Published : 27 Sep 2017 10:00 am

Updated : 27 Sep 2017 10:00 am

 

Published : 27 Sep 2017 10:00 AM
Last Updated : 27 Sep 2017 10:00 AM

‘வாங்க ஜெயிக்கலாம்..!’அழைக்கிறது மதுரை மாவட்ட மைய நூலகம்

போ

ட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தும் முன்மாதிரி முயற்சி ஒன்றில் இறங்கியிருக்கிறது மதுரை மாவட்ட மைய நூலகம்.


போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற, பொதுவான வாசிப்பு பழக்கமும் இருந்தாக வேண்டும். இது பலருக்குத் தெரிவதில்லை. அதனால் தான், அருகிலுள்ள நூலகங்களை கண்டுகொள்ளாமல் எங்கோ இருக்கும் கோச்சிங் சென்டர்களை நோக்கி ஓடுகிறார்கள். தப்பித் தவறி நூலகங்களுக்கு வருகிறவர்களும் பத்திரிகைகளையும் கதைப் புத்தககங்களையும் வாசித்துவிட்டுக் கலைந்து விடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது மதுரை மாவட்ட மைய நூலகம்.

“இதற்காக கூடுதலாக எந்த நிதியும் தேவையில்லை. நூலகத்தில் அறிவுக் களஞ்சியமாய் குவிந்து கிடக்கும் நூல்களைக் கொண்டே இதைச் சாதிக்க முடியும்” என்கிறார் இந்த நூலத்தின் நூலகர் வி.பி.டி.ராஜ்குமார். வாசிப்பின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்கள், இதுவரை நூலகங்களில் உள்ள புத்தகங்களை படித்து போட்டித் தேர்வுகளில் சாதித்தவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை அழைத்துவந்து, போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பயிற்சியையும் வழிகாட்டுதலையும் கொடுப்பதுதான் இவர்களின் புதிய முயற்சி. இந்தப் பயிற்சியில் சேர விருப்பம் தெரிவித்து, பலரும் ஆர்வத்துடன் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

“இந்தப் பதிவுகள் முடிந்ததும் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து வாரந்தோறும் மாவட்ட மைய நூலகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச போட்டித் தேர்வு பயிற்சியும் வழிகாட்டல் வகுப்புகளும் நடத்தப்படும் என்கிறார்” நூலகர் ராஜ்குமார்.

புரிதல் இல்லாமல்..

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், “சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகத்துக்கு அடுத்தபடியாக பெரிய நூலகம் மதுரை (சிம்மக்கல்) மாவட்ட மைய நூலகம். 1950-ல் தொடங்கப்பட்ட இந்த நூலகத்தில், பார்வையற்றோருக்கான ‘பிரெய்லி’ புத்தகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்குமான சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. ஆனால், இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் மக்கள். இங்கு, தினமும் சுமார் 600 பேர் வரை புத்தகங்கள் வாசிக்க வருகிறார்கள். இவர்களில் பலர் போட்டித் தேர்வுகளுக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்கள். சமீபத்தில்கூட பூர்ணிமா, ராம்பிரசாத் ஆகியோர் குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று என்னிடம் வந்து வாழ்த்துப் பெற்றுச் சென்றனர். அவர்கள், ‘நாங்கள் வெற்றிபெறக் காரணமே இந்த நூலகத்தின் புத்தகங்கள் தான்’ எனச் சொன்னபோது நெகிழ்வாக இருந்தது. ஆனால், பலபேர் இப்படியான புரிதலும் வழிகாட்டலும் இல்லாமல், கோச்சிங் சென்டர்களில் பணத்தைக் கொட்டிவிட்டு, எதையும் ஒழுங்காகப் படிக்க முடியாமல் குழம்பிப் போய் தேர்வில் தோற்றுப் போகிறார்கள்” என ஆதங்கப்பட்டார்.

நிச்சயம் சாதிப்போம்

தொடர்ந்தும் பேசிய ராஜ்குமார், “நாம் பணிபுரியும் நூலகத்தையும், அங்கு வரும் வாசகர்கள் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறை எனக்கு எப்போதும் உண்டு. நான் காரியாபட்டியில் எனது நூலகப் பணியைத் தொடங்கியபோது, காலையிலேயே சென்று நூலகத்தில் காத்திருப்பேன். ஆனால், யாரும் வர மாட்டார்கள். நான் ஒருவனே நூலகராகவும், வாசகனாகவும் இருந்து நொந்த கதை உண்டு. வீட்டுக்கு வந்ததும் எனது தந்தையிடம் சொல்லி விரக்தியடைவேன். அவரோ, ‘வாசிக்க வருகிறார்களோ வரலியோ, நீ ஒழுங்காய் போய் நூலகத்தைத் திற; வாசகர்களை வர வைக்க என்ன செய்யலாம் என யோசி’ என்பார். அவர் சொன்னபடியே, நூலகங்களை நோக்கி வாசகர்களை ஈர்க்க என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்; அதற்கு நல்ல பலனும் கண்டிருக்கிறேன். இதோ, இப்போது நான் எடுத்திருக்கும் இந்த முயற்சியும் அப்படித்தான்.

போட்டித் தேர்வுகளில் வழிகாட்டுதல் இல்லாமல் தோற்றுப் போனவர்களுக்கும் இப்போது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கும் வழிகாட்டுவதற்காக இந்தப் பயிற்சி வகுப்புகளை தொடங்குகிறோம். மாவட்ட நூலக அலுவலரும், இங்கு வந்து படித்து போட்டித் தேர்வுகளை வென்ற வாசகர்களும் தந்த தூண்டுதல் தான் எங்களை இந்த முயற்சியில் இறங்க வைத்தது. இதிலும் நிச்சயம் சாதிப்போம்” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்திSign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x