Published : 06 Sep 2017 09:08 am

Updated : 06 Sep 2017 09:08 am

 

Published : 06 Sep 2017 09:08 AM
Last Updated : 06 Sep 2017 09:08 AM

ஆண்டுகள் எழுபது ஆண்டவர்கள் பதினான்கு.. !

ரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு நிகரான பாரம்பரியம் கொண்டது அங்குள்ள டேனிஷ் ஆளுநர் மாளிகை. கடற்கரையோரம் டேனிஷ் கோட்டைக்கு எதிரே இருக்கும் இந்த மாளிகையில் டென்மார்க் நாட்டின் 14 ஆளுநர்கள் தங்கியிருந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.


பதினேழாம் நூற்றாண்டில் தரங்கம்பாடியானது டேனிஷ்காரர்களின் முக்கிய வணிகத்தலமாக இருந்தது. இங்கே தங்களின் வணிகம் செழித்ததால், டேனிஷ் ஆளுநர்கள் டேனிஷ் கோட்டை அருகிலேயே குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வசிக்கத் தொடங்கினார்கள். ‘கவர்னர் மாளிகை’ என்று இப்போதும் கவுரவமாக அழைக்கப்படும் டேனிஷ் ஆளுநர் மாளிகை 1773-ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்டு வில்லியம் ஸ்டீபன்சன் என்ற வணிகரால் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது.

ஆளுநரின் அதிகாரப்பூர்வ மாளிகை

இதை, 1775-ல் விலைக்கு வாங்கிய அப்போதைய டேனிஷ் ஆளுநர் டேவிட் பிரவுன், தனது தனிப்பட்ட வசிப்பிடமாக்கிக் கொண்டார். இவரையடுத்து, 1779-ல் ஆளுநராக வந்த பீட்டர் ஹெர்மன் அபஸ்ட்டி என்பவரும் இந்தக் கட்டிடத்தை தனது தனிப்பட்ட வசிப்பிடமாகவே பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, டென்மார்க் அரசு நிர்வாகமே இந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி ஆளுநரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக்கியது.

அதற்கு பிறகு வந்த பீட்டர் ஆங்கர், யோஹான் பீட்டர் ஹெர்மான்சன் உள்ளிட்ட 12 ஆளுநர்களுக்கு 1845 வரை இந்த பங்களாதான் ஆளுநர் மாளிகையாக இருந்தது. அதன்பின், மாளிகை யார் கைக்குப் போனது? அதை விவரித்தார் டேனிஷ் - தரங்கம்பாடி அசோசியேஷன் பொறுப்பாளர் சங்கர் “பிரிட்டீஷார் ஆதிக்கம் தலையெடுத்ததால் 1800-லிருந்தே இந்தப் பகுதியில் டேனிஷ் ஆளுகையின் வலு குறையத் தொடங்கியது. இதனால், டேனிஷாரின் முக்கிய நிர்வாக நகரமாகவும் துறைமுகமாகவும் விளங்கிய தரங்கம்பாடியின் முக்கியத்துவமும் குறையத் தொடங்கியது.

இதன் காரணமாக, 1845-ல் தரங்கம்பாடியை சொற்பமான விலைக்கு பிரிட்டீஷாரிடம் விற்றனர் டென்மார்க் நாட்டினர். எனினும், 1860 வரை இந்த மாளிகையை காலியாகவே வைத்திருந்தனர் பிரிட்டீஷார்.” என்கிறார் சங்கர்.

சுனாமியால் கடும் சேதம்

1860 - 1884 காலகட்டத்தில் நீதிமன்றமாகவும், 1910 - 1985 காலகட்டத்தில் உப்புக் கிடங்காகவும் இந்த மாளிகை பயன்படுத்தப்பட்டது. 2004 சுனாமியின்போது இந்த மாளிகை மிகக் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, டென்மார்க் நாட்டினரின் உதவியோடு 2011-ல் இந்த மாளிகையை புதுப்பித்தது தமிழக அரசு. தற்போது இந்த மாளிகை தொல்லியல் துறையின் வசம் இருக்கிறது.

1798-ல் டேனிஷ் ஆளுநராக இருந்த பீட்டர் ஆங்கர் அதிகபட்சமாக 18 ஆண்டுகள் இந்த மாளிகையில் வசித்த பெருமைக்குரியவர். இவர் இந்த மாளிகையின் நுழைவாயிலை மாற்றியமைத்தார். மாளிகையை ஓவியமாக தீட்டி வைத்தவரும் இவரே. இந்த மாளிகையில் இந்தியர்களே குறிப்பாக தமிழர்களே பணியாளர்களாக இருந்தனர். இவர்களில், உணவு பரிமாறுபவர்களுக்கு மாதம் 10 ரூபாயும், பல்லக்கு தூக்குபவர்களுக்கும் கழிவறை சுத்தம் செய்பவர்களுக்கும் மாதம் ஒரு ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட்டது.

அத்தனையும் அழகாகத் தெரியும்

முன்பக்கம் நெடிதுயர்ந்த தூண்களால் தாங்கி நிற்கிறது இந்த மாளிகை. தூண்கள் மீது மரங்களை பதித்து கான்கிரீட் கூரை போன்று அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு தொடங்கி பின்பக்கத் தோட்டம் வரையிலும் நீளவாக்கில் பாதை செல்கிறது. இடதுபுறம் மூன்று அறைகள், வலதுபுறம் மூன்று அறைகள். இவற்றில் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்லும் வகையில் வழிகளும் உள்ளன. இரண்டு பக்க அறைக ளுக்கும் நடுவே மிக அழகானதொரு திறந்தவெளி முற்றம். இங்குதான் தான் கேளிக்கைகளும் விருந்து வைபவங்களும் நடக்குமாம்.

1800-களில், இந்தக் கட்டிடத்தின் மீது பனையோலை கூரை போட்டு முதல் தளம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு ஆளுநர்கள் முதல் தளத்திலேயே தங்கினார்கள். இந்த முதல் தளத்திலிருந்து பார்த்தால், ஊருக்குள் வரும் வழி, எதிரே உள்ள கோட்டை, அப்போதிருந்த துறைமுகம் என அத்தனையும் அழகாக தெரியும்.

இவ்வளவு அழகான, பழமையான இந்தப் புராதனக் கட்டிடம் இப்போது வெறுமனே பூட்டிக் கிடக்கிறது. “வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தக் கட்டிடத்தை உள்ளடக்கிய தரங்கம்பாடியின் முழுமையான வரலாற்றை அரசாங்கம் வெளிக்கொண்டுவர வேண்டும். கோட்டைக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே உள்ள அணிவகுப்பு மைதானம், முன்பு புதர்மண்டிக் கிடந்தது. மழைக்காலத்தில் அங்கே தண்ணீர் தேங்கி சாக்கடை போல் கிடக்கும். லயன்ஸ் கிளப் முயற்சியால் தற்போது அந்தப் பகுதி பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ‘பெஸ்ட் செல்லர் ஃபவுண்டேஷன்’ என்ற நிறுவனம்தான் புதுப்பிக்க உதவியது. தானாக செய்யவில்லை என்றாலும் இப்படி பலபேர் சேர்ந்து மீட்டுத் தந்திருக்கும் இந்நகரையும், ஆளுநர் மாளிகையையும் மாநில அரசு பராமரித்து பாதுகாக்க வேண்டும்” என்கிறார் தரங்கம்பாடி வரலாறு நூலின் ஆசிரியர் சுல்தான்.

தொல்லியல் துறையின் தரங்கம்பாடி கோட்டை காப்பாட்சியர் பாஸ்கரிடமும் இதுகுறித்துப் பேசினோம். ”டேனிஷ் ஆளுநர் மாளிகையை அருங்காட்சியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று மட்டும் சொன்னார் அவர்.

ஆளுநர்களின் ‘அதிகாரம்’ தூக்க லாய் தெரியும் இந்த நேரத்திலாவது இந்த ஆளுநர் மாளிகைக்கு ஒரு விமோசனம் பிறக்குமா?Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x