Published : 12 Sep 2017 03:13 PM
Last Updated : 12 Sep 2017 03:13 PM

யானைகளின் வருகை 33: வழித்தடத்தின் அருகே பாரதியார் பல்கலைக்கழகம்

'.......சோமையம்பாளையம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் பாரதியார் பல்கலைக்கழக குடியிருப்புக்குள் புகுந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி, பல்கலைக்கழக முன் கதவுகளை உடைத்து சேதப்படுத்தின.

அதிகாலை 5 மணியளவில் இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம் வழியாக வந்த 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்தான் குழுக்குழுவாக பிரிந்து குடியிருப்புகளில் இருந்த மரங்களையும், இருசக்கர வாகனங்களையும் தும்பிக்கையில் பதம் பார்த்தன. அந்த வழியே சென்றவர்கள் அலறியடித்து ஓடி, வனத்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அவர்கள் வந்து பட்டாசுகள் வெடித்து, சத்தம் எழுப்பி யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

''பொதுவாக இங்கே ஒன்றிரண்டு யானைகள்தான் வந்து செல்வது வழக்கம். இந்த அளவு அழிச்சாட்டியமும் செய்ததில்லை. இவ்வளவு யானைகள் ஒரே நேரத்தில் வந்து இந்த பாடு படுத்தியது இதுதான் முதல் முறை!'' என்று இங்கே குடியிருக்கும் பேராசிரியர்கள் அச்சம் பொங்க தெரிவித்தனர்!.......'

இன்றைக்கு 17 மாதங்களுக்கு முன்பு கோவை தினசரிகளில் பரபரத்த செய்தி இது. அதற்கு முன்னும் பின்னும் கூட பல முறை இதே போல் காட்டு யானைகள், பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊடுருவும் சம்பவங்கள் செய்திகளாகியுள்ளன. குறிப்பாக ஒற்றை யானை ஒன்று இங்குள்ள மின்வாரிய கட்டிடக் கதவை, சுற்றுச்சுவரை உடைத்து விட்டு, அந்த வழியே செல்வது என்பது வாடிக்கையாகவே உள்ளது.

பாரதியார் கோயில் யானை தாக்கியதன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்பது பலருக்கும் தெரியும். அவர் பெயரில் கோவையில் உருவாகியுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் காட்டு யானைகளால் அமளி துமளிப்படுவது கோவைவாசிகளுக்குத்தான் தெரியும். காட்டு யானைகள் உலாவும் பிரதேசத்தில் அதன் வலசைப் பாதைகளை ஒட்டிய பகுதிகளில்தான் இப்பல்கலை அமைய வேண்டும் என்று யார் வலியுறுத்தினார்களோ தெரியவில்லை. கொஞ்சமும் பிசகாமல் அது நடந்திருக்கிறது.

கோவை வாளையாறு தொடங்கி மேட்டுப்பாளையம் சிறுமுகை வரையிலும் அடுக்கடுக்காக உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளின் ஓரங்களில் -குறிப்பாக காட்டு யானைகளின் வலசைகளில் தற்போது நூற்றுக்கணக்கில் வியாபித்திருக்கும் தனியார் பல்கலைக் கழகங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகள், அவை சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது இந்த பல்கலைக்கழகம் என்று சொல்வது கூட இதற்கு சாலப் பொருந்தும்.

இப்பல்கலை சோமையம் பாளையம் வனப்பகுதியையும், மருதமலை மலைக்காடுகளையும் ஒட்டியே உள்ளது. 1982 ஆம் ஆண்டில் இந்த பல்கலை தொடங்கப்பட்டதே தனிக் கதை.

சென்னைப் பல்கலைக்கழகத்தை மட்டுமே மையமாக வைத்து அந்தக்காலத்தில் கோவையில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் கோவை மண்டலத்திற்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த பல்கலைக் கழகம். தற்போது இந்த பல்கலையின் கீழ் இயங்கும் சுமார் 120க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நான்கில் ஒரு பங்கு கல்லூரிகள் யானைகள் வசிக்கும் மலை ஓரங்களிலேயே கட்டிடங்களை எழுப்பியிருக்கிறது. அதன் நிலங்கள் எப்படி விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பெறப்பட்டன என்பதெல்லாம் தனி வரலாறு. அதை ஏற்கெனவே பல இடங்களில் பார்த்துவிட்டோம். அதையெல்லாம் விட இந்த பல்கலைக் கழகத்திற்கு நிலம் எடுத்த கதை நிறைந்த துயரம் மிக்கது.

1980 வாக்கில் இதற்காக சுமார் 300 விவசாயிகளிடம் ஆயிரம் ஏக்கர் நிலம் எடுப்பு நடந்தது. நிலம் கொடுப்பவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. தவிர நிலத்திற்கு ஈட்டுத்தொகையாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் தந்துள்ளார்கள். அது விவசாயிகள் தரப்பில் ஆட்சேபனைக்குட்பட்டு கோர்ட்டுக்குப் போக, மேலும் ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் தந்தார்கள். ஆனால் நிலம் இழந்தவர்களுக்கு உத்தரவாதப்படி வேலை தரவில்லை. வேலைக்கு ஏற்கெனவே எடுக்கப்பட்டவர்கள் சிலரையும் வேலையை விட்டு நிறுத்தினார்கள். வேறு சிலரை தற்காலிகப் பணியிலேயே வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் வெளியிலிருந்து ஆட்களை வேலைக்கு எடுப்பதும் நடக்க, அதில் கோபமாகி வெகுண்டனர் விவசாயிகள். 'பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலமிழந்தோர் சங்கம்' என்று ஒரு அமைப்பையே ஆரம்பித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்கள். (இது பற்றி 1999 ஆம் ஆண்டிலேயே செய்தி சேகரித்து, 'அவலக் குரல்களுக்கு நடுவே பாரதியார் பல்கலைக்கழகம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்) அது நீண்ட கால போராட்டத்திற்கு பின்புதான் பைசலுக்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்திற்கான கணிசமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் பெற்றார்கள் இதற்காக நிலமிழந்தவர்கள்.

அதிலும் பல குளறுபடிகள் இன்றளவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்கே அது பிரச்சினையல்ல. இப்படியெல்லாம் பெற்ற நிலங்கள் மூலம் என்னவெல்லாம் நடந்துள்ளன. அதன் மூலம் கானுயிர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் காட்டு யானைகள் திசைமாறும் சங்கதி எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விஷயமே.

இங்கே இந்த பல்கலைக்கழகம் உருவான பிறகே சுற்றிலும் புதிய, புதிய பெரிய குடியிருப்புகளும், காலனிகளும் உருவாகியுள்ளன. இந்தப் பல்கலை உருவாவதற்கு முன்பு வடவள்ளிக்கு மேற்கே (இங்கிருந்து மருதமலை அடிவாரம் 5 கிலோமீட்டர் தூரம், பாரதியார் பல்கலைக்கழகம் 3 கிலோமீட்டர் தூரம்) வெறும் பொட்டல்காடாகவும், மலைக்குன்றுகளாகவுமே காணப்படும். இப்போது திரும்பின பக்கமெல்லாம் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், ஓட்டல்களும், பள்ளிகளுமே நிறைந்திருக்கின்றன.

பாரதியார் பல்கலை உருவான பிறகுதான் இதை ஒட்டினாற் போல் சட்டக் கல்லூரியும் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் பல்கலைக்கழகத்திற்கென எடுக்கப்பட்ட நிலத்தில்தான் அண்ணா பல்கலைக்கழக மையம் உருவாகி உள்ளது (சுமார் 120 ஏக்கர்). அப்படியும் பல்கலைக்கழகத்திற்காக தான் எடுத்த நிலத்தில் ஐந்தில் ஒரு பகுதி நிலத்தையே கட்டிட பயன்பாட்டில் வைத்திருக்கிறது பல்கலை நிர்வாகம். மற்ற நிலங்கள் காடாகவே கிடக்கிறது. அந்த மீதியுள்ள இடத்தை நிலமிழந்த விவசாயிகள் திரும்ப தங்களுக்கே அளிக்க கோரிக்கை வைத்தும் பார்த்தார்கள். அது நடக்கவில்லை.

இந்த வளர்ச்சியின் விளைவு. இந்த பகுதியில் 5 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிராமங்கள் எல்லாம் குடியிருப்புகளாக மாறி விட்டன. இப்பகுதிகளில் தற்போது ஒரு ஏக்கர் நிலம் ஐந்து கோடி முதல் ரூபாய் 3 கோடி வரை ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த மதிப்பீடும், அதனால் மேன்மேலும் உருவாகும் கான்கிரீட் காடுகளும், அதில் கிளர்ந்த மக்கள் பெருக்கமும் மெல்ல, மெல்ல மேற்கே நகர்ந்துள்ளது. அங்கே மலைக் காடுகளில் வசிக்கும் காட்டு யானைகளை விவசாய நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் விரட்ட ஆரம்பித்துள்ளது.

மக்களால் ஏற்பட்ட இந்த அழிச்சாட்டியத்தில் இப்படி ஊருக்குள் புகும் காட்டு யானைகளை பார்த்து, 'யானைகள் அட்டகாசம்' என மீடியாக்கள் எழுதுகின்றன. காடுகள் காடுகளாக கானுயிர்களிடமும், விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் விளைச்சல் பூமியாகவும், பொட்டல் வெளிகள் மட்டுமே கட்டிடங்கள் உருவாகும் மையமாகவும் இருந்திருந்தால் இந்த விவகாரமே இருந்திருக்காது என்பதை இப்போது சூழலியல்வாதிகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இங்கே விவசாயிகளிடம் விவசாய நிலங்கள் இல்லை. பல விவசாயிகள் அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு அடிமாட்டு விலைக்கு தங்கள் நிலங்களை இழந்தார்கள் என்பது உண்மை. அதை அடியொற்றி எழுந்த கல்வி நிறுவனம் மூலம் இந்தப் பகுதியே குடியிருப்பு மற்றும் வியாபார அபிவிருத்தி பெற்று மற்ற சில விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிகளில் பேரம் பேசி விற்று குபேரர்கள் ஆனார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதே நேரத்தில் இந்த நிலத்தை விட்டால் கதியில்லை என்று துண்டு, துக்காணி நிலத்தை வைத்துக் கொண்டு வானம் பார்த்துக் கொண்டு அமர்ந்து சோளம், வாழை என பயிரிடும் மிகச் சில விவசாயிகளின் நிலைதான் மிகவும் பரிதாபம். காடுகள் அழிக்கப்பட்டதால் கடும் வறட்சி. சுற்றிலும் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி ஆயிரம் அடி ஆழத்தில் கூட நீர் உறிஞ்சப்பட்டதால் காடுகளில் பருக பொட்டு குடிநீரும் இல்லை.

எனவே நீரைத்தேடி வனஉயிர்கள் புறப்படுகின்றன. ஊருக்குள் புகுகின்றன. கிடைத்த இடத்தில் நீரை பருகுவதோடு, எதிர்ப்பட்ட நிலத்தில் விளைந்திருக்கும், சோளம், கரும்பு, வாழை எது கிடைத்தாலும் ஒரு பிடி, பிடிக்கின்றன. காட்டு யானைகளால் பயிர்கள் சேதம், என் வாழ்வு நாசம், அதை காட்டுக்குள் விரட்டு; பிடித்து முகாமில் அடை, சுட்டுத்தள்ளு! என ஆவேசக் குரல்கள் வேளாண்குடிகளிடம் புறப்படுகிறது.

இந்த ஆவேசம் ஏன், எதனால், எப்படி? இதற்கு யார் காரணம்? இங்கே பல்கலைக்கழகத்தை திட்டுமிட்டு அமைந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவா? அதையொட்டி நிலம் இழந்த விவசாயிகளா? இங்கு எழுந்த அபிவிருத்தியின் பலனாய் தங்கள் விவசாய நிலங்களை பெரிய தொகைக்கு விற்று வசதி கண்ட மற்ற விவசாயிகளா? எத்தனை விலை வந்தாலும் விவசாய நிலத்தை விற்கமாட்டேன் என்று இன்னமும் மண்ணையும், நுகத்தையும் நம்பி நம்பிக்கையுடன் பயிரிட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளா? நீரின்றி, உணவின்றி காட்டுக்குள் இருந்து ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கும் காட்டு யானைகளா?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x