Published : 09 Sep 2017 02:50 PM
Last Updated : 09 Sep 2017 02:50 PM

யானைகளின் வருகை 31: இளைப்பாறலுக்கு ஒரு வைதேகி

கோவை குற்றாலத்தில் என்றில்லை. அதையடுத்து உள்ள வைதேகி நீர்வீழ்ச்சி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி மலைக் காடுகளில் கூட 80 சதவீதம் தேக்கு மரங்களும் 5 சதவீதம் தைல மரங்களும், ஏனைய மரங்களே நம்ம ஊர் மரங்களாக காணப்படுகிறது. இந்த சூழலியல் மாற்றங்களாலும் யானைகள் சலனப்பட்டு திரிவதாக சொல்கிறார்கள் இந்த காடுகளை ஒட்டி வசிக்கும் மலை மக்கள். நொய்யல் இன்று தொடரை எழுதும் போது இங்கே நான் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, இப்பகுதியை சேர்ந்த நிலச்சுவான்தார் ஜெயராமன் நம்மிடம் யானைகளின் வாழ்நிலையை தன் வாழ்நிலையோடு ஒப்பிட்டு கொஞ்சம் உணர்வுபூர்வமாகவே விவரித்தார்.

''என் அப்பாவுக்கு வைதேகி நீர்வீழ்ச்சிக்கு பக்கமுள்ள நரசீபுரம் கிராமம். அம்மாவுக்கு பேரூர் தெலுங்குபாளையம். அப்பா நரசீபுரத்திலிருந்து பேரூருக்கு வந்தவர். என் அப்பாவை பெத்த தாத்தாவுக்கு 4 அண்ணன் தம்பிகள். அந்த 4 தாத்தாக்களும் நரசீபுரம் சுற்றுவட்டாரத்துல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலபுலன்கள் வச்சு பண்ணையம் பண்ணி வந்தவங்க. எங்க தாத்தாவுக்கே 70 ஏக்கர் நிலம் இருந்தது. நீலிவாய்க்கால் தண்ணியில் முதல் தண்ணீ எங்க நிலத்துலதான் பாயும். 50 வருஷம் முன்னாடி அது முழுக்க வயல்வெளிதான். அதிலும் நெல் வயல் அதிகம்.

நீலிவாய்க்காலுக்கு அந்தப்பக்கம் உள்ள பூமிங்கிறதால சின்னாறாக வரும் வைதேகி நீர்வீழ்ச்சி தண்ணியும் எங்க வயக்காட்டை தொட்டு ஓடும். இதைப் பொறுத்தவரை சீஸன் ஆறுதான். ஒரு போகம் நல்லா நெல் விளையும். நாலு மாசப் பயிர். அப்பவெல்லாம் உரம் கிடையாது. முப்பது வகையான நெல் விளைஞ்சிட்டிருந்தது. யானைக் கொம்பன், சீரக சம்பான்னு அப்பவே அதுக்குப் பெயர்கள். அப்பவும் யானைகள் அங்கே இருந்துச்சு. ஆனா எதுவும் விவசாய வயல்களுக்கு வந்ததில்லை. அப்ப 6 வயது எனக்கு. பள்ளிக்கூடம் சனி, ஞாயிறு லீவுல வைதேகி நண்பர்களோட நீர்வீழ்ச்சிக்கு போய்த்தான் குளிக்கிறது. சாப்பாடு கொண்டு போய் சாப்பிடறது. பொறி, கடலை, கடலை பரப்பி, எல்லாம் எடுத்துட்டுப் போயிடறது. பொழுதோட திரும்பறது. 

ஒரு தடவை பெரிய புதர் மறைவில் இருந்த புளியமரத்தின் ஓரமா ஓர் ஊனாங்கொடி ஆடிட்டிருந்தது. போய் பார்த்தா சரியான காட்டு யானை. தும்பிக்கைய ஆட்டிட்டு நின்னதைத்தான் ஊனாங்கொடின்னு நினைச்சுட்டோம். விட்டா ஓட்டம். அப்ப அங்கே அருவியை ஒட்டி உள்ள பாறையில 20 அடி உயரத்துல உயர, உயரமா நிறைய வேல்கள் இருக்கும். அந்த வேல்வழிபாடுக்கு ஊர்மக்கள் மாசா மாசம் போவாங்க. அந்த வேல்கள் மேலே ஏறி உக்காந்துட்டு மலைவாசி பூசாரிகள் அருள்வாக்கு சொல்றது நடக்கும். அப்பவெல்லாம் காலரா, பிளாக், வைசூரின்னு கொள்ளை நோய்கள் அதிகம். அதுக்குத்தான் அதிகம் பேர் குறிகேட்பாங்க. கோயில் திருவிழாக்களுக்கு கொடிக்கு வேண்டிய மூங்கில்கள் அங்கேதான் கிடைக்கும்.

அதிலும் போளுவாம்பட்டி அய்யாசாமி கோயிலுக்கு சிவராத்திரிக்கு சிவராத்திரி திருவிழா. அதுக்கு ஜண்டா மூங்கில் (கொடிமரம்) செய்ய 80 அடி முதல் 100 அடி உயர மூங்கிலைத்தான் தேர்வு செய்வாங்க. அதை முந்தின வருஷமே மஞ்சள்துணி கட்டி பூசை செஞ்சு பாதுகாப்பா (சாமி மூங்கில் என்பதால் மஞ்சள் துணி கட்டின மூங்கிலை மலைவாசிக உள்பட யாரும் வெட்ட மாட்டார்களாம்) வச்சு திருவிழா கொடியேத்தத்துக்கு முந்தினநாள் பூசை செஞ்சு வெட்டுவாங்க. அதை எடுத்துட்டு மலைய விட்டு கீழே இறக்கறதைப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கும்.

மூங்கிலோட அடிக்கு ஒருத்தர்னு 60-70 பேர் அதை புடிச்சிருக்க, நூத்துக்கணக்கானவங்க சரண கோஷங்கள் எழுப்பிட்டு கூடவே வருவாங்க. அதேபோல் ஆற்றிலிருந்து கரகம் ஜோடிச்சு 10 மைல் அம்மை அழைப்பு நடக்கும். அந்த அளவுக்கு இப்ப ஆற்றுலயும் தண்ணீ வர்றதில்லை. திருவிழாவும் அந்த அளவுக்கு மூங்கில் ஊர்வலத்தோட நடக்கிறது இல்லை. யானைகளோட பிரதான தீவனமே மூங்கில்கள்தான். இந்தக் காடுகளில் இந்த அளவு உயரத்தில் மூங்கில்கள் வளர்ந்திருக்குன்னா அது எத்தனை விதமா எத்தனை பரப்புல வளர்ந்திருக்கும். எத்தனை யானைகள் அதை சாப்பிட்டிருக்கும்னு நெனச்சுப் பாருங்க. அப்படி மூங்கில் மரங்களை இப்பவெல்லாம் காண முடியறதேயில்லை. அதேபோல அப்ப பார்த்தா காட்டு யானைகளை போல ஊக்கமான காட்டு யானைகளையும் இப்ப காண முடியறதில்லை. அதுகளும் தீவனம் சரியா இல்லாம, தண்ணியும் கிடைக்காம நோஞ்சலா சிலது சுற்றுவதைப் பார்க்க முடியுது. அதுவும் ஊருக்குள்ளேதான் வருது!'' என்று நிறைய விவரித்தார்.

வைதேகி நீர்வீழ்ச்சி அருவிக்குச் செல்ல இருபது ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையின் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. பொங்கல், தீபாவளி, ஆடிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கு சுற்றுப்புற கிராமத்து வாசிகள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு இங்கே வந்து ஆடிப்பாடி, களித்து, விருந்து சமைத்து உண்டு செல்வது வழக்கமாகவும் இருந்துள்ளது. காலப்போக்கில் இந்த அருவிக்கு 3 கிலோமீட்டர் தூரத்திலேயே இப்போது பொதுமக்கள் பிரவேசிக்கத் தடை போட்டு விட்டார்கள். அங்கே உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் அனுமதி பெற்று உள்ளே சென்ற போது பல இடங்களில் சிற்றோடைகளையும், அதில் வரிசையாய் தூண்கள் அமைத்தும் சில கட்டுமானங்களைக் காண முடிந்தது. அந்த தூண்கள் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க போடப்பட்ட தடுப்பு என நம்மிடம் தெரிவித்தனர் அருவிக்கு அழைத்துச் சென்ற வனவர்கள்.

20 ஆண்டுகளாக வனம் அதன் போக்கில் விடப்பட்டிருந்ததால் காடுகளின் அடர்த்தி மிகுந்திருந்தது. அதிலும் அதில் போகிற வழியெங்கும் யானைச் சாணங்களை காண முடிந்தது. அதிலும் அருவிக்கு ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் யானைகளின் பெரிய மந்தையே இளைப்பாறியதற்கும், தங்கியதற்குமான சுவடுகள் காணப்பட்டது. ''இங்கேதான் யானைக் கூட்டங்கள் இளைப்பாறும், உறங்கும். இப்போதும் கூட இங்கே 46 யானைகள் மூன்று குழுக்களாக சுத்தி வருகின்றன!'' என்ற ஆச்சர்ய தகவலை தெரிவித்தார் நம்முடன் வந்த வன ஊழியர். வைதேகி நீர்வீழ்ச்சிக் காடுகளில் ஏராளமான மான்களை, குறிப்பாக கடமான்களை நாம் பார்க்க முடிந்தது. போகிற வழியெங்கும் வெவ்வேறு விதமான மூலிகை செடிகளின் மணம் கூடவே வந்தது. ஆரஞ்சு, சிகப்பு, பசுமை கலந்த மலர் தாங்கின செடி, கொடிகள் முகத்தை வருடின.

''பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கடுக்காய், நன்னாரி, வெட்டிவேர் இந்த வனப்பகுதியில் மிகுதியாக உண்டு. ஆதிகாலத்தில் அதை பயன்படுத்தி நாட்டு மருந்துகள் தயாரித்துத்தான் மக்களை நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றினர். இது தவிர கொன்னை, தைலம், புளியன், வேம்பு, வேங்கை, ஈட்டி, பாலை, மூங்கில், புங்கன், ஊஞ்சை நிறைந்த வனம். முக்கியமாக இதன் உச்சிக்கு போனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சீமாத்துப்புல் அடர்ந்த வளர்ந்து கிடப்பதைப் பார்க்கலாம்!'' என நமக்கு விளக்கிய வன ஊழியர்,

''இங்கே தேக்கு மரங்களே நிறைய இருக்கு. அது பிரிட்டீஸ்காரன் வந்த பின்னாடிதான் இங்கே வந்தது. இதனால் வனஉயிரின சுழற்சி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் யானைகளுக்கான தீவனங்கள் விளையும் பரப்பு குறைந்து, அவற்றின் இனப்பெருக்கமும் சுருங்கி விட்டது.!'' என்றார் வேதனையுடன். இதனால் முன்பு இப்பகுதிகளில் திரிந்த யானைகளின் குழு மிகவும் குறைந்து விட்டது மட்டுமல்ல, இருக்கிற யானைகள் குழுக்களும், காடு வறளும் போது கீழே உள்ள ஊருக்குள் புகுந்து விடுகிறது. அது 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்சம் கீழே 5 கிலோமீட்டர் தூரம் கூட போகாது. இப்போதெல்லாம் சில சமயங்களில் ஊர்ப்புறத்தில் 20 கிலோமீட்டர் தூரத்தை கூட கடக்கிறது என்கிறார்கள் இம்மலைகளின் அடிவாரப்பகுதியில் வசிக்கும் நரசீபுரம் மற்றும் வெள்ளிமலைப் பட்டினம் மக்கள்.

அப்படி பாதிக்கப்படும் கிராமங்களின் பட்டியல் விராலியூர், தேவராயபுரம், வெள்ளருக்கம்பாளையம், குப்பேபாளையம், வண்டிக்காரனூர், கெம்பனூர், தொண்டாமுத்தூர், குளத்துப்பாளையம், வேடபட்டி, தீனம்பாளையம், புதுப்பாளையம், ஓனாப்பாளையம் என ஐம்பதுக்கும் மேல் விரிகிறது.

இப்படி யானைகளின் போக்கு கூடுதலாக இங்கும் வியாபித்திருக்கும் புதிய கட்டுமானங்களே. நரசீபுரத்தில் நாமகளின் பெயரால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரி, பிறகு பொறியியல் கல்லூரி ஆகி, பிஸினஸ் மேனேஜ் மெண்ட் கல்லூரி வரை பல பிரிவுகளை தொடங்கி கிட்டத்தட்ட நூறு ஏக்கரில் வளர்ந்து நிற்கிறது. அதேபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி ஒன்று பெரிய அளவில் இயங்க முடியாமல் பிரபல ஆன்மீக மையம் எடுத்து நடத்திட பேரம் பேசிக் கொண்டிருக்கிறது. அந்த ஆன்மீக மையம் ஏற்கெனவே 5 ஏக்கரில் தொடங்கி ஆயிரம் ஏக்கர் வரை தன்னை வளர்த்தி நிற்கிற நிறுவனம் எனும்படியால் அதன் வருகையால் இப்பகுதி இயற்கையும் என்ன ஆகுமோ என்ற அச்சம் சூழலியல் நேசர்களிடம் இருப்பதை காண முடிகிறது.

ஓனாப்பாளையம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பசுமையின் பெயரால் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தது. அதையொட்டியே பல்வேறு வீட்டு மனைகளும் பிரிக்கப்பட்டன. சொகுசு விடுதிகள் கட்டப்பட்டன. இது ஒரு அரசியல் விஐபிக்கு சொந்தமானது என்பதால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக குட்டி நகரமாகவே வளர்ந்தது. சர்வதேச தரத்தில் பள்ளி ஒன்றும் உருவானது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீடுகளில் வெளிமாநில, வெளிமாவட்ட, வெளிநாட்டு விஐபிக்களும் கூட குடியேறினர். இக்குடியிருப்புகளுக்கு நடுவே கேளிக்கை விடுதியும், ஓட்டலும் கூட எழுந்தது. அதில் நடுநாயகமாக உள்ள கேளிக்கை கிளப்பில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், காதலர் தின உற்சாகம், தீபாவளி கொண்டாட்டங்கள் இரவு முழுக்க கேளிக்கையுடன் நடப்பதும் வாடிக்கையானது. ''இவங்க எல்லாம் வந்து கூத்தடிப்பதற்கு முன்பு காட்டு யானைகள் இங்கே வந்ததேயில்லை. இவங்க காட்டுக்குள்ளே வந்தாங்க. யானைக நாட்டுக்குள்ளே வர ஆரம்பிச்சுது!'' என்கிறார் தொண்டாமுத்தூரில் நீண்டகாலமாக வசிக்கும் இன்ஜினீயர் ராமசாமி.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x