Published : 14 Feb 2020 06:14 PM
Last Updated : 14 Feb 2020 06:14 PM

தமிழக பட்ஜெட் 2020: விவசாயிகளுக்குக் கிடைத்திருப்பது என்ன?

பிரதிநிதித்துவப் படம்

2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.14) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வேளாண்மை துறைக்கு மொத்தமாக, 11 ஆயிரத்து 894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-2020 பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.10,550.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடானது குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் 20202-2021-ல் வேளாண்மை துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், அறிவிப்புகளுள் சில:

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற சட்டம் இயற்றப்படும் என, முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்ததை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின் போதும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நினைவுபடுத்தினார். ஆனால், அதற்கான சட்டம் இயற்றப்படுவது குறித்தான அறிவிப்புகள் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இவைதவிர திருந்திய நெல் சாகுபடி முறையானது இந்தாண்டில் 27.18 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும், நிலையான கரும்பு உற்பத்திக்கு 12 கோடி ரூபாய் செலவில், 74 ஆயிரத்து 132 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடித் திட்டத்தில் தொழில்நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-2020 நிதியாண்டில், கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்தாண்டு, இதற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, புவி வெப்பமயமாதல் காரணமாக, பயிர்களில் அடிக்கடி பூச்சித் தாக்குதல்களைத் தடுக்க 20 கோடி ரூபாய் செலவில் பூச்சி மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்திருக்கிறது.

தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள், துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பெறுவதற்கு 'உழவர்-அலுவலர் தொடர்புத் திட்ட'த்தை அறிமுகம் செய்யும் என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்நீர் பாசன திட்டத்தில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 1,844.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக, 724.14 கோடி ரூபாய் என்ற உயர்த்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன், 2020-2021 ஆம் ஆண்டிலும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக பட்ஜெட்டில் வேளாண்மை துறையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து, விவசாய சங்க தலைவர்களிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

"வரவேற்கும் அம்சங்களும் ஏமாற்றங்களும் கலந்த பட்ஜெட்"

பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்

"இந்த பட்ஜெட்டில் வேளாண்மை சார்ந்து வரவேற்கத்தக்க அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. ஏமாற்றமளிக்கும் விஷயங்களும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் பட்ஜெட்டை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்தோம்.

வேளாண் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்தியிருப்பதும், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கியிருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். அத்திக்கடவு - அவிநாசி போன்ற திட்டங்களுக்கு கடந்த காலங்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர்.
குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கியிருப்பது, 'யானைப் பசிக்கு சோளப்பொறி' போன்றது.

விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்தது கடன் தள்ளுபடி. ஒரு விவசாயிக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்த்தோம். அந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பெரும்பான்மையான தமிழக விவசாயிகள் கடன் சுமையால் மேலும் கடன் வாங்குவதற்கான தகுதியை இழந்துள்ளனர். இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல் தமிழகத்திலும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. உழவு மானியம், டீசல் மானியம் இவையெல்லாவற்றுக்கும் மேலாக, நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். வேளாண்மைக்கான மானியத் திட்டங்கள் எதுவும் 20 சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகளையே சென்றடைகிறது. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் உரையில் இருக்கிறது. ஆனால், அதுகுறித்த சட்டம் இயற்றப்படுவது தொடர்பான விளக்கம் இடம்பெறவில்லை. அதை உத்தரவாதப்படுத்தும் அறிவிப்பு இல்லை. உடனடியாக வேளாண் மண்டலம் குறித்து மத்திய அரசிடம் தெளிவுபடுத்தி சட்டம் கொண்டு வர வேண்டும்.

இந்த ஆண்டு மழை நன்றாக பொழிந்ததால், விவசாயத்தில் வறட்சி இல்லை என்பது உண்மைதான். ஆனால், பூச்சித் தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. இதனால் நெல் விவசாயிகள் பெரும்பான்மையாக மகசூல் இழப்பைச் சந்தித்திருக்கின்றனர். காலநிலை நெருக்கடியால் விவசாயம் பாதிக்கப்படுவதைத் தடுக்க தொலைநோக்கு திட்டங்களோ அதுகுறித்த அறிவிப்புகளோ இல்லை.

மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பதற்கான அறிவிப்புகள் இல்லை. காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க மேற்குத் தொடர்ச்சி உள்ளிட்ட மலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அது குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.

காவிரி டெல்டா பகுதிகளில் முப்போகம் விளைந்த பகுதி இன்றைக்கு ஒருபோகம் தான் விளைகின்றது. முப்போகமும் விளைச்சல் இருப்பதற்கான நீராதாரத் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.

கரும்பு விவசாயமே அழிந்து விட்டது. அரசின் தவறான கொள்கைகளாலும், தனியார் முதலாளிகளின் சுயலாபத்தாலும் கரும்பு விவசாயிகள் 70 சதவீதத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை திரும்பி செலுத்துவதற்கான அறிவிப்புகள் இல்லை. கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது விளம்பரத் தொகையாகவே உள்ளது".

"விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவை"

மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருவாரூர் மாவட்டத் தலைவர்

"கல்விக்கு இணையாக வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அறிவித்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுகின்றன. அது, சிறு, குறு விவசாயிகளை சென்றடையும் வகையில் திட்டங்கள் இல்லை. விவசாயத்திற்கு தேவையான தொலைநோக்கு திட்டங்கள் இல்லை.

உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டத்தை இப்போதுதான் அறிவித்திருக்கின்றனர். இதிலிருந்தே, இதற்கு முன்பு விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்குமான உறவின் இடைவெளி எவ்வளவு என்பதை அறியலாம்.

குடிமராமத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாதிதான் செலவழிக்கப்படுகின்றது. மீதமுள்ள தொகை ஆளும் கட்சியினருக்குத்தான் செல்கின்றது.

மேட்டூரில் இருந்து வரும் உபரி நீரை சேலத்திற்கு திருப்பி விடுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது காவிரி டெல்டாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆவின் நிறுவனத்தின் சராசரி பால் கொள்முதல் 2019-2020 இல் 33.96 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால், பால் உற்பத்தியானது தனியாரை நோக்கிச் செல்வதை தடுக்கும் வகையிலான திட்டங்கள் இல்லை.

பயிர்க்கடனை பெரும்பாலான விவசாயிகள் பெற முடியாத சூழ்நிலையிலேயே உள்ளனர். இந்தியாவிலேயே 17% விவசாயிகள் தான் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர்க்கடன் பெறுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன".

உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம் போன்ற புதிய வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் விலையை உயர்த்துவது போன்ற கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது பெரும்பான்மையான விவசாயிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x