Published : 25 Sep 2017 02:20 PM
Last Updated : 25 Sep 2017 02:20 PM

யானைகளின் வருகை 43: சகாயம் ஐஏஎஸ் வந்தால்தான் சரியாகும்!?

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் செங்கல்லுக்கு செம்மண் எடுக்கும் விவகாரம் குறித்து விவசாயிகள் பிரச்சினை கிளப்பினர். அதற்கு ஆதார சுருதியாக இருந்தது நான் இதுகுறித்து சேகரித்து அப்போது அச்சில் வெளியான கட்டுரை.

கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதிக்கு அரணாக விளங்குவது மேற்குத்தொடர்ச்சி மலைகள். அதில் மிக முக்கியமான பிரதேசமாக இருப்பது அட்டப்பாடி, ஆனைகட்டி காடுகளுக்கு அடிவாரமாக விளங்கும் மாங்கரை, தடாகம், கோபனாரி, வீரபாண்டி பகுதிகள். இங்கு மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் காட்டாறுகளாக, வளமான வண்டல் மண்ணையும் அடித்து வருகிறது. அந்த மண் கிராமப்புறங்களில்தான் பெருமளவு படிகின்றன. இந்த வளம்மிக்க மண்ணை வைத்து செங்கல் செய்ததில் பணம் கொழிக்க, செங்கல்சூளைகள் நூற்றுக்கணக்கில் பெருக்கெடுக்க ஆரம்பித்தன.

அதற்கான மண்தேவைக்கு கிராக்கி கூட ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு அடி ஆழத்திற்கு மண் எடுக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் வரை நிலச்சொந்தக்காரர்களுக்கு கொடுத்த வந்த சூளைக்காரர்கள், தற்போது ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரு அடி ஆழத்திற்கு கொடுக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் 1 அடி ஆழ மண்ணை மட்டும் விற்பனைக்கு கொடுத்துவிட்டு மண்தோண்டிய நிலத்திலேயே விவசாயம் செய்ய ஆரம்பித்த நிலச்சொந்தக்காரர்கள் காலப் போக்கில் தங்கள் நிலத்தை மண்ணை விற்பதற்காகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

இதன் பலன். 10 அடிக்கு மேல் 30 அடி ஆழத்திற்கு கூட மண் விற்கப்படுகிறது. இதனால் இங்கே திரும்பின பக்கமெல்லாம் செம்மண்ணுக்கு வெட்டப்பட்ட படுபாதாளங்களே கண்ணுக்கு தெரிகின்றன. 'இந்த முறையற்ற போக்கினால் திரும்பின பக்கமெல்லாம் செம்மண் ஏற்றின, செங்கல் ஏற்றின லாரிகள்தான் புழுதி பரத்தி பறக்கின்றன. இந்த மண்சிதை மாற்றத்தினால் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக யானைகள் ஊருக்குள் புக இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது!' என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சமாக இருந்தது.

அப்போது என்னிடம் பேட்டியளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி , 'பட்டா நிலமேயானாலும் 3 அடி ஆழத்திற்கு மட்டும் மண் எடுக்கலாம் என்று கனிம வளத்துறை சொல்கிறது. ஆனால் இப்படி இஷ்டம் போல் மண்ணை அகழ்கிறார்கள். கால, காலமாய் விவசாயம் தழைத்த மண் இது. இப்போது செம்மண் புழுதியால் மூச்சு முட்டுகிறது. இங்கு ஐந்து ஊராட்சிகளுக்குள் ஓடிய காட்டாறுகள், ஓடைகள் எல்லாமே பாழ்பட்டு விட்டது. இதை பஞ்சாயத்து நிர்வாகங்கள் மட்டுமல்ல; கனிமவளத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது!' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பற்றி எனக்கு ஏற்கெனவே அறிமுகமான இங்குள்ள செங்கல்சூளை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, சப்பைக் கட்டே கட்டினார். 'இங்கே 300க்கும் மேற்பட்ட சூளைகள் இருந்தன உண்மைதான். தற்போது தொழில் பாழ்பட்டு அதுவே 40 தொழிற்சாலைகளாக குறைந்துவிட்டன. பட்டா நிலங்களில் 3 அடி அல்ல 10 அடி வரை மண் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் விதிமுறை. சிலர் அதை மீறி மண் எடுப்பதற்கு என்ன செய்ய முடியும். செங்கல்சூளைகளால் காட்டு யானைகளுக்கு பாதிப்பு என்கிறார்கள். ஆனால் அதே காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள், மயில்கள் உள்ளிட்ட பறவைகளினால் விவசாயமே செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

அதனால்தான் பலர் மண் விற்கவும், செங்கல் சூளை அமைக்கவும் புறப்பட்டார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? இப்போது எங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவது இந்த தொழில் மட்டும்தான். அதையும் சூழல் காரணம் காட்டி நெருக்கடி கொடுத்தால் என்ன நிலைமைக்கு ஆளாவோம். நாங்கள் ஒரு சூளைக்கு ரூ. 35 ஆயிரம் வரை அரசுக்கு வரியாக செலுத்தி மண்ணெடுக்கிறோம். சில மாதங்களாக அரசு புறம்போக்கு நிலங்களுக்குள்ளேயே சிலர் புகுந்து மண்ணெடுத்துச் செல்கிறார்கள். கேட்டால் இந்த குட்டையில் தூர் வாரியது, அந்த பள்ளத்தை சுத்தம் செய்தது என்று எங்களுக்கே டிமிக்கி கொடுக்கிறார்கள். அதன் பின்னணியில் முக்கிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா. அதன் மீது நடவடிக்கை எடுப்பது யார்?' என்று கேட்டு உணர்ச்சி வசப்பட்டார்.

என்னிடம் பேசிய சூளை உரிமையாளர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர். இப்பகுதியில் உள்ள பழங்குடியினர் பிரச்சினை தொடங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி, தொழிற்சாலை, தொழிலாளிகள் விவகாரம் வரை முன்னெடுத்து போராடுபவர். அவர் செய்யும் சூளைத் தொழிலை பற்றி கேட்டால் மட்டும் இப்படி மென்று விழுங்கினார். அவரவர் தொழில் அவரவருக்கு. அவரவர் வருமானம் அவரவர்களுக்கு என்பதன் நிருபணம் போல் பேசினார்.

ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஒரு கவுன்சிலரிடம் இது பற்றி விசாரித்தபோது, '3 அடி ஆழம்தான் மண் எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி அலுவலர்கள் முதல் விஏஓ, ஆர்ஐ, தாசில்தார் வரை அதிகாரம் உள்ளது. ஆனால் அதை யாருமே செய்வதில்லை. செய்யவும் மாட்டார்கள். ஏனென்றால் இங்குள்ள கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் மற்ற அரசியல் வாதிகள் எல்லாருமே செங்கல்சூளை அதிபர்களாகவோ, மண் கொடுக்கும் நிலத்திற்கு சொந்தக்காரர்களாக செல்வந்தர்களாகவே உள்ளார்கள். இதில் எதுவுமே இல்லாத எங்களை போன்ற ஒரு கவுன்சிலர் என்றாலும் கூட ஒரு கோயில் திருவிழா, தேர்தல், கட்சி விழாவுக்கு நன்கொடை, நிதி வசூலுக்கு அவங்ககிட்டத்தான் போய் நிற்கணும். எனவே இதற்கு எதிராக ஒரு தீர்மானம் கூட பஞ்சாயத்தில் நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கு. என்ன செய்யமுடியும்? இந்த மாதிரி விவகாரங்களுக்கு சகாயம் போன்ற அதிகாரி ஒருவர் வந்து தோண்டி துருவினால்தான் இதில் ஏதாவது நடக்கும்!' என்றார் வேதனையுடன்.

இவர்கள் எல்லாம் இப்படிப் பேசியதில் எனக்கு பெரிய வியப்பில்லை. இவர்களை தொடர்ந்து நான் சந்தித்த கனிமவளத்துறை அதிகாரிதான் எனக்கு பெரிய அதிர்ச்சியை ஊட்டினார். செங்கல் சூளை, விதிமுறை மீறி மண் அள்ளல் என்ற விவகாரத்தை கிளப்பியவுடனே ரொம்பவும் பொங்கினார். 'நீங்க என்ன இதைப் பத்தி பத்திரிகையில் எழுதப்போகிறீர்களா? ஏற்கெனவே செங்கல் தொழில் படுபாதாளத்தில் கிடக்கிறது. சூளைக்காரர்கள் வந்து எங்களிடம் முறையிட்டு அழுகிறார்கள். அதில் வரும் வருவாய் அரசுக்கு(?!) பத்தில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. பத்திரிகையாளர் என்றால் கொஞ்சம் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி எழுதவே வேண்டாம். எழுதினால் தேவையில்லாத சென்சிடிவ் ஆகும். அதனால் இந்த தொழிலுக்கே கேடு வரும்!' என்றெல்லாம் என்னன்னவோ பேசினார்.

ஒரு விதிமீறல் விவகாரத்தில் உச்சபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டிய ஓர் அதிகாரி, விதிமீறல், ஊழல்புரிபவர்களின் குரலாக பேசுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'இதைப் பற்றி எழுதுவது; எழுதாமல் இருப்பது பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அல்லது இப்படியொரு விதிமீறலே இல்லையா? அதைப்பற்றிய விளக்கத்தை மட்டும் சொல்லுங்கள். நீங்கள் சொல்லாவிட்டால் சொல்ல மறுத்துவிட்டீர்கள் என்று எழுதுவதா அல்லது கலெக்டரிடம் கேட்பதா என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன்!' என்று சொன்ன பிறகு கொஞ்சம் அடங்கினார்.

அப்போதும் கூட, 'நீங்க கலெக்டரிடம் போனால் என்ன? அப்பவும் அவர் என்னைத்தான் கேட்பார். எனக்குத்தான் நோட் போட்டு அனுப்புவார்!' என்றும் உணர்ச்சி வசப்பட்டார். பிறகுதான் அரசு தரப்புக்கு ஏற்ற மாதிரி விளக்கம் கொடுத்தார். அவர் விளக்கம் கொடுத்தார் என்பதை விட நானே வாங்கினேன். அவருக்கு பாதகம் வராத வண்ணம் எழுதிக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த விளக்கம் இதுதான்:

'சூளைகளுக்கு மண் எடுக்க அரசு புறம்போக்கு நிலங்களில் 3 அடி ஆழம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. கோவையில் புறம்போக்கு நிலங்களில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க யாருக்கும் நிர்வாக ரீதியாக அனுமதி அளிக்கப்படவில்லை. குளம், குட்டை, ஓடைகளில் தூர்வாரி வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த மட்டுமே விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதை செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்த முடியாது. இதை மீறி இதன் பெயரால் மண் எடுத்து செங்கல் சூளைகளுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு போவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் தனியார்களின் பட்டா நிலத்தில் அந்தந்த நிலங்களின் தன்மைக்கு ஏற்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விவசாயத்திற்கு பாதகமில்லாமல் மூன்றடி முதல் ஏழடி வரை கூட மண் எடுக்கிறார்கள். அதை நாங்கள் தடுக்க முடியாது. அப்படி மண்ணெடுத்து எங்களுக்கு இயற்கை வளமும், விவசாயமும் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எந்த புகாரும் இதுவரை எங்களிடம் அளிக்கவில்லை. அப்படி வந்தால் அது எந்த மாதிரியான நிலம் என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி விதிமுறை மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை பொறுத்தவரை சுமார் 50 செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது!'

இப்படி நான் அதிகாரியின் விளக்கம் எழுதத் தயாராகி விட்டாலும் கூட, அந்த அதிகாரியிடமிருந்து விடைபெற்று புறப்பட்டு வந்த பின்பும் பல முறை போன். செய்தி வெளியிடாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்ய முயற்சித்தார். அதற்காக எத்தனை விலை கொடுக்கவும் தயாராக இருந்தார்.வெறும் 50 சூளைகளுக்கு அரசு அனுமதி கொடுக்கப்பட்டு அதுவே 300க்கும் மேற்பட்ட சூளைகள் இயங்குகிறது. அதன் மீது ஒரு துளி நடவடிக்கை இல்லை. ஒரு சோதனை கூட இல்லை.

அதைக் கேட்கப் போனால் பத்திரிகை நிருபரையே 'கவனிக்க' தயாராக இருக்கிறார்கள். இதற்கு பாலமாக உயர் அதிகாரிகளே செயல்படுகிறார்கள். இதன் மூலம் அதிகார வர்க்கம் இங்கே எந்த அளவுக்கு இங்கே வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். வேலிகள் இப்படி பயிரை மேயும் போது அதற்குள் நுழையும் காட்டு யானைகளை எப்படி விரட்ட முடியும்? யானைகள் அட்டகாசம். பயிர்கள் சேதம். குடியிருப்புகள் உடைப்பு இப்படித்தானே எழுத முன்வருகிறார்கள். அதே யானைகள் இவர்கள் வெட்டிப்போட்ட குழிகளில் விழுந்தது. இவர்கள் வெட்டிய பள்ளத்தில் நிறைந்திருந்த சேற்றில் சிக்கியது என்றெல்லாம் எழுத மனம் வருவதில்லையே!

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x