Published : 08 Apr 2020 07:57 PM
Last Updated : 08 Apr 2020 07:57 PM

குடி முதல் பப்ஜி வரை: பெண்களை வதைக்கும் ஊரடங்கு!

பிரதிநிதித்துவப் படம்.

மார்ச் 24-ம் தேதி இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 130 கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்க அறிவுறுத்தப்பட்டனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய 'ஊரடங்கு நடைமுறை' அமலுக்கு வந்தது. இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்காவில் சில மாகாணங்கள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்த்தால் இன்றையை சூழ்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 300 கோடி மக்கள் ஊரடங்குக்குக் கீழே உள்ளனர்.
உலக அளவில் சுமார் 264 கோடி பணியாளர்கள் வெவ்வேறு வடிவங்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச பணியாளர் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.

உலகையே முடக்கியிருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் நோய் அபாயத்திற்கு அடுத்த முக்கியமான அபாயம் மன அழுத்தம். மன அழுத்தத்திலிருந்து விடுபட மக்கள் வீட்டிற்குள்ளாகவே தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் செய்கின்றனர்.

சமையல், கலை, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். உடற்பயிற்சி, யோகா செய்ய பலரும் பரிந்துரைக்கின்றனர். சமூக வலைதளங்கள், மொபைல் கேம்கள் என பொழுதைக் கழிக்கின்றனர். ஆனால், ஊரடங்கு மன அழுத்தமும், வீட்டிற்குள்ளாக மட்டுமே இருக்கவேண்டிய சூழலும் யாருக்கு மிகப்பெரும் சவாலாக மாறி இருக்கிறது என்றால் 'பெண்களுக்குத்தான்'.

உலக நாடுகள் பலவற்றிலும் Domestic Violence என்கிற 'குடும்ப வன்முறை' அதிகரித்திருக்கிறது.

'கரோனா தடுப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தொடக்கத்திலேயே, குறிப்பிடத்தக்க அளவு குடும்ப வன்முறை கணிசமாக உயர்ந்துள்ளது. பெண்களும், குழந்தைகளும்தான் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணையதளங்களில் 'குழந்தை பாலியல் காட்சிகள் தேடல்' அதிகரித்துள்ளது' என இன்டர்போல் அறிக்கை அளித்துள்ளது.

பல நாடுகளின் தலைவர்கள் இதுகுறித்த கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஊரடங்கு கால நிவாரணம் அறிவிக்கும்போது 'குடும்ப வன்முறைக்கு' ஆளாகுபவர்களையும் சேர்த்தே கணக்கில் வைத்து நிவாரணம் அறிவித்தார்.

'கடந்த சில தினங்களில் குடும்ப வன்முறை தொடர்பான புகார்களும், உதவி கோரல்களும் 2 மடங்கு அதிகரித்துள்ளது' என்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ்.

ஆனால், இந்தியா இதுகுறித்து போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. உலக அளவில் புகார்களாக 'பதிவு செய்யப்படும் குடும்ப வன்முறை' அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம். ஆனால், எதார்த்த நடைமுறையில் இந்தியாவில் 'குடும்ப வன்முறை' என்பதன் விகிதம் மிக அதிகம். ஆனால், குடும்ப வன்முறைக்கு எதிரான குரல் இந்தியாவில் மழுங்கலானது. ஏனெனில், சாதிய - வகுப்புவாத பாகுபாடுகளைப் போல குடும்ப வன்முறையும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அநீதியாகத்தான் இருக்கிறது.

2015-2016 தேசிய குடும்ப நல புள்ளிவிவரத்தின்படி, 15 முதல் 49 வயதுள்ள 30% பெண்கள், குடும்ப வன்முறையை அனுபவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஊரடங்கு காலம் என்பதும் இந்தியப் பெண்களுக்கு அப்படியொன்றும் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கவில்லை. அவர்கள் மட்டுமே செய்வதற்கு என வீட்டு வேலைகள் நிரம்பக் கிடக்கின்றன. கூடவே, மதுவுக்கு அடிமையான கணவனின் வசைகளும், உடல் ரீதியான தாக்குதல்களும், பாலியல் துன்புறுத்தல்களும் இந்தியப் பெண்களின் மன நிம்மதியைக் கெடுக்கின்றன.

தமிழகப் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஊரடங்கில் தாங்கள் சந்திக்கும் நெருக்கடிகளை 'இந்து தமிழ் திசை'யிடம் சில பெண்கள் பகிர்ந்துகொண்டனர்.

சென்னை, காசிமேட்டைச் சேர்ந்த மீனவப்பெண் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாதாரண நாட்களில் பரபரப்பாக பலமணிநேரம் சந்தையில் உழைக்கும் ஈஸ்வரி, கரோனா உபாயத்தில் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார். நோய்த்தொற்று அச்சம் தரும் முடக்கம் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் வீட்டுக்குள் உருவாகும் வன்முறை அச்சம் தரும் முடக்கம். இரண்டையும் எதிர்கொண்டுவரும் ஈஸ்வரியிடம் பேசினோம்.

"எல்லோரும் வீட்டிலேயே இருப்பதால், வேலைகள் அதிகமாகியிருக்கின்றன. வீட்டில் இருப்பவர்களை வேலை சொல்வதற்கும் எனக்கு மனசு வரவில்லை. ஆனால், வீட்டிலேயே இருப்பது மனநிலையைப் பாதித்துள்ளது. காசிமேட்டில்தான் மீன்கள் விற்று வருகிறேன். வீட்டில் நிறைய பிரச்சினைகள், சண்டைகள் இருந்தாலும், வியாபாரம் செய்யும்போது மனசு லேசாக இருக்கும். வீட்டைவிட்டு வெளியே சென்று உழைப்பது ஒருவகை நம்பிக்கையைக் கொடுக்கும். இப்போது வீட்டை விட்டு வெளியிலேயே செல்ல முடியாது. கடையும் போட அனுமதி இல்லை. கையில் காசு இல்லை. அதுதான் ரொம்ப சிரமமாக இருக்கிறது. கணவரும் தொழில் ஏதுமின்றி வீட்டிலேயே இருக்கிறார். அதுதான் கூடுதல் டார்ச்சராக இருக்கிறது. வெளியில் சென்று வந்தால் ஒன்றும் தெரியாது. அவர் வீட்டிலேயே இருப்பது குடைச்சல்தான். நாம் நெனைச்சதல் கூட டிவியில பார்க்க முடியாது. ஏதாவது கோபமாக திட்டிக்கொண்டே இருப்பார். என்னுடன் மீன்கள் விற்கும் பெண்களிடம் அவ்வப்போது பேசுவேன். போனில் பேலன்ஸ் இல்லாமல் போய்விடும் என பயந்து அவர்களிடமும் அதிகமாக பேச மாட்டேன்" என்கிறார் ஈஸ்வரி.

ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகரித்திருப்பது குறித்தும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகமாகியிருப்பது குறித்தும், சமீபத்தில் மாநில மகளிர் ஆணையம் அறிக்கையின் வாயிலாக கவலை தெரிவித்துள்ளது. குடும்ப வன்முறையால் பெண்களும், குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்படுவதை அந்த அறிக்கையின் வாயிலாக மகளிர் ஆணையம் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்படும் பெண்கள், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது 181 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு உளவியல் சங்கம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவி எண்களை அறிவித்திருக்கிறது. tnpsya.org என்ற இணையதளம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுகிறது. உளவியல் சங்கத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில் சில பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசினோம்.

பெரம்பலூரைச் சேர்ந்த சுகவணிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 45. கணவர் கூலி வேலை செய்கிறார். திருமணமாகி 28 ஆண்டுகள் ஆகியிருக்கும் சுகவணி, "கணவருக்கு நாளைக்கு ரூ.400-500 வரை வருமானம் கிடைக்கும். அதில் பாதி குடிக்கே சென்றுவிடும். 25 ஆண்டுகளாக என் கணவர் குடிபோதைக்கு அடிமையாக இருக்கிறார். முன்பும் குடித்துவிட்டு என்னை அடிப்பார். இப்போது ஊரடங்கால் அவரால் குடிக்க முடியவில்லை. அதனால், குடிக்க முடியாத கோபத்தில் ஏதாவது பிரச்சினையை உருவாக்கி என்னை தினமும் அடிக்கிறார்.

இருக்கின்ற பணத்தை வைத்து ஏதாவது சமைத்தால் அதனையும் குறை கூறி, “இதெல்லாம் ஒரு சாப்பாடா, குழம்பா?” எனக் கேட்டு அடிப்பார். வெறித்தனமாக என்னிடம் கத்துவார். கையில் கிடைப்பதை தூக்கிப்போட்டு அடிப்பார். "நைட்டுக் கல்லத் தூக்கிப் போட்டு உன்ன சாகடிக்கிறேன்"னு மிரட்டுவாரு. டிவியில் வேண்டுமென்றே முழு சவுண்டையும் வைப்பார். தலை வெடிப்பது போன்று இருக்கும்.

இந்த ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு உடம்பு வலி இருக்கிறது. முன்பு அவர் அடித்தால் வேறு எங்காவது வெளியில் போய்விடலாம். இப்போது ஊரடங்கால் எங்கும் செல்ல முடியவில்லை. பக்கத்து வீட்டுக்குக் கூட போக முடியவில்லை. அவரிடம் அடி வாங்கிச் சாகிறேன். அவர் வெளியில் சென்று காய்கறிகள் கூட வாங்க மாட்டார். நான் தான் இருக்கும் பணத்தை வைத்து வெளியில் சென்றுவாங்கி வருகிறேன். அவர் குடித்தால் எனக்கு ஏற்படும் கஷ்டத்தை விட, இப்போது குடிக்காமல் வீட்டிலேயே இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்தான் அதிகம்.

பணம் இல்லாத பிரச்சினையையும் நான் தான் சமாளிக்க வேண்டியுள்ளது. ரேஷன் கடையில் குடுத்த1,000 ரூபாயையும், அங்க இங்க கடன் வாங்கியும் சமாளிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் என் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்வதற்கு பயந்தேன், தயங்கினேன். அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர். என் மகன்தான் உளவியல் சங்கத்தின் எண்ணைக் கொடுத்தான். ஆனால், என் கணவர் அதற்கெல்லாம் வர மாட்டார். உளவியல் சங்கத்தில் சில ஆலோசனைகள் வழங்கினார்கள். ஒவ்வொரு நாள் ஊரடங்கும் அடி, உதையோடு போகிறது எனக்கு" என நொந்து முடித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் பைங்கிளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 32. கணவர் கொத்தனார் வேலை செய்கிறார். குடிபோதைக்கு அடிமையான கணவரின் வன்முறை தாங்காமல் உளவியல் சங்கத்தை அணுகியிருக்கிறார் பைங்கிளி.

"குடிக்க முடியாத கோபத்தை என் மீது காட்டுகிறார். எந்நேரமும் சண்டையாகத்தான் இருக்கிறது. நிம்மதியாக சாப்பிடக் கூட முடியவில்லை. 4-5 ஆண்டுகளாகவே மதுவுக்கு மிகவும் அடிமையாகிவிட்டார். எதற்காக சண்டை போடுவார் என்பதே தெரியவில்லை. இதனால், மிகுந்த மன அழுத்தமாக இருக்கிறது. பிள்ளைகளைக் கூட சரியாக கவனிக்க முடியவில்லை. பக்கத்தில் வசிக்கும் ஒருவர் தான் உளவியல் சங்கத்திற்கு போன் செய்யச் சொன்னார். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் கூறினர். இப்படி நான் இதற்கெல்லாம் பேசியது என் கணவருக்குத் தெரிந்தாலே அவ்வளவு தான். என்ன செய்வார் என்பதே தெரியாது, பயமாக இருக்கிறது" என பதற்றத்துடன் முடித்துக்கொண்டார்.

பிரதிநிதித்துவப் படம்

ஊரடங்கால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பொருளாதார ரீதியான பிரச்சினைகளால் மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி வரும் தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் பாலமுருகன், நம்மிடம் பேசுகையில், "கணவன் - மனைவிக்குள் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகள் இப்போது இருவரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் பெரிதாகின்றன. பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பெண்கள் ஊரடங்குக்குப் பிறகான வாழ்வாதாரம் குறித்து கவலை கொள்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இப்போது மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். சாப்பாட்டுக்குக் கடன் வாங்கி பெண்கள் சமாளிக்கின்றனர். அடுத்து, பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவது குறித்து யோசிக்கும் நிலையில் பெண்கள் உள்ளனர். வாழ்வாதாரம் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுவுக்கு அடிமையானவர்கள் தங்களின் கோபத்தை யார் மீது காட்டுவதென்று தெரியாமல், பெண்களைத் துன்புறுத்துகின்றனர். இதனை ஆண்களே எங்களிடம் ஒப்புக்கொள்கின்றனர். கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பது போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர். தனக்குப் பிடித்ததைச் சமைக்காமல், வீட்டில் இருந்த பொருட்களை வைத்து சமைத்த மனைவியை கணவர் தாக்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. பலவித பிரச்சினைகளால் தூக்கமின்மை பிரச்சினை பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது" என்றார் பாலமுருகன்.

மதுவால் நடக்கும் கொடுமைகள் ஒருபுறம் என்றால், ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி வரதட்சணைக் கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள், பெண்களின் மீது குடும்ப வன்முறைகள் அதிகமாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது மாநில மகளிர் ஆணையம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இது தொடர்பாக, நம்மிடம் பேசிய மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், "திருமணம் முடிந்திருந்தாலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்னும் அதிகமாக வரதட்சணை கொண்டு வர பெண்களை கணவர்கள் துன்புறுத்துகின்றனர். இது தொடர்பாக எங்களுக்குப் பல புகார்கள் வந்துள்ளன.

திருமணமாகி 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை வரதட்சணைக் கொடுமையில் கணவர் தாக்கியதால் இப்போது அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் குடும்பத்தை தரம் தாழ்த்திப் பேசுவது, பெண்ணின் பெற்றோரிடம் இருந்து பொருட்கள் அல்லது பணத்தை வாங்கி வரச் சொல்வது போன்றவற்றில் கணவரும் அவரது தாயாரும் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே வரதட்சணையை அதிகமாகக் கொடுத்தும் இந்த சூழ்நிலையில் மீண்டும் பெண்கள் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகின்றனர். அத்தகைய ஆண்களுக்கு கவுன்சிலிங் மேற்கொள்ள நாங்கள் அறிவுறுத்தினாலும், அதற்கு அவர்கள் ஒத்துழைப்பதில்லை. கவுன்சிலிங்குக்குப் பிறகு இன்னும் தொல்லைகள் அதிகமாகும் என பெண்களும் அஞ்சுகின்றனர்.

தூத்துக்குடியில் மதுவுக்கு அடிமையான ஒருவர், விரக்தியில் 17 வயது மகளை அடித்துக் கொன்று விட்டதாக வரும் செய்திகள் கவலையைத் தருகின்றன. மதுவுக்கு அடிமையானவர்கள், இப்போது மது இல்லாததால் ஏற்படும் விரக்தியை எப்படி எதிர்கொள்வது என ஆண்களுக்குத் தெரியவில்லை.
ஆண்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அடிப்படை பிரச்சினையே பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் இருப்பதாக ஆண்கள் நினைக்கிறார்கள்" என்கிறார்.

கண்ணகி பாக்கியநாதன்: கோப்புப் படம்

ஒருநாளின் காலை முதல் மாலை வரை வீட்டின் ஒவ்வொரு அணுவையும் நகர்த்துவதற்கு பெண்கள் தரும் பங்களிப்பு மிகப்பெரும் உடல் உழைப்பு; மன உழைப்பு; அறிவு உழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளாத, உணர மறுக்கிற சமூகத்தின் அலட்சியமே பெண்கள் மீதான வன்முறைகளின் தொடக்கம்.

ஐ.நா. சபை அளிக்கும் தகவலின்படி, உலகின் 75% வீட்டுப்பணிகள் பணிகள் பெண்களாலேயே செய்யப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படுவதில்லை. பெண்களின் வீட்டுப் பணிகளைப் பொருளாதாரமாக கணக்கிட்டால் அது உலகின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 13% ஆகும். இந்தியப் பெண்களின் வீட்டுப்பணிகளை பொருளாதாரமாகக் கணக்கிட்டால், அது இந்திய ஜிடிபியில் 40% வரும் என்கிறது ஐ.நா.

ஆனால், ஊரடங்கை ஓய்வுக்காலமாகக் கருதும் ஆண்கள், பெண்களின் இந்தப் பணிகளை உழைப்பாகக் கருதுவதில்லை. குழந்தைகளுடன் விளையாடுவதோ, நேரம் செலவழிப்பதோ இல்லாமல், பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும் அடிமையாக உள்ளனர். இந்த 'பப்ஜி' ஆண்களின் செயல்பாடுகள் குழந்தைகளையும் கடுமையாகப் பாதித்து வருவதாகத் தெரிவிக்கிறார் கண்ணகி பாக்கியநாதன்.

சென்னையில் உள்ள அலுவலகம் ஒன்றில் டீ, காபி போட்டுக் கொடுக்கும் பணிசெய்பவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஊரடங்கு நேரத்தில் வீட்டில் அதிகரித்திருக்கும் பணிச்சுமைகள் பற்றி நம்மிடம் பகிர்ந்த கீதா, "வேலைக்குச் செல்வதை விட வீட்டில் இருக்கும் போதுதான் எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. வேலைக்குச் செல்லும் போதாவது, வீட்டுக்கு மாலையில் வந்தால் 2-3 மணிநேரம் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாகி விடுவோம். ஆனால், இப்போது அப்படியில்லை. கொஞ்ச நஞ்ச வேலைகள் கிடையாது. ஒரே வேலை, ஒவ்வொரு 24 மணிநேரத்துக்கும் ரொட்டேஷனில் நடக்கிறது. எனக்கு மாதச் சம்பளம் 8,000 ரூபாய். சம்பளம் வேறு இன்னும் வரவில்லை. அதுவே மன அழுத்தமாக உள்ளது. காசேயில்லாமல், ஒவ்வொரு வேளைக்கும் என்ன வாங்குவது, இருக்கும் பொருட்களை வைத்து என்ன சமைப்பது என திட்டமிடுவதே பெரிய அழுத்தமாக இருக்கிறது" என்கிறார் கீதா.

தொடர்ச்சியாக வேலைகள் இருப்பதால், வீட்டிலேயே முழு நேரமும் இருந்தாலும், பொழுதுபோக்குவதற்கென சாதனங்கள் இருந்தாலும், தனக்கென பொழுதுபோக்க நேரமில்லை என நொந்துகொள்கிறார் கீதா.

உலகமே அச்சுறுத்தலில் இருக்கும்போது, பொழுதுபோக்காவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது என்கிற கேள்வி எழலாம். முறையான பொழுதுபோக்குகள் இல்லாமல் மன அழுத்தத்திலேயே இருப்பது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கிறது; பலவீனமானவர்களாக்குகிறது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நோய்த்தொற்று காலத்தில் ஊரடங்கி இருக்கும்போது முறையான மருத்துவமும் ஒருவகை மருத்துவம்தான்.

உடல் ரீதியான தாக்குதல்கள், வரதட்சணைக் கொடுமை, பெண்களை வதைக்கும் குடும்ப வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சீண்டல்கள், உடலுறவுக்குக் கட்டாயப்படுத்தல்கள், பொழுதுபோக்கில் மூழ்குதல், வீட்டு வேலைகளில் கூட உதவாததால் எழும் கடுமையான மன உளைச்சல்கள், பொழுதுபோக்கின்மை என தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒரு வாரத்திற்கு வரும் 3 புகார்கள், மார்ச் 23 முதல் ஏப்.1 வரை 69 ஆக அதிகரித்துள்ளது.

இ-மெயில் மூலமும் பல புகார்கள் தேசிய மகளிர் ஆனையத்திற்கு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின்படி, 30.8% பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பங்களில்தான் நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றது.

மாநில மகளிர் ஆணையத்திற்கு தினந்தோறும் தோராயமாக 10க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருவதாகவும், கடந்த ஒருவாரத்தில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும் கூறுகிறார் கண்ணகி பாக்கியநாதன்.

கல்வி வித்தியாசமோ, வகுப்பு வித்தியாசமோ, சாதி வித்தியாசமோ, பொருளாதார வித்தியாசமோ இல்லாமல் அனைத்துத் தரப்பிலிருந்தும் இத்தகைய புகார்கள் வந்துள்ளன.

தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரும் புகார்கள் உண்மையில் குறைந்த எண்ணிக்கையிலானவை என்றும், சமூகத்தில் பின் தங்கியுள்ள பெண்கள் தபால் மூலமே புகார்களை அனுப்புவதாகவும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 57% பெண்கள் செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தாததால், உதவி எண்களை அழைப்பதற்குக் கூட வழியின்றி சிரமப்படும் நிலையில் இருக்கின்றனர்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x