Published : 19 Feb 2020 04:11 PM
Last Updated : 19 Feb 2020 04:11 PM

குழந்தைகள் வாழத் தகுதியற்ற பூமியா இது? எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

காலநிலை நெருக்கடியால் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து இடர்கள் நேர்ந்துகொண்டிருக்கின்றன, மனித வாழ்வின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. மழை, வெள்ளம், காட்டுத் தீ, வறட்சி, பொருளாதார நெருக்கடி, நாடுகளுக்கிடையே மோதல், மனிதத்தின் வீழ்ச்சி ஆகியவற்றை காலநிலை நெருக்கடியின் விளைவுகளாக நம் கண் முன்னே எதிர்கொண்டு வருகிறோம்.

காலநிலை நெருக்கடியால், குழந்தைகள் நலனில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அச்சம் தரும் ஆய்வுகள் பல வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் காலநிலை நெருக்கடியால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், நேரடியாக அது அவர்களின் உடல்நலனில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்கள் வாழும் சூழல் மற்றும் எதிர்காலத்தை எந்தவொரு நாடும் பாதுகாக்கவில்லை என, உலக சுகாதார மையம், யுனிசெஃப், 'தி லான்செட்' இதழ் ஆகிய அமைப்புகளால் அமைக்கப்பட்ட சர்வதேச அளவிலான குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் நலன் குறித்த நிபுணர்கள் 40 பேர் அடங்கிய குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட்டது,

'உலகில் குழந்தைகளின் எதிர்காலம்?' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளின் நலன் குறித்த அச்சமும் கவலையும் தரத்தக்க பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை நெருக்கடி, சுரண்டப்படும் வகையிலான சந்தை நடைமுறைகள் ஆகியவற்றால் வேகமாக வளர்ந்து வரும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள், இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், மதுபானங்கள், புகையிலை ஆகியவற்றின் நுகர்வால், உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் பெரும் தாக்குதலுக்கு உள்ளாவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

"கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உடல்நலன் குறித்த நடவடிக்கைகளில் மேம்பாடு அடைந்திருந்தாலும், அந்த முன்னேற்றம் அப்படியே ஸ்தம்பித்துத் தலைகீழாகி விட்டது. குறைவான மற்றும் நடுத்தர சராசரி வருமானத்தைக் கொண்ட நாடுகளில் 5 வயதுக்குக் குறைவான 25 கோடி குழந்தைகள், திறன் வளர்ச்சியை அடைவதில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இதைவிட முக்கியமான ஒன்று, உலகிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் காலநிலை நெருக்கடி மற்றும் வணிக அழுத்தங்கள் காரணமாக இருத்தலியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்திற்கான அணுகுமுறையை நாடுகள் மாற்ற வேண்டும், குழந்தைகளை நாம் இன்று கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர்களுக்கான உலகைப் பாதுகாப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்கிறார், நியூஸிலாந்து முன்னாள் பிரதமரும் இந்த ஆய்வுக்குழுவின் இணைத்தலைவருமான ஹெலன் கிளார்க்.

குழந்தைகள் உயிர் வாழ்தல் மற்றும் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள், குறிப்பாக ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட குழந்தைகளின் வளர்ச்சியின் செயல்திறனை ஒப்பிட்டு 180 நாடுகளின் புதிய உலகளாவிய குறியீடும் இந்த ஆய்வு முடிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏழ்மையான நாடுகள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதற்கு அதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், ​​செல்வந்த நாடுகளின் அதிகப்படியான கார்பன் வெளியேற்றம், அனைத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது.

தற்போதைய கணிப்புகளுக்கு ஏற்ப 2100 ஆம் ஆண்டு வாக்கில், புவி வெப்பமடைதல் 4 டிகிரி செல்சியஸை விட அதிகமாக இருந்தால், கடல் மட்ட உயர்வு, வெப்ப அலைகளின் தாக்கம், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்குப் பேரழிவு தரக்கூடிய சுகாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

நார்வே, தென்கொரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள், உயிர் வாழ்தல் மற்றும் நல்வாழ்வுக்கான சிறந்த வாய்ப்புகளை பெறுவதாக இக்குறியீடு உணர்த்துகிறது. அதேசமயத்தில் மத்திய ஆப்பிரிக்க நாடுகள், சாட் (Chad), சோமாலியா, நைகர் (Niger), மாலி (Mali) ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் இக்குறியீடுகளில் மிக மோசமான இடங்களில் உள்ளனர்.

ஆய்வாளர்கள் தனிநபர் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கணக்கில் எடுத்துக் கொண்டபோது, இக்குறியீட்டில் முதன்மை இடங்களில் உள்ள நாடுகள் பின்னுக்குச் செல்கின்றன. நார்வே, தென்கொரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 156, 166, 160 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த மூன்று நாடுகளில் ஒவ்வொரு நாடும் 2030-ல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 210% அதிக கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன. கார்பன் டை ஆக்ஸைடை அதிகமாக உமிழும் நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.

"மனிதாபிமான நெருக்கடிகள், மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளால், வளர்ச்சி தடைபட்டுள்ள நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். சில ஏழ்மையான நாடுகளில் குறைந்த கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு உள்ள போதிலும், வேகமாக மாறிவரும் காலநிலையின் கடுமையான தாக்கங்களுக்கு பலர் ஆளாகின்றனர்" என்கிறார், இந்த ஆய்வின் இணைத் தலைவர் ஆவா கோல்-செக் (Awa Coll-Seck).

2030 ஆம் ஆண்டளவில் தனிநபர் இலக்குகளில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும், அதே சமயம் குழந்தை வளர்ச்சி நடவடிக்கைகளில் நியாயமான முறையில் (முதல் 70 இடங்களுக்குள்) செயல்படும் நாடுகளாக, அல்பேனியா, ஆர்மீனியா, கிரெனடா, ஜோர்டான், மால்டோவா, இலங்கை, துனிசியா, உருகுவே மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

தீங்கு விளைவிக்கும் சந்தை முறைகள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தனித்துவமான அச்சுறுத்தலையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. சில நாடுகளில் உள்ள குழந்தைகள் ஒரே ஆண்டில் தொலைக்காட்சியில் மட்டும் 30,000 விளம்பரங்களைப் பார்க்கிறார்கள் என்பதற்கான தரவுகளை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் இளைஞர்கள் இ-சிகரெட் விளம்பரங்களுக்குக் கவரப்பட்டு அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்த ஆய்வு கூறுகிறது.

ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் அந்தோனி கோஸ்டெல்லோ (Anthony Costello), "தொழில் நிறுவனங்களில் சுய கட்டுப்பாடு என்பது தோல்வியடைந்து விட்டது. ஆஸ்திரேலியா, கனடா, மெக்ஸிகோ, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பலவற்றில், சுய கட்டுப்பாடு என்பது குழந்தைகள் விளம்பரங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது" என்கிறார்.

நொறுக்குத் திண்பண்டங்கள் மற்றும் இனிப்பு நிரம்பிய குளிர்பானங்களின் வணிக ரீதியான சந்தைப்படுத்துதல், குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு ஆளாவதோடு தொடர்புடையது. பருமனான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 1975-ல் 11 மில்லியனிலிருந்து 2016-ல் 124 மில்லியனாக அதிகரித்தது. இது முந்தையதை ஒப்பிடும் போது 11 மடங்கு அதிகமாகும்.

மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள்:

குழந்தைகள் இப்புவியில் வருங்காலத்தில் வாழ்வதற்கு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வேகமாக மட்டுப்படுத்துதல்.

நிலையான வளர்ச்சியை அடைய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை மையப்புள்ளியில் வைத்தல்.

குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் தொடர்பாக, புதிய கொள்கைத் திட்டங்கள், முதலீடுகளை உருவாக்குதல்.

கொள்கை முடிவுகளில் குழந்தைகளின் குரல்களை இணைத்தல்

தீங்கு விளைவிக்கும் வணிகச் சந்தையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

"உலக கொள்கை வகுப்பாளர்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றைக் காக்கத் தவறிவிட்டனர் என்பதையே இந்த ஆய்வு காட்டுகிறது. குழந்தைகள் நலன் மற்றும் அவர்களின் வளர்ச்சி, உரிமைகளைக் காக்க அந்தந்த நாடுகள் இந்த ஆய்வு முடிவுகளை எச்சரிக்கை மணியாக நினைத்து திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்" என உலக சுகாதார மையத்தின் பொது இயக்குநர் அதானோம் கெப்ரிஷியஸ் (Adhanom Ghebreyesus) கூறுகிறார்.

காலநிலை நெருக்கடியை மட்டுப்படுத்தும் முயற்சிகளில் கிரெட்டா துன்பெர்க் போன்ற குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் குரல்களையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வு முடிவுகள் நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x