Published : 23 Dec 2016 02:15 PM
Last Updated : 23 Dec 2016 02:15 PM

அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்!

ஒரு பேனா, ஒரு காகிதம், ஒரு மாணவர், ஓர் ஆசிரியர் போதும், உலகத்தையே மாற்ற.

காலை 9.10 மணி. திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம்- திருநாவுக்கரசு அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். பிரேயர் முடித்தவுடன் 09.15 முதல் 09.30 மணி வரை சிறப்புப் பயிற்சிகள். எளிமையான யோகா பயிற்சிகள் நடக்கின்றன. உடம்பை வில்லாக வளைக்கின்றனர் மாணவர்கள். சிரிப்புச்சத்தம் காதில் இனிமையாக ஒலிக்கிறது. சிறிது நேரத்தில் ஒட்டுமொத்த இடமும் அமைதியாகி தியானம் நடைபெறுகிறது. பின்னர் மாணவர்கள் புத்துணர்வுடன் வகுப்புக்குள் நுழைகிறார்கள்.

''நான் படிக்கும்போது என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ, அதெல்லாம் என் மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில் செயல்படுகிறேன்'' என்று உற்சாகமாய் சொல்கிறார் இந்த வார அன்பாசிரியர் பழனிக்குமார்.

2016 ஜனவரியில் ஃபேஸ்புக்கில் பள்ளிக்கான கணக்கைத் தொடங்கிய ஆசிரியர் பழனிக்குமாருக்கு இப்போதுவரை சுமார் 1.5 லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா? மாணவர்களின் கற்றல், பள்ளியின் நிலை, தேவைகள், தினசரி செயல்பாடுகள் ஆகியவற்றை நாள்தோறும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்கிறார். கிடைக்கும் பணத்தில் செய்த செயல்பாடுகளைப் பதிவாக்கி, நன்கொடையாளர்களுக்கு நன்றி கூறி அதையும் மற்றொரு பதிவாக்குகிறார். இதைத்தவிர ஃபேஸ்புக் வழியாகக் கற்பித்தலையும் நிகழ்த்தி வருகிறார். அவரின் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்....

''அரசுப்பள்ளிகளுக்கென்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை மாற்ற ஆசைப்பட்டேன். வகுப்புக்குள் நான்கு சுவருக்குள் நிகழும் கற்பித்தலை உலகமறிய வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவற்றை படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர ஆரம்பித்தேன். இதன்மூலம் வாய்ப்புள்ள மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எங்களின் பள்ளி செயல்பாடுகள் சென்று சேர்ந்தன.

பரிசாக தங்க நாணயம்

2008-ல் கிருஷ்ணாபுரத்தில் பணியில் சேர்ந்தேன். பள்ளியைச் சுற்றிலும் தனியார் பள்ளிகள் முளைத்ததால், 2010 வாக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆங்கிலம் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் அரசுப்பள்ளிகளை விட்டுச் செல்லக்கூடாது என்று தோன்றியது. ஆங்கிலத்தில் பயிற்சி கொடுத்து, தேர்வு நடத்தி அதில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம், 2, 3-ம் பரிசாக குக்கர்களை அளிப்பதாக அறிவித்தோம். இதனால் எங்களின் பள்ளி மீது மக்கள் பார்வை திரும்பியது. இரண்டாம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாவின்போது முதல் பரிசை மட்டும் அளிக்கிறோம். இதற்கான செலவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்.

இரு வருடங்களாக எடுக்காமல் வைத்திருந்த விடுமுறைகளைச் சமர்ப்பித்ததால் ஈட்டிய விடுப்புத்தொகையாக ரூ. 50 ஆயிரம் கிடைத்தது. அதைக்கொண்டு ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கினோம். அதன்மூலம் வெவ்வேறு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை எங்கள் மாணவர்கள் கற்றுக்கொண்டார்கள். அந்தப்பள்ளி மாணவர்களோடு எங்கள் மாணவர்கள் ஸ்கைப்பில் உரையாடுவார்கள்.

நேரடிக் கற்பித்தல்

மாணவர்களுக்கு என்ன பாடம் பிடிக்கும் என்று கேட்டு அதை நடத்துவேன். அதைத்தொடர்ந்து களத்துக்கே அழைத்துச் சென்று கற்பிக்கும் உத்தியைத் தொடங்கினோம். முதன்முதலில் நாம் உண்ணும் உணவுகளைப் பற்றித் தெரிய வேண்டும் என்பதால் வயல்வெளிக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே பாட்டிகளே மாணவர்கள் உழுவது, நாற்று நடுவது, பயிர்கள் முதிர்வது குறித்துச் சொல்வார்கள். அடுத்து ரயில் நிலையம். அங்கிருக்கும் அதிகாரியே சிக்னல் என்றால் என்ன, பயணச்சீட்டு வாங்குவது, கொடி அசைப்பது குறித்து விளக்குவார்.

அஞ்சல் அலுவலகம், மருத்துவமனை, அரசு அலுவலகங்களுக்கும் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதேபோல இயற்கை உரம் தயாரித்தல், காய்கறிகள் வளர்த்தல், நேரடி கொள்முதல் ஆகியவற்றையும் கற்கும் மாணவர்கள் பள்ளித்தோட்டத்தில் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கின்றனர். கரும்பலகையில் நாம் கற்பிப்பதைவிட, களத்துக்கு அழைத்துச் சென்று நிபுணர்கள் விளக்குவது கற்றலை மேம்படுத்தும் என்று நினைக்கிறேன்.

எங்கள் பள்ளித்தோட்டத்தில் இயற்கை உரமிட்டு கீரை, தக்காளி, பூசணி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் வளர்க்கிறோம். விளைந்தபின்னர் அவை பள்ளியின் மதிய உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சப்போட்டா, மாதுளை போன்ற பழவகைகளும், மூலிகைத் தாவரங்களும் உண்டு. எங்களின் கீரைத்தோட்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதைப் பார்த்த தென்காசி நண்பர் ஒருவர் பள்ளிக்கே வந்து எங்கள் மாணவர்களுக்கு சணல் மூலம் சொட்டுநீர்ப் பாசனத்தைக் கற்றுக்கொடுத்தார்.

தன்னம்பிக்கை ஓவியங்கள்

ஒருமுறை ஆசிரியர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பள்ளிக்குச் சென்றபோது அவரின் வகுப்பறை ஓவியங்கள் என்னை ஈர்த்தன. இதேபோல் நம் பள்ளியிலும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில், 'வகுப்பில் தன்னம்பிக்கை ஓவியங்கள் வரைய பணம் தேவை' என்று பதிவிட்டேன். 15 நாட்களில் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நவீனா கிருபாகரன் என்பவர் ஃபேஸ்புக்கில் பார்த்து 5 ஆயிரம் கொடுத்தார். அதைக்கொண்டு வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் ஓவியங்கள் வரைந்தோம்.

அதில் மாவட்ட ஆட்சியர் இருக்கை வரையப்பட்டு, அதில் பெயர் இருக்கும் இடத்தில் இடம்விட்டு ஐஏஎஸ் என்று எழுதப்பட்டிருக்கும். அதேபோல மருத்துவர், நோயாளியின் படங்கள் வரையப்பட்டு, இந்த நோயாளிக்கு உதவப்போவது உங்களில் யார் ஒருவர் என்று எழுதப்பட்டிருக்கும். இதேபோல ஆசிரியர், செஸ் சாம்பியன், விஞ்ஞானி உள்ளிட்ட தன்னம்பிக்கை ஓவியங்களும் வரைந்திருக்கிறோம்.

ஃபேஸ்புக்கில் குவியும் உதவி

மாணவர்கள் விளையாட உபகரணங்கள் தேவை என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தேன். உடனே துரைப்பாண்டியன் என்பவர் 4 கேரம்போர்டுகளைப் பள்ளிக்கு அளித்தார். மாணவர்கள் தினமும் யோகா கற்றுக்கொள்வதால் அவர்களுக்கு யோகா ஆடை இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது. இதுகுறித்தும் பதிவிட்டேன். முதலில் ஒன்றாம் வகுப்பில் உள்ள 26 குழந்தைகளுக்கும் கேட்க எண்ணி, ஒருவருக்கு ரூ. 230/- வீதம் 26 குழந்தைகளுக்கு 5980 வேண்டும் என்று பதிவிட்டேன். உடனே கிடைத்தது. அடுத்ததாக 2,3,4-ம் வகுப்புக்கும் யோகா ஆடைகள் வாங்க ஃபேஸ்புக் நண்பர்களே உதவினர். 5-ம் வகுப்பில் பாதிப் பேருக்குக் கிடைக்க மீதிப்பேருக்கு நாங்கள் உடைகள் தைத்தவரே வாங்கிக் கொடுத்தார்.

மாணவர்களுக்குக் கணினி கற்றுக்கொடுக்க ஒருவரை நியமித்தோம். இரு மாதப் பயிற்சிக்கு ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம். தந்தையை இழந்த மாணவர்கள் 30 பேர் இருந்தனர். அதையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவர் 13 ஆயிரம் ரூபாயை உடனடியாக அனுப்பினார். மீதிப் பணத்துக்கு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுக்கச் சொன்னார். உடனே வாங்கிவிட்டு, மாணவர்களின் அம்மாக்களை அழைத்து அதை எங்கள் ஸ்மார்ட் வகுப்பறையில் போட்டுக் காண்பித்தேன். எதுவும் சொல்லமுடியாமல் நன்றியால் உடைந்து அழுதார்கள்.

ஓவியப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டதில், ஆனைகுளம் ஓவிய ஆசிரியர் எங்கள் பள்ளிக்கு வந்து ஓவியம் கற்றுத்தருகிறார். எங்கள் மாணவர்கள் நீண்ட நாட்களாகவே தரையிலேயே உட்கார்ந்திருந்தனர். மேசை, நாற்காலிகள் தேவை என்று பதிவிட்டிருந்தேன். மதுரையைச் சேர்ந்த சியாமளா கிருஷ்ணமூர்த்தி உடனடியாக 25 ஆயிரம் ரூபாயை அளித்தார். தொடர்ந்து துபாய் நண்பர்கள், மற்றவர்களின் உதவியோடு மற்ற வகுப்புகளுக்கும் மேசை, நாற்காலிகள் கிடைத்துவிட்டன.

தஞ்சை நாணயவியல் கழகத்தில் பணிபுரியும் ஃபேஸ்புக் நண்பர் இன்னாசி குழந்தைசாமி, எங்கள் பள்ளிக்கே வந்து வினாடி வினா போட்டி நடத்தி, 2000 ரூபாய்க்கு பொருட்களை அளித்தார். ரத்னவேல் என்பவர் 1,500 ரூ. மதிப்புள்ள புத்தகங்களை அனுப்பினார். ராகவன் சிவராமன் என்னும் சமூக சேவகர் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 துணிப்பைகளை பள்ளிக்கு அனுப்பினார். மரக்கன்றுகள் நட 1,500 ரூ. அனுப்பினர். எங்கள் மாணவர்கள் ஊக்கப்பரிசு மூலம் தாங்கள் சம்பாதித்த பணம் ரூ.800ஐ திருவள்ளூர் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு அளித்ததை என்றும் மறக்கமுடியாது.

தேவைகளைப் பதிவிடுவதோடு விட்டுவிடாமல், கிடைத்தபின் அவற்றோடு எங்கள் மாணவர்களையும் சேர்த்து நன்கொடையாளர்களுக்கு நன்றி சொல்லிப் பதிவிடுகிறேன். மறக்காமல் அதுதொடர்பான ரசீதுகளையும், விவரங்களையும் கூறிவிடுகிறேன். இதனால் எங்கள் பள்ளி மீது எல்லோருக்கும் நம்பிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

ஃபேஸ்புக் வழி கற்றல்

இதைத்தவிர ஃபேஸ்புக் வழியாக கற்றலையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் >திருநாவுக்கரசு பிஎஸ் என்ற ஃபேஸ்புக் கணக்கில் ஆங்கில வார்த்தை ஒன்றையும், ஒரு ஓவியத்தையும் பதிவிடுவேன். அதற்குரிய அர்த்தத்தை அவர்கள் கண்டுபிடித்து, படத்தையும் வரைந்துவர வேண்டும். மாணவர்கள் தங்களின் அக்கா, அண்ணன் என உறவினர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் வழியாக இதைப் பின்பற்றுகின்றனர். ஃபேஸ்புக் பார்க்க முடியாதவர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்புகிறேன்.

இதைச் சரியாகச் செய்பவர்களுக்கு ஃபேஸ்புக் நண்பர்கள் ஊக்கப்பரிசு வழங்குகின்றனர். சேலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இளங்கோ எங்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கப்பரிசு அனுப்புவார். தவிர மற்ற பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் நன்றாக இருந்தால் அவர்களுக்குப் பரிசுகள் அனுப்புகிறோம். எங்கள் மாணவர்களையே அஞ்சல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 ஊக்கப்பரிசை அனுப்புகிறோம். கனிந்த இதயம் எனும் அமைப்பு எங்களோடு இணைந்து இதைச் செய்துவருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் தாங்களே கையெழுத்துப் போட்டு மணியார்டர் வாங்குவது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இன்னும் எங்கள் மாணவர்களுக்கு பெல்ட், டை, ஷூ, சாக்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். பள்ளிக்கென டிஜிட்டல் ஆய்வகம் அமைக்க வேண்டும். இவற்றைப் பதிவிட்டால் ஃபேஸ்புக் நண்பர்கள் அதற்கும் உதவுவார்கள். ஜனவரியில் கணக்குத் தொடங்கி, ஜுனில் உதவி கேட்க ஆரம்பித்தேன். ஆறு மாத காலத்தில் 1.5 லட்ச ரூபாய் நன்கொடை அளித்த ஃபேஸ்புக் நண்பர்கள் இதற்கும் உதவமாட்டார்களா என்ன?'' என்று பெருமிதமாய்ச் சிரிக்கிறார் சமூக ஊடகத்தின் வழியே சமூகப்பணியாற்றும் அன்பாசிரியர் பழனிக்குமார்.

ஆசிரியர் பழனிக்குமாரின் தொடர்பு எண்: 9976804887

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x