

“ப
டிக்கிற வயசுல ஊரைச் சுத்துனா உருப்படமாத்தான் போவேன்னு வீட்டுப் பெரியவங்க திட்டுவாங்க. ஆனா, படிக்கிற காலத்துல நாலு இடங்களுக்குப் போய் ஊர் சுத்துன அனுபவத்தையே பிழைக்கிற தொழிலா மாத்திக்கிட்டவங்க சார் நாங்க” - இப்படி அருமையான ஓப்பனிங் கொடுத்து நம்மை வரவேற்கிறார்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா கைடுகள்!
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சீசன் நாட்களில் ஆயிரக் கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள். அதிகாலை சூரிய உதயம், அந்தி அஸ்தமனம், காந்தி, காமராஜர் மண்டபங்கள், கடலுக்குள் கம்பீரமாய் நிற்கும் வள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, பகவதி அம்மன் கோயில் என கன்னியாகுமரியில் காண வேண்டிய இடங்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். அத்துடன், கன்னியாகுமரியைச் சுற்றியும் சுற்றுலா தலங்கள் ஏராளம் இருக்கின்றன.
கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளை காவல் நிலைய பேருந்து நிறுத்தத்திலேயே வரவேற்கிறது ‘குமரி முனை சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம்’. காலம், காலமாக கன்னியாகுமரியில் டூரிஸ்ட் கைடுகளாக இருந்தவர்கள் ஒன்றிணைந்து 1986-ல் உருவாக்கிய சங்கம் இது. “முப்பது ஆண்டுகளைக் கடந்த எங்களது சங்கம் இப்போது கன்னியாகுமரியின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று” என்கிறார் சங்கத்தின் துணைத் தலைவர் ஃபெலிக்ஸ்.
“பத்தாம் கிளாஸ் படிச்சுட்டு 1970-ல் இந்த வேலைக்கு வந்தேன். அப்ப, பத்துக்கும் குறைவான டூரிஸ்ட் கைடுங்கதான் இங்க இருந்தோம். ஆனா இப்ப, 44 பேர் இருக்கோம். பொதுவா, தமிழ்நாட்டுக்காரங்க டூரிஸ்ட் கைடு வெச்சுக்குறது குறைவு தான். வெளிமாநிலம், வெளிநாடுகள்ல இருந்து வர்றவங்கதான் எங்களத் தேடுவாங்க. அதனால, ஆங்கிலம் உள்பட நாலஞ்சு மொழிகள கொஞ்சமாச்சும் தெரிஞ்சு வெச்சிருந்தா தான் இங்க வண்டி ஓட்ட முடியும். இணையம் வசதி இருந்தா இப்ப எதை வேண்டுமானாலும் தேடி எடுத்துட முடியுது. இணையத்தால எங்களுக்கும் பொழப்பு கொஞ்சம் பாதிப்புத்தான். அதனாலதான் 60 கைடுகள் இருந்த இடத்துல இப்ப 44 பேர் இருக்கோம்.
நாங்க 44 பேருல ஒருநாளைக்கு 22 பேரு வேலை செய்வோம். மத்த 22 பேரு அன்னைக்கி லீவுல இருப்பாங்க. மறுநாளு அவங்க டூட்டிக்கு வந்திருவாங்க; முதல் நாள் டூட்டி பார்த்தவங்க லீவு எடுத்துப்பாங்க. ஏப்ரல், மே மாதங்கள், தீபாவளி, பொங்கல், ஓணம் பண்டிகை, சபரி மலை சீசன்கள் உள்ளிட்ட நாட்களில் எங்களுக்கு ஓரளவுக்கு வேலை இருக்கும். சாதாரண நாட்கள்ல நாலஞ்சு பேருக்குத்தான் வேலை இருக்கும். அவங்களும் சங்கத்தின் மூலமே கைடாக அனுப்பப்படுவாங்க. கிடைக்கிற வருமானத்தை 22 பேருக்கும் சமமா பிரிச்சுக் குடுத்துருவோம். இந்த நடைமுறை இருக்கதால தான் இன்னமும் பலபேரை இந்தத் தொழிலில் பிடிச்சு நிறுத்தி வைச்சிருக்கு” என்கிறார் ஃபெலிக்ஸ்.
தொடர்ந்து பேசிய கைடு இசக்கிமுத்து, “சுற்றுலா தலத்துக்கு செல்வந்தர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் வருவாங்க. அவங்க முன்னாடி சரிக்குச் சமமா நின்று பேசவேண்டும் என்பதுக்காக வெள்ளைச் சட்டையை நாங்கள் சீருடையாக வைத்திருக்கிறோம். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நன்கு பழக்கமாகி இன்னமும் எங்களோடு தொடர்பில் இருக்கும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறைய இருக்கிறார்கள். நாங்க கஷ்டத்துல இருந்தாலும், எங்களுக்கும் கீழ கஷ்டப்படுறவங்களுக்கு சங்கத்தின் மூலமா, முடிஞ்ச உதவிகளைச் செய்யுறோம். எங்களோட நிலையை நினைச்சுப் பார்த்து அரசாங்கம் ஏதாவது உதவி செய்தால் நாங்களும் முன்னேறுவோம்” என்றார்.
சிறு வயதிலேயே வழிகாட்டியாக வந்து வயது எழுபதைக் கடந்த பிறகும் இந்தத் தொழிலில் இருப்பவர்களும் இங்கு இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு சொந்தமாய் வீடுகூட கிடையாது.
“ஒரு வகையில் நாங்களும் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்குத் தான் பாடுபடுகிறோம். ஆனா, வழிகாட்டும் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. எனவே, வயதான கைடுகளுக்கு உதவித் தொகை வழங்கவும் எங்களையும் நல வாரியத்தில் சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் இங்குள்ள கைடுகள்.
படங்கள் உதவி: ராஜேஷ்குமார்