Last Updated : 11 Feb, 2020 01:03 PM

 

Published : 11 Feb 2020 01:03 PM
Last Updated : 11 Feb 2020 01:03 PM

பாஜக தோல்வி ஆறுதல் தந்தாலும் காங்., இழப்பு வேதனை அளிக்கிறது: டெல்லி தேர்தல் முடிவு குறித்து பீட்டர் அல்போன்ஸ் சிறப்புப் பேட்டி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தொடர் வெற்றி முகம் காணும் ஆம் ஆத்மி மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜகவை வீழ்த்தியதோடு, நீண்ட நெடிய அரசியல் வரலாறு கொண்ட காங்கிரஸைக் களத்தில் காணாமல் போகச் செய்துள்ளது.

ஆம் ஆத்மியின் வெற்றி ஒரு மாபெரும் விவாதப் பொருளாக இருக்கும் அதே வேளையில் காங்கிரஸின் தோல்வி அலசி ஆராயப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இதன் நிமித்தமாக அக்கட்சியின் மூத்த அரசியல்வாதி, முன்னாள் எம்.பி., முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸிடம் 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகப் பேட்டி கண்டோம்.

"காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே உற்று உள்நோக்கி சரிசெய்ய வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறது" என்ற வேதனையைப் பகிர்ந்ததோடு கட்சியை அமைப்பு ரீதியாக ஸ்திரப்படுத்த தனது ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றி ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். தேசிய ஊடகங்களின் கருத்துக் கணிப்பும், டெல்லிக்கு சமீபத்தில் சென்றுவந்தவர்கள் சொன்ன தகவல்களும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றே நம்பவைத்தது. அதுவே நடந்திருக்கிறது.

இருப்பினும், டெல்லி தேர்தல் முடிவை நான் இரண்டு கோணங்களில் பார்க்கிறேன். ஆம் ஆத்மியின் வெற்றி, காங்கிரஸ் இழந்த அரசியல் இடம் என்று இதைப் பேசலாம்.

ஆம் ஆத்மியின் வெற்றி, பாஜக என்ற வகுப்புவாத அரசியல் கட்சிக்கு முடிவுகட்டியிருப்பதில் ஆறுதல் அடைகிறேன். டெல்லியில் பாஜக மிகப்பெரிய வகுப்புவாத அரசியலை முன்னெடுத்தது. பிரதமர், உள்துறை அமைச்சர் தொடங்கி கட்சியின் அடிமட்டத் தொண்டர் வரை வகுப்புவாத அரசியலைப் பகிரங்கமாகப் பேசினர். டெல்லி வாக்காளர்கள் அதனை நிராகரித்திருப்பதில் பெரிய ஆறுதல். ஆனால் அதேவேளையில் காங்கிரஸ் அரசியல் களத்தில் இழந்துள்ள இடம் மிகுந்த வேதனையளிக்கிறது.

135 ஆண்டு கால வரலாறு கொண்ட காங்கிரஸ் அதன் அரசியல் இடத்தை இழந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலில் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகாலமாக என்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிய வகையில் காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய அரசியல் இடத்தை இழந்து வருவதை மிகுந்த வேதனையுடன் பார்க்கிறேன்.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே உற்று உள்நோக்கி சரிசெய்ய வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்தத் தருணத்தில் ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனையைச் செய்து கொண்டு புதிய உத்வேகம், புதிய செயற்திட்டம், புதிய தத்துவ முனைப்போடு காங்கிரஸ் வரவேண்டும். இல்லையெஎன்றால் கட்சியின் எதிர்காலம் மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறேன்.

காங்கிரஸைப் போன்றதொரு கட்சி தோற்றுப்போவது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில், இந்தியாவை அரசியல் ரீதியாக கட்டிப்போட்டிருக்கும் சங்கிலி காங்கிரஸ். அந்தச் சங்கிலி பலவீனமாகும் என்று சொன்னால் இந்தியாவை தழுவிப் பிடிக்கக் கூடிய அரசியல் இயக்கத்தை வீழ அனுமதித்தால் அதை மீண்டும் உருவாக்குவது மிக மிக கடினம்.

காங்கிரஸின் தொடர் தோல்விக்கான காரணம் என நீங்கள் எதைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாகவே தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சியில் கட்சியை பலப்படுத்த தவறிவிட்டது என்பதே தோல்விக்கான பிரதான காரணம் என்று சொல்வேன். இது டெல்லிக்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் பொருந்தும். ஒரே ஒரு தோல்வியைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் காங்கிரஸ் செய்து கொண்ட சமரசங்களின் விளைவே இன்றைய தொடர் தோல்விகள். உதாரணத்துக்கு கர்நாடகாவில் செய்த சமரசத்தை சொல்லலாம். ஏன் தமிழகத்தில் எத்தனை எத்தனை சமரசம் செய்துகொண்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சி சொல்லுமே.

1977-ல் 45% ஆக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கு இன்று 5% என்றளவில் இருப்பதற்கு சமரசங்கள் தானே காரணம். இந்த சமரசம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஆராயப்படக் கூடிய விஷயமும் கூட.

காங்கிரஸ் கட்சியின் முன்னால் தேர்தல் களத்தில் இருக்கும் வாய்ப்புகள் கடினமாக இருக்கின்றன. பாஜக தோற்க வேண்டும். அதற்காக நம்மை நாமே சமரசம் என்ற பெயரில் அழித்துக் கொள்ள வேண்டும் என்ற இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. அந்த இரண்டு வாய்ப்பில் எதைப்பற்றிக் கொள்வது என்ற குழப்பத்தில் கட்சி இருக்கிறது.

தோல்விகளில் இருந்து காங்கிரஸ் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா?

கற்றுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் தான் பரவலாக ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கிறது என்பதையே உணராமல் இருக்கிறது. அடிப்படையையே புரட்டிப் போட வேண்டிய காலகட்டத்தில் காங்கிரஸ் இருக்கிறது.

உங்கள் பரிந்துரைகள் என்னென்ன?

*காங்கிரஸ் கட்சியில் 65-க்கு மேற்பட்ட அனைவருமே தேர்தல் அரசியலிலும் அன்றாட அரசியலிலும் ஈடுபடுவதில்லை என்ற நிலைக்கு வர வேண்டும். கொள்கைகளை வகுப்பது, இளைஞர்களை கொள்கை ரீதியாக வளர்த்தெடுப்பதை மட்டுமே அவர்கள் செய்ய வேண்டும்.

*மாவட்டத் தலைவர் தொடங்கி மாநிலத் தலைவர், தேசியத் தலைவர் வரை இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

*இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த இரண்டு முறை கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

*எம்.எல்.ஏ., பதவியைப் பிடித்தவர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் செயல். அத்தகைய செயல்களுக்கு அனுமதியில்லை என்பது கட்சியின் கொள்கையாக்கப்பட வேண்டும்.

*அதேபோல், வலுவான தேசியத் தலைவர் இருந்தாலும் மாநிலத் தலைமைக்கான இடத்தை மத்தியில் இருப்பவர்கள் நிரப்புவது சரியாக இருக்க முடியாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் தலைமைக்கான முகத்தை அதுவே தேடிக் கண்டுபிடிக்கவும் அந்தத் தலைமைக்குக் குறைந்தது 5 ஆண்டுகள் சுதந்திரமும் தர தேசியத் தலைமை அனுமதி அளிக்க வேண்டும். மாநில அளவில் கட்சியைக் கீழே இருந்து தூசி தட்டி மேலே வரை செம்மைப்படுத்த குறைந்தது 3 ஆண்டுகளாவது ஒரு தலைமைக்குத் தேவைப்படும். இதையெல்லாம் செய்தால்தான் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக ஸ்திரப்படும். இனி மாநிலப் பார்வையோடு காங்கிரஸ் தலைமை இயங்க வேண்டும். அதேவேளையில், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் இதைச் செயல்படுத்த வேண்டும். கட்சியின் அடிமட்டப் பதவியிலிருந்து தேசியத் தலைமை வரை எல்லாப் பதவிகளும் தேர்தல் மூலம் நடக்க வேண்டும். தமிழகத்தில் ஓர் இளைஞரணிக்கான தலைவரைத் தேர்வு செய்யும் முழுப் பொறுப்பும் அகில இந்தியத் தலைமையிடம் இருப்பது சரியாகாது.

இவற்றையெல்லாம் சரிசெய்தால் ஒட்டுமொத்தமாக அடைத்து வைத்திருக்கும் புதிய இளைஞர்களின் வருகைக்கான பாதை திறக்கும்.

ஒருவேளை காங்கிரஸ் ஆம் ஆத்மியோடு கூட்டணி அமைத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

காங்கிரஸ் கட்சிக்குப் பிரமாதமான வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அந்தக் கூட்டணி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக அமைந்த கூட்டணியாக இல்லாமல் அமைப்பு ரீதியாகவும், மக்களைக் கூட்டுவதிலும் ஒன்றுக்கொன்று பக்கபலமாக இருக்கும் கூட்டணியாக அமைந்திருக்க வேண்டும். ஒரு கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் கட்சியாக கூட்டணிக் கட்சி இருந்துவிடக் கூடாது.

இவ்வாறு தனது பார்வைகளை முன்வைத்தார்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x