கல்கொத்திப்பதி எனப்படும் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த வெறும் 40 க்கும் மேற்பட்ட இருளர் குடிகளை கீழே நண்டங்கரைக்கு கொண்டு வந்து குடியமர்த்தி விட்டனர் அதிகாரிகள். இந்தப் பழங்குடிகளுக்கு மேன்மை ஏற்பட்டதா என்றால் இன்றளவும் இல்லை. தொழில் இல்லாமல், இடிந்து விழும் கூரை வீடுகளுடன் தன் சுயம் தொலைத்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பேசினால் நாங்கள் திரும்ப மலைக்கே போகிறோம் என்றே குரல்கள் ஒலிக்கின்றன.

இந்த நண்டங்கரைக்கு முன்னதாக இருந்த முண்டந்துறை ஓடையில் ஒரு தடுப்பணை கட்டி, அதற்கு மேலே ஒரு நிறுவனம் தன் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சொகுசு விடுதிகளை அமைத்துள்ளது.

கண்ணுக்கு விருந்தாகும் மலைகள், நீர்நிலைகள் சூழ்ந்த குளிர்ச்சியான இப்பகுதியில் இருந்தால் மலையேற்றம் எனப்படும் 'டிரக்கிங்' போகலாம். அணையில் தேங்கும் நீரை அருந்த வரும் காட்டு யானைகள், இதர வன விலங்குகள், பறவைகளை சொகுசு காட்டேஜிலிருந்தே தரிசிக்கலாம் என்ற ஏற்பாடு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் வீடியோ, புகைப்படங்களை விதவிதமாக எடுக்கலாம்என்பது இவர்களின் கேளிக்கை சமாச்சாரமாக இருக்கிறது.

மலை உச்சியில் பாரம்பரியமாக குடியிருந்த பழங்குடிகள் இருந்தால் சூழல் கேடு, மரக்கடத்தல், வனவிலங்கு வேட்டை நடக்கும், வனப்பொருட்கள் அவர்கள் சேகரிக்கக் கூடாது என தடை போடும் அதிகாரிகள், இந்த உல்லாச வாதிகளுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது என்பதெல்லாம் தொடர்ந்து சர்ச்சையாகும் விஷயங்கள்.

அதன் உச்சகட்டமாக இதே நண்டங்கரையில் 2009-ம் ஆண்டில் ஒரு கோடு கட்டி மறுகோடி வரை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஷெட் போட்டு ஆயிரக்கணக்கான பணியாற்ற திரைப் படப்பிடிப்பு நடந்தது. இப்படப்பிடிப்பு அப்போதைய ஆட்சியாளும் பெருந்தகையின் பேரப் பிள்ளை என்பதால் எல்லா திக்கிலிருந்தும் அனுமதி கிடைத்தது. இதைப் பார்த்து சூழல்வாதிகள் கொந்தளிக்க மீடியாக்கள் அதை சுட்டிக்காட்ட, எதிர்கட்சி எம்எல்ஏ (தற்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி) இதற்கெதிராக தன் ஆதரவாளர்களை இங்கே திரட்டி வர, தன் படப்பிடிப்பை ரத்து செய்து கிளம்பியது சினிமா குழு.

மீடியாக்களில் இந்த மாதிரி விஷயங்கள் பிரபல்யமாகும் போது அங்கே என்னதான் இருக்கிறது என உடைத்துப் பார்க்க புறப்பட்டு விடுவது என்பது மனித இயல்புதானே?

அதன் தொடர்ச்சியாக ரியல் எஸ்டேட் அதிபதிகளின் கண்கள் இங்கே விழுந்து தொலைத்து விடுகிறது போலும். எந்த இடத்தில் காடுகள், எந்த இடத்தில் விவசாய நிலங்கள், எந்த இடத்தில் குடியிருப்புகள் என்றே புரிபடாத அளவில் திரும்பின பக்கமெல்லாம் வீட்டுமனைகள் உருவாகி வருகின்றன. இதில் மலையிடப் பாதுகாப்பு விதிமுறைகள் எல்லாம் காற்றில் விடப்படுகின்றன.

இயற்கையோடு இயைந்து வாழ வீடு வேணுமா, குளு,குளு சுவிட்சர்லாந்து போல் வாசம் வேணுமா எங்க கிட்ட வாங்க என்று கூவி அழைக்காத குறையாக வியாபாரம்.

2013 வாக்கில் இதே நண்டங்கரையில் பார்த்தால் சாமியார் குடில்கள் மாதிரி பழைய கட்டிட தோரணையில் சில கட்டிடங்கள். சமீபத்தில் பார்த்தால் இதே பகுதியில் பிரம்மாண்ட ராட்சஷ மரமே வளர்ந்தது போல எல்லாம் அலுவலக வீடு. அந்த ராட்சஷ மரம் முழுக்க முழுக்க கான்கிரீட் கம்பிகளாலும், கலவைகளாலும் ஆனது; அதற்கு வர்ணம் மட்டுமே காடுகளின் செயற்கை வர்ணம் என்பதெல்லாம் இங்கே வந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

இதையெல்லாம் தாண்டிச் சென்றால் எட்டுவது கோவை குற்றாலத்தின் அடிவாரமான சாடிவயல். ஆண்டுக்கு பத்து மாதம் பன்னீர் போல் சாடிவயல் ஆற்றில் (இது நொய்யலை உருவாக்கும் முக்கியமான ஓடைகளில் ஒன்று) ஓடும் நீரில் சில ஆண்டுகளாக பாஸ்டர் ஆப் பாரீஸில் ஆன விநாயகர் சிலைகள் விடப்படுகின்றன. அவை அழுகியும் கிடக்கின்றன.

இந்த அழுகல் சிலைகள் ஒரு பக்கம் ஆற்றோரம் கரையாமல் கிடக்கிறது என்றால் இந்த ஆற்றோரமே ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள். 300 அடி, 500 அடி என்று ஆழம் சென்று நீரை உறிஞ்சி, 3 கிலோ மீட்டர் 4 கிலோ மீட்டர் தூரம் கூட குழாய்கள் மூலம் தண்ணீர் செல்கின்றன.

சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த செம்மேடு, முட்டத்துவயல், அதை அடுத்துள்ள ஆன்மீக மையத்தின் சுற்றுவட்டாரங்கள், வரும் அத்தியாயங்களில் காணப்போகும் நரசீபுரம், வைதேகி நீர்வீழ்சசி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 78 மினரல் வாட்டர் கம்பெனிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள்.

இந்த கணக்கு கூட பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளின் கணக்கு. இப்படி பதிவு செய்யாமல் பல மடங்கு மினரல் வாட்டர் சப்ளை கம்பெனிகள் செயல்படுவதாக அதிர்ச்சியூட்டுகின்றனர் இப்பகுதி விவசாயிகள். அவர்கள் 90 சதவீதம் நீரை ஆழ்குழாய் கிணறுகளிலும், நேரடியாக ஆற்றிலிருந்துமே எடுக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.

கடந்த இருபதாண்டுகளில் மட்டும் இந்த அளவுக்கு இங்கே கம்பெனிகள் பெருகியிருக்கிறது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு கூட இங்கிருந்துதான் தண்ணீர் சப்ளையாகிறது என்றால் இங்குள்ள நீர்நிலைகள், நிலத்தடி நீர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும்? பசுமை மர சூழல் காணாமல் போயிருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள். அதன் மூலம் வனஉயிரினங்களின் ஜீவாதாரம் எந்த அளவு கெட்டிருக்கும்? அதில் யானைகளின் பாடு எந்த அளவு திண்டாட்டமாகியிருக்கும்?

இதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டியது வனத்துறை. இந்த குறிப்பிட்ட வனப்பகுதி போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குள் வருகிறது. மங்களப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு, சாடிவயல், வெள்ளப்பதி, முள்ளாங்காடு, பூண்டி தெற்கு, மத்தியம் மற்றும் வடக்கு, நரசீபுரம், தேவராயபுரம், கெம்பனூர், மருதமலை என இ்நத வனச்சரகத்தின் 'பீட்'டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் நடுநாயகமாய் விளங்குவதுதான் சாடிவயல் தாண்டி உள்ள கோவை குற்றாலம். இங்கே ஒரு காலத்தில் மனிதர்களுக்கு அனுமதியே இல்லாமல் இருந்தது. காட்டுயானைகள் சுதந்திரமாக உய்யும் இடமாகவும் விளங்கியது.

1970 -80களில்தான் வனத்துறையினர் அனுமதியோடு இங்கே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் கூட காடு காடாக இருந்தது. சேலம் சிறுமி காட்டுயானையிடம் சிக்கி பலியான பிறகு வனத்துறை சில ஏற்பாடுகளை செய்தது. சாடிவயலிலிருந்தே மக்களை அவரவர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், பொடி நடையாகவும் அனுமதித்து வந்த வனத்துறையினர் இங்கிருந்து சுற்றுலா பயணிகளை தங்கள் வண்டியிலேயே அனுமதித்து வரும் பணியை செய்ய ஆரம்பித்தது. அதற்கு கட்டணமும் வசூலித்தது.

வனத்துறை வாகனத்தில் சென்று அருவிக்கு 1 கிலோமீட்டர் தொலைவில் பொதுமக்கள் இறக்கிவிடப் படுகிறார்கள். அங்கேயே சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் காகிதங்கள், தீப்பெட்டிகள், மதுபாட்டில்கள் சோதனையிடப்பட்டு அங்குள்ள வாட்ச்சர்களால் வாங்கிக் கொள்ளப்படுகின்றன. தின்பண்டங்கள் பழங்குடியின மக்கள் விற்பவை மட்டுமே.

முன்பு எந்த வித கட்டுமானப்பணியும் செய்யாமல் இருந்த வனத்துறை இதை 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா தலமாக அறிவித்ததோடு, அதற்கேற்ப சில வசதிகளையும் செய்துள்ளது. அதற்காக அருவிக்கு செல்ல படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகள், வனத்துறை ஊழியர்கள் இருந்து கண்காணிக்க அறைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் செய்ததனால் இன்றைக்கு விடுமுறை தினங்களில், பண்டிகை தினங்களில் மட்டும் தலா 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கோவை குற்றாலம் வருகின்றனர். இதுவே 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சில நூறுகளில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இருந்தாலே அதிசயம் என்கிறார்கள் சூழலியாளர்கள். கானுயிர்கள் வசிக்கும் பூமியில் மனிதனும், மனிதனின் எச்சமிச்சங்களும் நிறைந்தால் அவற்றின் நிலை என்னவாகும் என்பது நம்மவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதைவிட பெரும் கொடுமை, இந்த கோவை குற்றாலம் காடுகளில் ஒரு காலத்தில் யானைகளின் விருப்ப உணவான மூங்கில்கள் நிறைந்து காணப்பட்டன. கூடவே புளியன், தாளி, ஈட்டி, மலைவேம்பு, கொய்யா, நெல்லி போன்றவை நிறைய காணப்பட்டன. அவையெல்லாம் இப்போது அருகி அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உள்ளன. மற்றபடி திரும்பின பக்கமெல்லாம் தேக்குமரங்களே நிறைந்து கிடக்கின்றன. அதனூடே தைல மரங்களும் தலையசைக்கின்றன.

தேக்கு மரங்களையும், தைலமரங்களையும் மட்டுமல்ல, அதன் இலைகளைக் கூட யானைகள் முகர்ந்துபார்க்காது என்பதே யதார்த்த உண்மை. நம் நாட்டு வகை காடுகள் அழிப்பும், தேக்கு மரக் காடுகள் உருவாக்கமும் பிரிட்டீஸார் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது என்பதுதான் வேதனை.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x