Published : 19 Nov 2016 03:43 PM
Last Updated : 19 Nov 2016 03:43 PM

அன்பாசிரியர் 29: மணிமாறன்- களப்பயணக் கல்வியே இவர் பாடத்திட்டம்!

அரிய வகைத் தாவரங்களைத் தேடி மாணவர்களுடன் களப்பயணம், கிராமக் கல்விக் குழுக் கூட்டம், இந்தியப் பயிர்ப் பதன தொழில்நுட்பக் கழகப் பயணம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பள்ளியின் இலக்கிய மன்ற விழா துவக்கம், குட்டி ஆகாயம் இதழ் அறிமுகம், கிளிப்பாரி, புலிப்பாரி உள்ளிட்ட மரபு வழி விளையாட்டுகள், குழந்தைகளுக்கான கதை நிகழ்வு, யோகா பயிற்சி, எழுது திறன் பயிற்சி, தளிர்த் திறன் திட்ட செயல்பாடுகள், ஜூனியர் ரெட் கிராஸ் அறிமுகக் கூட்டம், காற்றாலை எரிசக்தி பயிற்சி- இவையனைத்தும் திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மணிமாறன், தன் மாணவர்களுடன் இணைந்து ஒரு மாதத்தில் செய்த நிகழ்வு.

அன்பாசிரியர் மணிமாறனின் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''மருத்துவம் கிடைக்காததால் ஆசிரியர் பயிற்சியில் இணைந்தவன் நான். ஆனால் இன்று ஒரு மருத்துவ மாணவனை உருவாக்க முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன். 19 வயதில் ஈராசிரியர் தொடக்கப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். இளம் வயதில், சிறு வகுப்பு மாணவர்களை நேரடியாகக் கையாள முடியவில்லை. ஒப்பனைகள் செய்து கோமாளியாக மாறி பாடம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டேன். என்னையே கோமாளியாகக் காண்பித்ததால் மாணவர்களுடம் நெருக்கம் அதிகமானது. இந்த மாற்றம், படிப்பில் முன்னேற்றமாக வெளிப்பட்டது. கதைகள் கூறியும் பாடம் நடத்துகிறேன். 4 முறை கதைத் திருவிழா நடத்தியிருக்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் இருந்ததால், கற்றல் செயல்முறைகளைத் தேடிப் பயணித்தேன். அப்போது மாணவர்களை வெளியே அழைத்துச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பது அவர்களை ஈர்ப்பதைக் கண்டுபிடித்தேன். வயல்வெளிகள், குளம், ரயில் மற்றும் தபால் நிலையங்களுக்குச் சென்றோம். மாணவர்கள் அங்கிருந்து அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைக் கற்றனர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று எலும்புக்கூட்டைப் பார்த்து அறிவியல் கற்கும் மாணவர்கள்

களத்தில் கற்பித்தல்

ஆரம்பத்தில் வயல், குளங்களுக்குச் சென்று பாடம் கற்பித்தோம். இப்போது பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தியுள்ளோம். வயலில், வேளாண்மைக் கல்லூரியில் கற்ற மாணவர்கள், இப்போது நெல் பதனிடு தொழில்நுட்ப மையத்துக்குச் சென்று பாடம் கற்கின்றனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள்., உணவு மண்டலம், செரிமான உறுப்புகள், சுவாச மண்டலம், இரைப்பை உள்ளிட்ட உடல் கூறியல் தொடர்பான பாடங்களை திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று நேரடியாகக் கற்பிக்கிறோம். உயிரற்ற உடல்களின் முகம், கால்களை மறைத்துவிடுவதால், அவற்றைக் கண்டு மாணவர்கள் பயப்படுவதில்லை.

ஒரு நாள் விழிப்புணர்வு இல்லாமல் மூன்றாம் வகுப்பு மாணவியின் தந்தை கேன்சரால் இறந்துபோனார். அதிலிருந்து அரிமா சங்கத்தின் உதவியோடு, பெற்றோர்களுக்கான மருத்துவ முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறோம். சில மாதங்களில் ஆண்டு விழா வந்தது. செலவழிக்காமல் வைத்திருந்த என்னுடைய 5 மாத சம்பளத்தொகை 15 ஆயிரத்தை வைத்து விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

அதைக் கேள்விப்பட்டு, ஊரில் மளிகைக்கடை வைத்திருந்த முஸ்லீம் சகோதரர் 100 மாணவர்களுக்கும் ரூ. 200 மதிப்புள்ள கடிகாரங்களைத் தனித்தனியாக வழங்கினார். அப்போதுதான் எந்த நல்ல விதையையும் ஊன்றினால் போதும்; அதுவாகவே வளர்ந்துகொள்ளும் என்று புரிந்தது.

கோயிலைச் சுற்றிய மாணவர்கள்

2009-ல் அருகிலுள்ள கமலாபுரம் தொடக்கப்பள்ளிக்கு மாற்றலானது. மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த எண்ணினேன். மாணவன், தன்னுடைய சக நண்பர்களுடனோ அல்லது ஆசிரியர்களுடனோ ஏதேனும் பிணக்கு ஏற்பட்டால் அதைக் கடிதம் வாயிலாக வெளிப்படுத்தலாம். ஆரம்பத்தில் அவர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தும், 'அவன் என்னை அடிச்சிட்டான், குத்திட்டான்!' என்ற ரீதியிலேயே இருந்தன. நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் தங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தனர்.

காது கேட்காத, வாய் பேசாத மாணவி, அவரின் அப்பாவுடன் பேச வேண்டும் என்று எழுதியிருந்தார். எதற்காக என்று கேட்டபோது தனக்கு அல்வா பிடிக்கும் எனவும், அதை வாங்கிக்கொடுக்கச் சொல்ல வேண்டுமென்றார். நாங்கள் உடனே 10 கிலோ அல்வா வாங்கி, பள்ளியில் அனைவருக்கும் வழங்கினோம்.

ஒருமுறை தொண்டையில் எனக்குக் கட்டி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். பேச்சு வருமா என்பதே சந்தேகமாக இருந்தது. மாணவர்கள் தினமும், பள்ளிக்கு அருகில் இருந்த கோயிலை சுற்றி வந்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்களாம். முக்கியமாக வாய் பேச முடியாத மாணவி விடுமுறை நாட்களில் கூட கோயிலைச் சுற்றி வந்திருக்கிறார். அவர்களின் அன்பு 18 நாட்களிலேயே என்னைப் பள்ளிக்குத் திரும்ப வைத்தது.

செயற்கை பேரிடர் மேலாண்மை

பொதுவாக எங்கள் ஊரில் அதிக தீ விபத்துகள், நிறைய தற்கொலைகள் அதிகம் நடக்கும். இதை எவ்வாறு குறைக்கலாம் என்று யோசித்தேன். விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட எதிர்பாராத சம்பவங்களின்போது எப்படி நடந்தகொள்ள வேண்டுமென்று மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஆம்புலன்ஸ் குறித்த தகவல்கள், முதலுதவி கொடுப்பது பற்றி பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுத்தனர்.

தீயணைப்பு, முதலுதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பயிற்சிகளைக் கற்கும் மாணவர்கள்

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, இரு நாட்களுக்கு குழந்தைகள் திருவிழா நடத்தப்பட்டது. அதில் திருக்குறள், மேஜிக், பேச்சு, பாடல், நாடகம் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. துறை வல்லுநர்களின் துணையோடு நடமாடும் கோளரங்கம் மற்றும் திறந்தவெளிக் கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

வழக்கத்தில் இருந்து மறைந்தே போன நாய் - எலும்புத் துண்டு விளையாட்டு, குரங்கு வால் விளையாட்டு, கிளிப்பாரி புலிப்பாரி விளையாட்டு, சப்த விளையாட்டு, பாயும் புலி விளையாட்டு உள்ளிட்ட மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுத்து அவற்றை விளையாடுகிறோம்.

குழந்தைகள் தினத்தன்று பத்தாயிரம் ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் கிடைத்தன. அதைக் கொண்டு ஊரில் இருக்கும் ஐந்து தெருக்களிலும் நூலகம் ஒன்றை அமைத்தோம். தற்போது பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் அதை நிர்வகிக்கின்றனர். இதன்மூலம் மாணவர்கள் தாண்டி பெற்றோர்களிடமும் வாசிப்பு பரவ ஆரம்பித்திருக்கிறது.

இன்னும் என் பள்ளியின் உள்கட்டமைப்பில் எந்த நவீன வசதியையும் செய்யவில்லை என்பது வேதனையளிக்கிறது. யாராவது உங்கள் பள்ளிக்கு வந்து பார்க்கலாமா என்று கேட்டால் சங்கடத்துடன் மறுக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம். மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டும். சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். நடமாடும் கோளரங்கம் அமைத்ததற்காக நாசா பாராட்டுக் கடிதம் அனுப்பியது. வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் எங்களோடு பேச எண்ணியவர்களிடம், கணினி வசதிகள் இல்லை என்று எப்படிச் சொல்வது?

கதை சொல்லிக் கற்பிப்பது, களப்பயணம் சென்று பாடம் சொல்வது, மாணவர்களின் உளவியல் நுட்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்வது, மாற்றுக்கல்விக்கான போராட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் ஒரு செயல்பாட்டாளராகக் கலந்துகொள்வது என சொல்லிலும் செயலிலும் ஒரே நேரத்தில் பங்குகொள்ள என் ஆசிரியப் பணி கைகொடுக்கிறது'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் மணிமாறன்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

ஆசிரியர் மணிமாறனின் தொடர்பு எண்: 8489196076

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x