Published : 28 Mar 2021 03:20 PM
Last Updated : 28 Mar 2021 03:20 PM

கொடி பிடிக்கப் பணம்; கோஷம் போடப் பணம்; நாங்கள் சொந்தப் பணத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பணிக்கு வருகிறோம்: நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் காளியம்மாள். அக்கட்சியின் சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் பூம்புகார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி.

* கடந்த மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியீட்டீர்கள். இது நீங்கள் சந்திக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது? பூம்புகாரில் உங்களுக்கான வரவேற்பும், கள நிலவரமும் எவ்வாறு உள்ளது?

அனுபவம் சிறப்பாக உள்ளது. நான் போட்டியிடும் பூம்புகார் தொகுதி மிகப்பெரிய தொகுதி. எல்லாத் தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து வருகிறேன். அவர்களின் இத்தனை ஆண்டுகால வலிகளை கண்டுணரக் கூடிய வாய்ப்பாக இதனைப் பார்க்கிறேன். பின்னொரு காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்கள் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடாது என்ற உறுதி உள்ளது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு முக்கியக் கட்சிகளும் செய்யும் பணப் பட்டுவாடா அச்சத்தைத் தருகிறது.

* திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை முன் வைத்து வருகிறது. இந்தத் தேர்தலில் நீங்கள்தான் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்பதை மக்களிடம் எவ்வாறு முன்னிறுத்துகிறீர்கள்?

அதிமுக, திமுக அரசியல் மாற்றம் குறித்து நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் அடிப்படை அரசியல் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறோம். மிக முக்கியமாகப் பார்ப்பது நிலமும், வளமும் எம் மக்களுக்கானதாக இருப்பதில்லை. அடுத்த தலைமுறை குறித்த கவலை இல்லை. ஆனால், அவர்களுக்கு எங்கள் வாக்கு மட்டும் வேண்டும். திராவிடக் கட்சிகள் மக்களிடம் உண்மையைக் கூறி வாக்குச் சேகரிக்க முடிகிறதா? அவ்வாறு இருந்தால் ஏன் திராவிடக் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கின்றன. மக்களின் வறுமையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழக அரசு அவ்வளவு கடன் சுமையில் இருக்கும்போது அக்கட்சியின் அரசியல் தலைவர்களிடத்தில் மட்டும் அவ்வளவு பணம் எவ்வாறு சேர்கிறது?

பணம் இருக்கிறவர்கள், செல்வாக்கு இருக்கிறவர்கள் மட்டும்தான் அரசியலுக்குவர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்னைப் போன்ற எந்தப் பின்புலமும் இல்லாத சாமானிய மக்களும் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும். அதுதானே ஜனநாயகமாக இருக்க முடியும். இதைத்தான் நாங்கள் முன்னிறுத்துகிறோம்.

* திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த சானிட்டரி நாப்கின் வழங்குதல் போன்ற முற்போக்கான சுகாதாரத் திட்டங்கள், உலகின் பல வளர்ந்த நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதை இழிவான செயல் என்ற தொனியில் பேராவூரணி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திலீபன் கூறியிருந்ததது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதுகுறித்து உங்கள் கருத்து?

நான் குக்கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளேன். அவர் பேசியதை நான் இதுவரை கேட்கவில்லை. இதுதான் உண்மை. எனினும் சில பேர் என்னிடம் இதைப் பற்றிக் கூறினார்கள். இந்தச் செய்தியை நான் கேள்விப்பட்டதும், அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அவருக்கு அழைப்பு போகவில்லை. நிச்சயம் அவரிடம் அதற்கான விளக்கத்தை நான் கேட்பேன். நீச்சயம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தால், கட்சியில் விளக்கம் கேட்பார்கள்.

எந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பேசி இருந்தாலும், நான் அதனைப் பார்த்தபிறகுதானே கேட்க முடியும். என்னைப் பொறுத்தவரை ஒருவர் தவறு இழைத்திருந்தால் அதனை அவர் வாயிலாகக் கேட்ட பிறகுதான் நான் பதில் கூறுவேன். எனவே நான் முழுமையாக அறிந்தபின் இதற்கு பதிலளிக்க முடியும். ஆனால், சங்கடமாகும்படி பேசி இருந்தால் அது சரியில்லைதான்.

* தடுப்பூசிகள் மக்களிடம் சென்றடைவதற்கான நெடிய பயணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு இருக்கையில் தடுப்பூசிகள் என்பது ஒரு வர்த்தகம். நான் எனது குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவில்லை என நீங்கள் பேசிய பேச்சு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?

நான் எனது தனிப்பட்ட மருத்துவருடன் ஆலோசனை செய்தேன். தடுப்பூசிகள் என்பது குறிப்பிட காலத்திற்குத்தான் உடலில் வேலை செய்யும். வாழ்நாள் முழுவதும் அது செயல்படாது. எனவே, உணவுச் சத்துகளில் கிடைத்திராத சத்து தடுப்பூசிகளில் கிடைத்துவிடாது என்று மருத்துவர் எடுத்துரைத்தார். அதனைத்தான் நான் மேடையில் பேசினேன். நான் எல்லாத் தடுப்பூசிகளையும் கூறவில்லை. போலியோ போன்ற தடுப்பூசிகளை நான் கூறவில்லை.

ஆனால், இன்று தடுப்பூசிகளை வைத்து தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரிய வர்த்தகம் செய்து வருகின்றன. பத்து, பதினைத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மருத்துவமனைகளையும், தற்போதுள்ள மருத்துவமனைகளையும் ஒப்பிடுங்கள். நான் கூறுவது ஒன்றுதான். ஆயிரம் தடுப்பூசிகள் போடுவதற்கு பதிலாக குழந்தைகளுக்குச் சத்தான உணவளித்து வளர்த்தெடுங்கள். இயற்கையோடு இணைந்த உணவை வழங்குங்கள். இதுதான் நான் கூறுவது. குழந்தைகளை நோயற்றவர்களாக வளர்ப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி அல்ல. இதுதான் என் தனிப்பட்ட கருத்து.

* சர்வாதிகாரத்துக்கும், அடக்குமுறைக்கு எதிராகவும் வலுவாகக் குரல் கொடுக்கும் சமூகமாகவே தமிழ்ச் சமூகம் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது அன்பான சர்வாதிகாரம் செய்ய வாய்ப்பளியுங்கள் என்று சீமான் கூறுகிறார். இது வன்முறையாகத் தெரியவில்லையா?

குப்பையைக் கொட்டாதீர்கள் என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள். வெளிநாடுகளில் நீங்கள் சாலை விதிகளை மீறினால் சிசிடிவி கேமராவில் அதனைக் கண்டு அவர்களைத் தண்டிக்கிறார்கள். இதனை நீங்கள் என்னவாகப் பார்க்கிறீர்கள்? பல வெளிநாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.

இன்னொரு விஷயத்துக்கு வருவொம். யார் வேண்டுமானாலும் மரத்தை வெட்டலாம் என்ற சூழல்தான் தற்போது உள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மரம் வளர்க்கிறது. அது ஏன் யார் பார்வைக்கும் செல்லவில்லை. யாரும் அதை ஏன் விவாதிப்பதில்லை. மரங்களை வெட்டினால் அதனை வெட்டியவருக்கு தண்டனை கொடுத்து நூறு மரங்களை அவர் வளர்க்க வேண்டும் என்று கூறுவது எப்படி சர்வாதிகாரமாக மாறுகிறது? தவறு செய்தால் தண்டனைதானே இருக்க வேண்டும்.

சர்வாதிகாரம் என்றால் நீதிமன்றம் எதற்கு, சிறைச்சாலைகள் எதற்கு? சர்வாதிகாரம் என்ற வார்த்தையைப் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் எல்லாம் உள்ளது. நீங்கள் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் சரியாக இருக்கும். தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாக இருக்கும்.

* இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழரின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? அடுத்தகட்டப் பயணம்?

வெற்றி வாய்ப்பு நன்றாகவே உள்ளது. சின்ன கட்சி என்று ஓரமாக வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் என்று தேர்தல் ஆணையமே கூறுகிறது. கிராமப்புறங்களில் மக்களிடம் நன்றாக வரவேற்பு உள்ளது. கொடி பிடிக்கப் பணம், கோஷம் போடப் பணம் என உள்ள இந்தக் காலகட்டத்திலும் நாங்கள் சொந்தப் பணத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பணிக்கு வருகிறோம். நாங்கள் மக்களைப் பிரதானமாக வைத்துதான் அரசியல் செய்து வருகிறோம். இளைஞர்கள் கூடுகிறார்கள். மாற்று அரசியல் தேவை என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. இந்தத் தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய உயர் நிலைக்குச் செல்வோம். அடுத்த தேர்தலில் நீங்களே பார்ப்பீர்கள்.

தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x