

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேப்பங்குளத்தில் நெல்கொள்முதல் நிலையத்திற்கு வெயிலில் பசியோடு வரும் விவசாயிகளுக்கு நார்த்தம்பழம் ஜூஸ், களத்து தோசையும் கொடுத்து அரவணைக்கின்றனர் வேப்பங்குளம் கிராமமக்கள்.
கல்லல் அருகே வேப்பகுளம் கிராமமக்களின் கூட்டு முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழ்கிறது. அங்குள்ள 4 கண்மாய்களும் நிரம்பியுள்ளதால் விளைச்சலுக்கும் குறைவில்லை.
அங்கு வந்த வியாபாரிகள் 66 கிலோ கொண்ட ஒரு மூடையை ரூ.850-க்கு கொள்முதல் செய்தனர். அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்ததால் அதிருப்தி அடைந்த கிராமமக்கள், அதை தடுக்க முடிவு செய்தனர்.
பணத் தேவையுள்ள விவசாயிகளிடம் மட்டும் மூடைக்கு ரூ.1,100 கொடுத்து நெல்லை கொள்முதல் செய்வது, மேலும் கொள்முதல் செய்த நெல்லை அரிசியாக மதிப்பு கூட்டி, அந்த அரிசிக்கு ‘வேப்பங்குளம் பிராண்டடு’ பெயரில் விற்பது என முடிவு செய்தனர்.
மேலும் நெல் கொள்முதல் செய்வதற்கான பணத்தை வசூலிப்பதற்காக, ‘அரிசி தேவைப்படுவார் முன்கூட்டியே பணம் செலுத்தினால் குறைந்த விலையில் ஒரு மாதத்திற்கு அரிசி விநியோகிக்கப்படும்,’ என கிராமமக்கள் சார்பில் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது
அதன்மூலம் வசூலித்த பணத்தில் 300 மூடைகளை கொள்முதல் செய்தனர். தற்பாது கொள்முதல் செய்த நெல்லை அரிசியாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
கிராமமக்களின் முயற்சியை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வேப்பங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி பிப்.7-ம் தேதி முதல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 40 விவசாயிகள் வரை தினமும் வந்து செல்கின்றனர். மேலும் நெல்லை எடை வைப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகளில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் களைப்பாக இருக்கும் விவசாயிகளும், தொழிலாளர்களும் கிராமமக்கள் சார்பில் இலவசமாக நார்த்தம்பழம் ஜூஸ் க்கும் கொடுத்த உபசரிக்கின்றனர். மேலும் கிராமம் என்பதால் வெளியூர்களில் இருந்து வரும் விவசாயிகளுக்கு உணவு கிடைப்பது சிரமம். இதனால் அவர்களுக்கு கிராமமக்கள் சார்பில் மிக குறைந்த விலையில் ‘களத்து தோசை’ என்ற பலகாரத்தையும் வழங்குகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதுகுறித்து திருச்செல்வம், கணேசன் கூறியதாவது: இனிமேல் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்குவதை தடுக்கவே நாங்களே நெல்லை கொள்முதல் செய்து, அரிசியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முடிவு செய்தோம். இதே வழிமுறையை மற்ற கிராமங்களிலும் பின்பற்றினால் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். மேலும் எங்களுக்காக கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் அமைத்து கொடுத்தார்.
அங்கு ஒரு மூடைக்கு ரூ.1,075 தருகின்றனர். இதனால் நாங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும் வெளியூர் விவசாயிகளின் களைப்பு, பசியை தடுக்க ஜூஸ், களத்து தோசை கொடுக்கிறோம். ‘களத்து தோசை ’ செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பிரபலமான பலகார வகை. இதனை ‘இரட்டை தோசை’ என்றும் கூறுவர். ஒருவர் 2 தோசைகள் சாப்பிட்டாலே போதுமானது.
இந்த தோசையில் உளுந்து, அரிசி மாவு, நாட்டுச் சர்க்கரை, ஏலம் சுக்கு போன்றவை கலந்திருப்பதால் அலாதி சுவையுடன் இருக்கும், என்று கூறினர்.