Published : 05 May 2020 06:23 PM
Last Updated : 05 May 2020 06:23 PM

மக்கள் மீது பழி போட்டு மதுக்கடைகளைத் திறக்கலாமா?

“ஒரு தலைமுறை குடிக்கு அடிமையாவது நம்முடைய நாட்டுக்கே சுமையாகிவிடும்” என்று சொன்ன அண்ணாவின் வழிவந்த திமுக அரசு, 1971-ல், மதுவிலக்கு அமல் சட்டத்தை ஒத்திவைக்க முடிவெடுத்தது. நிதி நிலையைக் காரணம் காட்டி எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு அது. தனது படங்கள் மூலம், குடிப்பழக்கத்துக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த எம்ஜிஆரிடமே இந்த முடிவுக்குச் சம்மதத்தைக் கருணாநிதியால் வாங்க முடிந்ததும், நிதி நிலையைக் காரணம் காட்டித்தான். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, கருணாநிதி முன்வைத்த வாதம், ‘மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை’ என்பதுதான்.

முன்னதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு கூறியிருந்தது. அந்த வகையில் தமிழகத்துக்கும் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியபோது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் அது பொருந்தும் என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. வேறுவழியின்றி, மதுவிலக்குச் சட்டத்தை ஒத்திவைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இத்தனைக்கும் அப்போது காங்கிரஸும் திமுகவும் கூட்டணியில் இருந்தன. எனினும், மத்திய அரசின் மேலாதிக்கமே ஓங்கியிருந்தது.

திரும்பும் வரலாறு
இன்றைக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் ஊரறிந்தது. அப்படி இருந்தும் தமிழக அரசு கேட்கும் நிதியுதவிகளை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. 1971-ல் இருந்ததைவிட மிக மிக மோசமான காலகட்டத்தில் இருக்கும்போதும் மத்திய அரசு இப்படிப் பாராமுகம் காட்டுவதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்.

கரோனா பொதுமுடக்கத்தால், பல்வேறு வரி வருவாய்களை இழந்து நிற்கும் தமிழக அரசு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், அரசு நிர்வாகத்தை நடத்தவும் தேவையான நிதியின்றி தடுமாறுகிறது. இந்நிலையில்தான், டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்திருக்கிறது.

அள்ளித்தரும் ஆல்கஹால்
மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத், பிஹார், மிஸோரம், நாகாலாந்து தவிர பிற மாநிலங்கள் ஆல்கஹாலுக்கு விதிக்கப்படும் கலால் வரியின் மூலம் 10 முதல் 15 சதவீதம் வரையில் வரி வருவாயைப் பெறுகின்றன. ஜிஎஸ்டி வரி வசூலுக்கு அடுத்தபடியாக, மாநிலங்களுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதும் ஆல்கஹால் மீதான கலால் வரிதான். தமிழகம் போன்ற மாநிலங்களில் மதிப்புக் கூட்டு வரியும் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கத்துக்கு முன்னர், டாஸ்மாக் மதுக் கடைகள் மூலம் நாளொன்றுக்குச் சராசரியாக 100 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைத்து வந்தது. பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட 4,200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பைத் தமிழக அரசு எதிர்கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்திருந்தாலும், தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியைத் தமிழக அரசு உயர்த்தியதும் வருவாயைக் காரணம் காட்டித்தான். எனினும், பொது முடக்கத்தால் வாகனப் போக்குவரத்து குறைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 2,500 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும் என்று தமிழக அரசு விளக்கிவிட்டது. ஜிஎஸ்டி வரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை மத்திய அரசு வழங்குவதற்கான சமிக்ஞைகள் இதுவரை தென்படவில்லை. இந்நிலையில், தமிழக அரசு அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபியான டாஸ்மாக் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.

தடுமாறும் மாநிலங்கள்
டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், ஆந்திரம் என்று பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்துவிட்டன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. சிவப்பு மண்டலங்களைப் பொறுத்தவரை வணிக வளாகத்தில் அமைந்திராத, தனிக்கட்டிடத்தில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லி முழுவதுமே சிவப்பு மண்டலமாக இருக்கும் சமயத்திலும் அங்கு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. (சென்னையில் இப்போதைக்கு மதுக்கடைகள் திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது)

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்காமல் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என்றும் இதைப் பார்க்க முடியும். “பொதுமுடக்கம் அவசியம் என்றாலும், அது நீட்டிக்கப்பட்டிருப்பதால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

நொண்டிச்சாக்குகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க அரசு சொல்லும் காரணம் மிக அபத்தமானது. ‘தமிழகத்தில் நிதி நெருக்கடி இருக்கிறது. அதைச் சமாளிக்க வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. நமக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவிகளும் நிலுவைத் தொகையும் வந்துசேரவில்லை. வருவாயைப் பெருக்க தற்சமயத்துக்கு இதுதான் வழி’ என்று வெளிப்படையாகப் பேசாமல், ‘அண்டை மாநிலங்களின் எல்லையில் திறக்கப்பட்டுள்ள மதுக் கடைகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குவிகிறார்கள்’ என்று சமாதானம் சொல்கிறது அரசு.

பாமக நிறுவனர் ராமதாஸ் சொல்வதைப்போல, அப்படிச் சென்றவர்கள் தமிழகத்தின் மக்கள்தொகையில் 0.0001 சதவீதம்கூட இருக்க மாட்டார்கள். அவர்களைக் காரணம் காட்டி இப்படி ஒரு முடிவை எடுப்பது தமிழக அரசின் கையாலாகாதனத்தையே காட்டுகிறது.

அரசின் முடிவை ஆதரிப்பவர்கள், இன்னும் ஒருபடி மேலே சென்று, “காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதானே மதுபானக் கடைகள் திறந்திருக்கும்? வேலை முடிந்து வீடு திரும்புபவர்களால் எப்படி மதுக்கடைகளுக்குச் சென்று மது வாங்க முடியும்?” என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். பொதுமுடக்கம் அமலில் இருக்கும்போது வேலைக்குச் செல்பவர்கள் எத்தனை சதவீதம் என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இந்தப் பெருந்தொற்று சமயத்திலும் அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதைத்தான் இந்த விநோதக் கூற்றுகள் காட்டுகின்றன.

இந்தப் பாவம் வேண்டாம்!
2017-ல், நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பல மதுக்கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூடியது. அப்போது வேறு வழியின்றிக் குடியை நிறுத்தியவர்கள் பலர். அதேபோல், தற்போதைய பொதுமுடக்கத்தின் சமயத்திலும் (ஆங்காங்கே ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர்த்து), மதுக்கடைகள் மூடியிருக்கும் நிலையால் பெரிய அளவில் சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடவில்லை. குடிநோயாளிகளாக இருந்தவர்கள்கூட, கடந்த 40 நாட்களாக மதுவை ருசிக்காமல் வாழப் பழகியிருக்கிறார்கள். இதனால், குடிநோயாளிகளைக் கொண்ட குடும்பங்கள் ஓரளவு நிம்மதியாக இருக்கின்றன.

இந்நிலையில், மதுக் கடைகளை மீண்டும் திறப்பது பெரிய அளவில் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். பார்கள் திறக்கப்படாது என்பதால், மதுபானங்களை வீட்டுக்கே வாங்கிவந்து அருந்தும் ஆண்களால், அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிய மன அழுத்தத்துக்கும் வன்முறைக்கும் ஆளாகும் சூழல் வரலாம்.

நெருக்கடியான இந்த நேரத்தில் இந்தப் பாவத்தைத் தமிழக அரசு சுமக்க வேண்டாம். அதற்கு மாறாக, நிலுவையில் இருக்கும் நிதியைக் கேட்டுப் பெறுவதில் தனது சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டும். அப்படிச் செய்தால், பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் தமிழகம் அமையும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x