Published : 28 Jan 2020 07:11 PM
Last Updated : 28 Jan 2020 07:11 PM

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட காந்தியவாதி. பெரும் பணபலம், அதிகாரபலமுடைய நில உடைமையாளர்களைத் துணிந்து எதிர்த்தவர். களத்தில் நின்று போராடிய அவரைப் பழிவாங்க நிலச்சுவான்தாரர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் மீறி, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கித் தந்தது, தமிழகத்தில் பூமிதான இயக்கத்தைப் பரவலாக்கியது, கீழ்வெண்மணியில் மக்களுக்கு நிலங்களைச் சொந்தமாக்கியது, பஞ்சமி நில மீட்பு, சமூக படிநிலையில் கீழ் உள்ள பெண்களுக்கான நில உரிமையை மீட்பது என அவரின் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கணவர் ஜெகந்நாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற சமூகப் பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி அமைப்பு (Land for the Tillers' Freedom). உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பு லாபிட்டி. இந்த அமைப்பின் மூலம், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தவர். 1981-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 19 கிராமங்களில், 1,112 ஏக்கர் நிலத்தை, வங்கிக் கடனில் பெற்று, 1,112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்.

இளம் பருவத்தில் தொடங்கிய அவரது அளப்பரிய பணிகள், இப்போது 94 வயதைக் கடந்தும் தொடர்கின்றன. பல விருதுகளுக்கு மத்தியில் சமீபத்தில் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை மாலை வேளையில் சந்தித்தேன். வயதின் காரணமாக தளர்ந்திருக்கிறாரே தவிர, நிலமில்லா மக்கள் குறித்துதான் இப்போதும் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

தாழ்த்தப்பட்ட, பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இந்நிலைக்கு உயர்ந்திருக்கும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் வாழ்க்கை பெரும் போராட்டங்கள் சூழ்ந்தது. ஆனால், அவற்றையெல்லாம் மகிழ்ச்சியாகத்தான் ஏற்றிருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. கிட்டத்தட்ட 1 மணிநேர உரையாடலில் அவரைப் பற்றிப் பேசியதை விட, காந்தி, வினோபா பாவே, தன் கணவரும் போராளியுமான ஜெகந்நாதன் குறித்துதான் அதிகம் பேசினார். சில கேள்விகளை சில காரணங்களுக்காக மென்மையாகத் தவிர்க்கிறாரே தவிர, அவற்றை மறக்கவில்லை.

குறிப்பாக, தன்னை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கிய நில உடைமையாளர்கள் குறித்துப் பேசுவதை அவர்களின் குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு தவிர்க்கிறார். அவருடன் பேசிய சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன்.

நிறைய விருதுகள் பெற்றிருக்கிறீர்கள். ஒவ்வொரு விருது பெறும் போதும் மனதில் என்ன நினைத்துக்கொள்வீர்கள்?

இந்த விருதுகளால் நான் நினைத்த காரியம் வெற்றியடைந்து விட்டதாக ஒருபோதும் கருதியதில்லை.

உங்கள் தாய் - தந்தையரான ராமசாமி - நாகம்மையார் உங்களின் போராட்ட உணர்வுக்கு விதையாக இருந்தார்களா? சிறுமி கிருஷ்ணம்மாள் எப்படிப்பட்டவராக இருந்தார்?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி தான் என்னுடைய சொந்த ஊர். எங்க அப்பாவுக்கு மனசில ஒரு கவலை. அப்பா அந்தக் காலத்தில் ஜல்லிக்கட்டு மாடுகளைப் பிடிக்கும் வீரர். அதன் மூலமா, அப்பாவுக்கு 6 காணி நிலம் பரிசாகக் கிடைச்சது. 108 கோயில்களுக்குச் சென்று எங்க அப்பா பாடல்கள் பாடி வழிபடுவார். அவருடன் உடன்பிறந்த சகோதரர்களுக்கு இந்தத் திறமை இல்லை என அப்பாவுக்குக் கவலை. "கடவுள் எங்களுக்கு கண்ணைக் குத்தி கம்பைக் கொடுத்து விட்டான். படிக்காமல் இருந்துவிட்டோம். எனக்குப் பிறந்த குழந்தைகள் படிக்காமல் இருக்கக்கூடாது" எனச்சொல்வார். சின்ன வயசுல படிக்க முடியாம, மாடு மேய்ச்சிட்டு இருந்ததைத்தான் அப்படிச் சொல்வார். காலையில் சரியாக 6 மணிக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும். கிராமத்து ஜனங்க எல்லாம் உட்கார்ந்து கேட்கும்படியாக நாங்கள் படிக்க வேண்டும். அரிச்சந்திரன் நாடகம் என எல்லாவற்றையும் வீட்டு வாசலில் உட்கார்ந்து ஜனங்க கேட்க வேண்டும். காலையில் 4 மணிக்கெல்லாம் புத்தகத்தை எடுத்து, அவருக்குப் படிக்கத் தெரியவில்லையென்றாலும் எங்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். மிக ஏழ்மையான நிலையிலும் நாங்கள் படிக்க வேண்டும் என அம்மாவும் அப்பாவும் விரும்பினர். என் அம்மாவை நெனச்சு நான் தினமும் கும்பிடுவேன். நான் அம்மாவின் வளர்ப்பு என்று மட்டும் சொல்லி விட முடியாது. அப்பாவுடைய வளர்ப்பும் தான்.

பெண் குழந்தைகள் படிக்க முடியாத சமூகத்திலிருந்து பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறீர்கள். பள்ளி மேற்படிப்பு படிப்பதற்கே நீங்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருந்ததா?

என் சொந்த கிராமமான பட்டிவீரன்பட்டியில் 7-ம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம் இருந்தது. பொம்பளப் பிள்ளைங்க அதுக்கு மேல படிக்க வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால், எனக்கு மதுரை சென்று படிக்க வேண்டும் என்று எண்ணம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். என் மீது பள்ளித் தலைமையாசிரியர் ஆலீஸ் மகாராஜாவுக்குப் பெரும் ஆர்வம். பள்ளியில் எனக்கு நிறையப் பரிசுகள் கிடைத்தன. அங்கு 11-ம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு டிவிஎஸ் நிறுவனர் டி.வி.சுந்தரம் மகள் சௌந்திரம்மாளிடம், "இந்தப் பொண்ண படிக்க வைத்து விடுங்கள். உங்களின் பெயர் சொல்லும்" என தலைமையாசிரியர் ஒப்படைத்து விட்டார்.

சௌந்திரம்மாள்தான் என்னை மேல்படிப்பு படிக்க வைத்தார். அவர் ஆதரவற்ற மகளிருக்காக விடுதி ஒன்றை நடத்தினார். என்னைப் போன்ற 18 பேரைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். என்மீது அவருக்குத் தனி ஆர்வம் . தினமும் இரவில் 10 மணிக்கு காரை எடுத்துக்கொண்டு மதுரை வீதிகளில் கிளம்பி விடுவார். ஒரு போலீஸையும் அழைத்துக்கொள்வார். என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அப்போது ஏழைப் பெண்கள், கணவனை இழந்த இளம்பெண்கள் தெருவில் நிற்பார்கள். அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு விடுதியில் சேர்த்துக்கொள்வார். அவர்களுக்குப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுத்து முன்னேற்றுவார். அந்தக் காலத்தில் 4-ம் வகுப்பு படித்திருந்தாலே நர்ஸ் வேலை கிடைக்கும். அங்கிருந்த 52 ஆதரவற்ற பெண்களையும் 4-ம் வகுப்பு வரை படிக்க வைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார். அப்படி, சௌந்திரம்மாளுடன் இருந்து, ஆரம்பத்தில் நான் மேற்கொண்ட சமூகப் பணி என்பது, கணவனை இழந்த இளம் பெண்களுக்குச் சேவை செய்வதுதான். அதன் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, ஆயிரம் பேர் ஆண்கள், 35 பேர் பெண்கள். பொண்ணுங்க வகுப்புக்குப் போகும்போது தலையைக் கவுத்துக்கிட்டுத்தான் போவாங்க. எனக்கு அது எரிச்சலைத் தந்தது. என் கிராமத்திலிருந்து முதலில் கல்லூரிக்குச் சென்ற முதல் பெண் நான்தான்.

காந்திய வழியில் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு காந்தியைப் பார்த்தவுடன் தான் வந்ததா அல்லது அதற்கு முன்னரே காந்தி குறித்து அறிந்திருந்தீர்களா?

காந்தியைப் பார்ப்பதற்கு முன்பு அவரைப் பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது 'காந்தியப் படிப்பு வட்டம்' என்ற அமைப்பை நடத்தி வந்தேன். எனக்கு அப்போதுதான் காந்தியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 1946-ம் ஆண்டு, பிப்.2-ம் தேதி, காந்தி மதுரை வந்திருந்தபோது அவரை 3 நாட்கள் அருகிலிருந்து கவனிப்பதற்காக சௌந்திரம்மாள் என்னை நியமித்தார். அந்த 3 நாட்களில் காந்தி குறித்த எண்ணங்கள் அதிகமாயின. புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. விவேகானந்தர் புத்தகங்கள், பாரதியார் பாடல்களை அதிகம் படிக்க ஆரம்பித்தேன்.

சட்டென பாட ஆரம்பிக்கிறார்.

தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை

நேரே இன்றெனக்குத் தருவாய்”...

வயோதிகத்தின் உடல் நடுக்கத்தைத் தாண்டியும் தெளிவாகப் பாடி முடித்தார் கிருஷ்ணம்மாள்.

காந்தியைத்தான் முதலில் சந்தித்திருக்கிறீர்கள். ஆனால், விநோபா பாவேவுடன் இணைந்து பணியாற்றினீர்கள். அவரை எப்படிக் கண்டுகொண்டீர்கள்?

விநோபாஜி 10 வயதிலேயே சந்நியாசியாகச் சென்றவர். காந்தியுடன் இணைந்து செயல்பட்டார். பி.எட். முடிக்கும் போதுதான், விநோபா பாவே குறித்தும் பூமிதான இயக்கம் குறித்தும் அறிந்தேன். அதன்பின், புத்தகங்களையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு அவருடன் நடைபயணத்திற்குச் சென்றேன். பெனாரஸுக்குச் சென்றுதான் விநோபாஜியின் நடைபயணத்தில் முதலில் இணைந்தேன்.

எனக்கு முன்பே நிர்மலா தேஷ்பாண்டே, குஜராத்தில் இருந்து மீராபட் , கேரளாவில் இருந்து ராஜம்மா ஆகிய சகோதரிகளும் அவருடன் இணைந்து செயலாற்றி வந்தனர். விநோபாஜிக்கு நன்றாகத் தமிழ் தெரியும். அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அருட்பெருஞ்ஜோதி பாடுவார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'பஜகோவிந்தம்' என சொல்லிக்கொண்டே வேகமாக நடப்பார். அந்தக் காலத்தில் மின்விளக்கெல்லாம் இல்லை. அரிக்கன் விளக்கைப் பிடித்துக்கொண்டே நடப்பார். அதன்பிறகு 6 மணிக்கு ஒரு 100 கிராம் தயிர் சாப்பிடுவார். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக்கொண்டே கீதையின் ஒரு பகுதியை மனப்பாடம் செய்து விடுவார். அதன்பிறகு ஒரு மணிநேர இடைவேளையில் ஒரு கப் தயிர், கீதையின் ஒரு பகுதி எனப் போகும். இப்படி சாயங்காலம் வரைக்கும் நடக்கும். 18 பகுதிகளை அப்படியே மனப்பாடம் செய்வார்.

விநோபா பாவேவுடன் இருந்ததால்தான் உங்களுக்கும் ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்ததா?

அவராலும் வந்தது. இருந்தாலும் சிறுவயதிலேயே ஆன்மிகப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய 11-வது வயதில் மதுரையில் படித்துக்கொண்டிருந்தபோது, கிருபானந்த வாரியார் அருட்பெருஞ்ஜோதி பற்றி செய்த பிரசங்கத்தைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதைக் காதில் கேட்டுவிட்டு அப்படியே இருந்து விடக் கூடாது என்பதால், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் புதுமண்டபம் இருக்கிறது. அங்கு ஒரேயொரு புத்தகக் கடை இருக்கும். அங்கு போய் நிற்பேன். "எனக்குக் கொஞ்சம் 'பாக்கெட்' புத்தகங்கள் கொடுங்கள் படித்துவிட்டுத் தருகிறேன்" என கடைக்காரரிடம் கேட்பேன். கையில் காசு இருக்காது. அவர் ஒரு வாரத்திற்கு வேண்டிய புத்தகங்களைப் படிக்கத் தருவார். படித்துவிட்டுத் திரும்பவும் கடைக்காரரிடம் கொடுப்பேன். இப்படி தேவாரம், திருவாசகம், அருட்பெருஞ்ஜோதி, திருவருட்பா என எல்லாவற்றையும் வாங்கி ஆர்வமாகப் படித்தேன்.

நிலமீட்புப் போராட்டம், காந்திய வழி, விநோபா பாவேவுடன் நடைபயணம் என இருந்ததால் மிக எளிமையான வாழ்க்கை வாழ நேர்ந்ததா அல்லது இயல்பிலேயே நீங்கள் அப்படித்தானா?

படிக்கும் போதே பட்டுத்துணியைக் கையில் தொடக்கூடாது, நகைகளைக் கையில் தொடக்கூடாது என முடிவெடுத்தேன். அதனால் தான் எனக்கு காந்திய வாழ்க்கை பொருத்தமாக இருந்தது.

உங்களுடையது சாதி மறுப்புத் திருமணம், உங்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதா? உங்களின் கணவர் ஜெகந்நாதன் பற்றிச் சொல்லுங்கள்?

மக்களுக்காக 16 வயதில் சிறை செல்லத் தொடகிய எங்கள் வீட்டய்யா (கணவர் ஜெகந்நாதன்), கடைசிக் காலம் வரை சிறை சென்றார். என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என அவர் என்னிடம் கேட்டபோது அதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டேன். அதன்பிறகு என்னை அழைத்து வருவதற்கு சுஜாதா கிருபாளினி, இந்திரா தேஷ்முக், சௌந்திரம்மாள் என ஒரு கூட்டமே வந்து என்னைச் சமாதானப்படுத்தியது. மாதம் தவறாமல் மொட்டை போடும், சிறைக்குச் செல்லும், ராமகிருஷ்ணா மடத்துக்குச் செல்லும் ஒருவருக்கு எப்படிப் பெண் தருவது என எங்கள் வீட்டில் எதிர்த்தனர்.

கணவர் ஜெகந்நாதனுடன் போராட்டக் களத்தில்

ஜே.சி.குமரப்பாவின் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. நூற்ற நூலை எடுத்து என் கழுத்தில் போட்டார். அவ்வளவுதான் கல்யாணம் முடிந்துவிட்டது. ஒரு பிரச்சினை என்றால் உடனேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார். உண்ணாவிரத்தின்போது தண்ணீர் கூட குடிக்க முடியாது. வாந்தி, மயக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டார். வாந்தி எடுக்கும் போதேல்லாம், "நான் செத்துப்போவேன்னு நெனைக்காத, உள்ளிருக்கும் கெட்டதெல்லாம் இதனால் வந்துவிடும்" என்பார்.

விவசாயக் கூலி மக்களிடையே நான் காணும் பிரச்சினைகளை அவரிடம் சொல்வேன். உடனேயே உண்ணாவிரதம் இருப்பார். கடைசி வரை இணைந்தே செயல்பட்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மகன் பூமிக்குமார், கம்போடியாவில் போர் பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவமனை நடத்துகிறார். மகள் சத்யா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். என்னைக் காட்டிலும் அவர்கள் நல்லது செய்கின்றனர். என் கணவர் இல்லாமல் நான் இந்த நிலைமையை அடைந்திருக்க முடியாது.

கிராமங்களில் நில உடைமையாளர்களின் நிலங்களைப் பொதுவுடைமையாக்க கடும் எதிர்ப்பு வந்திருக்குமே. எப்படிச் சமாளித்தீர்கள்?

நிலமற்றவர்களின் கஷ்டத்தைச் சொல்லி மாளாது. நான் ஒரு உறுதியுடன் இருந்தேன். காலில் செருப்பு போடக்கூடாது. அதிகாலையிலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விட வேண்டும். நாள் முழுக்க ஒரு பாட்டில் நீராகாரம், 4 வாழைப்பழங்கள். இவற்றை சாப்பிட்டுக்கொண்டே நடக்க வேண்டும். இருட்டானவுடன் ஏதேனும் ஒரு குடிசையில் மக்களுடன் தங்கிக்கொள்வேன். அவர்கள் கொடுப்பதைச் சாப்பிடுவேன். குலமாணிக்கம் என்ற ஊரில்தான் முதலில் நிலங்களை நில உடைமையாளர்களிடமிருந்து நிலமில்லாதவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். அந்தக் காலத்தில் நல்லவர்களும் கெட்டவர்களுமாக நிலச்சுவான்தாரர்கள் இருந்து விட்டனர். அவற்றைத் திரும்பியும் சொல்லி அந்தக் குடும்பத்தின் மனதை நோகடிக்கக் கூடாது. போராடினேன். சிறைக்குச் சென்றேன். சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தேன். அவற்றையெல்லாம் இப்போது சொல்லிக் கொண்டிருந்தால், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு வருத்தமாக இருக்கும். அவற்றை ஏன் நாம் சொல்ல வேண்டும்? நல்ல மனுசங்களும் இருந்தாங்க. கொஞ்சம் கஷ்டப்படுத்துறவங்களும் இருந்தாங்க.

பூமிதான இயக்கம், கிராம தான இயக்கங்களின் போது, நில உடைமையாளர்கள் எப்படி தங்களின் நிலங்களை தானமாகக் கொடுக்க முன்வந்தார்கள்? எப்படி அந்த மனமாற்றம் வந்தது?

கிராமங்கள்தோறும் வினோபா பாவேவுடன் நடப்போம். பல மாநிலங்களுக்கு அப்படிப் பயணித்திருக்கிறோம். நிலச்சுவான்தாரர்கள் தாங்களாக மனமாற்றம் அடைந்து நிலங்களைத் தரவில்லை. வினோபா பாவே தமிழகம் வரும்போது அவருக்காக சிலர் நிலங்களை தானமாகக் கொடுத்தனர். அவர் நிலமற்றவர்களுக்கு அதனைத் தானமாகக் கொடுத்தார். இப்போது அப்படிக் கொடுப்பதற்கெல்லாம் யாரும் இல்லை. ராமகிருஷ்ணா ரெட்டியார் என்பவர் 100 ஏக்கர் நிலத்தையும் மாந்தோப்பையும் தானமாக அளித்தார். இப்படி நிறைய பேர் அளித்திருக்கின்றனர். மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் சிறுபகுதிகளையும் கண்டறிந்து மீட்டு உரியவர்களுக்குக் கொடுத்தோம்.

உயிர்களின்பால் அன்பு கொண்ட கிருஷ்ணம்மாள்

கீழவெண்மணி படுகொலைக்குப் பிறகு பல குடும்பங்களுக்குச் சொந்த நிலம் வாங்கித் தந்தீர்கள். எப்படி அந்த மக்களை ஆற்றுப்படுத்தினீர்கள்?

கீழவெண்மணி படுகொலை நடப்பதற்கு முந்தைய நாள் இரவு தூங்காமல் இருந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகை. பிரகாசமான நிலா வெளிச்சம். இந்த வெளிச்சத்தில் ஏன் தூங்க வேண்டும் என்று வீட்டின் வெளியிலேயே தான் தூங்காமல் விழித்திருந்தேன். மறுநாள் காலையில் பத்திரிகையில் செய்தியை படித்தவுடன், உடனடியாக குன்றக்குடி அடிகளாருக்கு போன் செய்தேன். அவர் கார் கொண்டு வந்தார். எங்க வீட்டு ஐயா (கணவர்) திருநெல்வேலியில் இருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு கீழவெண்மணிக்குச் சென்றோம்.

அங்கிருந்த மக்களே பயந்து ஊரை விட்டு பாதி பேர் ஓடிவிட்டனர். அவர்களுக்கு மன தைரியத்தைக் கொடுப்பதற்கு 3 ஆண்டுகள் பாடுபட்டேன். எங்கு பார்த்தால் போலீஸ்தான் இருந்தனர். மக்கள் நடுங்கிக்கொண்டு இருந்தனர். வெண்மணிப் படுகொலையின் போது, ஒவ்வொரு நிலச்சுவான்தாரர் வீட்டையும் பாதுகாக்க, ஒவ்வொரு வீட்டிலும் 100 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸார் எங்களை அங்குள்ள மக்களுடன் குடிசையில் தங்க விட மாட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டும். அப்போதெல்லாம் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்தோம். இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது. நான் கஷ்டப்படுவதைப் பார்த்து, கூட்டம் கூட்டமாக பெண்கள் என்னுடன் வர ஆரம்பித்து விட்டனர். நான் கூப்பிட்ட குரலுக்கு பெண்கள் எல்லோரும் வந்துவிடுவார்கள். முதல்லதான் பயந்தாங்க. நான் சிறைக்குச் செல்வதையெல்லாம் பார்த்து என் கூடவே வந்துவிட்டார்கள். வெண்மணியில் நிலங்களைப் பெண்களுக்குச் சொந்தமாக்கினோம்.

கீழவெண்மணி படுகொலையின்போது அன்றைய முதல்வர் அண்ணா எடுத்த நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

அவையெல்லாம் இப்போது வேண்டாமே.

ஏன் உங்களுக்கு தேர்தல் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது?

நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. யாருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்றிருந்தேன். எந்தத் தேர்தலிலும் நான் வாக்களித்தது கிடையாது. எந்தக் கட்சிக் கூட்டங்களுக்கும் செல்லமாட்டேன்.

நிலமற்ற பெண்களுக்கு நிலத்தைச் சொந்தமாக்குவதே வாழ்நாள் இலக்கு.

இந்தியா முழுக்க பல மாநிலங்களுக்குப் பயணித்திருக்கிறீர்கள். தமிழகத்திற்கும் அம்மாநிலங்களுக்கும் இப்போது உள்ள வேறுபாடுகள் என்ன?

தமிழகம் எவ்வளவோ மாறிவிட்டது. பிஹார் அப்படியேத்தான் இருக்கிறது.

தமிழக கிராமங்களின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என நினைக்கிறீர்கள்?

நில உடைமையாளர்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் நிலைமையெல்லாம் இப்போது மாறிவிட்டது. அதில் சில நில உடைமையாளர்கள் மக்களுக்ககாவே நல்ல பள்ளிக்கூடங்கள் வைத்து நடத்துகின்றனர். கிராமங்களின் நிலைமை நன்றாக மாறியிருக்கிறது. இனி அந்தப் பக்கங்களில் சாதி, மதம் என பேசிக்கொண்டு யாரும் வர முடியாது. அப்படி வந்தால் பெண்களே அவர்களை துரத்திவிடுவார்கள். அதில் எனக்கு சந்தோஷம். நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் முன்பு இருந்த நிலை மாறிவிட்டது. திருப்பி அடிமைப்படுத்துவதற்கு மக்கள் விட மாட்டார்கள். எழுந்துவிடுவர். குறிப்பாக பெண்கள் எழுந்துவிடுவர். எவ்வளவு தைரியமாக பெண்கள் வந்துவிட்டனர். படிக்கின்றனர். ஆனால், பெண்களுக்கு அநாவசியச் செலவுகள் செய்யும் பழக்கம் போகவில்லை. காது குத்துதல், சடங்கு என ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அவர்கள் நிலங்களை தங்கள் உடைமையாக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கும், நீங்கள் நடத்திய போராட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்?

இப்போது நடக்கும் போராட்டங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வால் நடக்கின்றன. நாங்கள் போராட்டமென்றால் உட்காருவோம். பிரார்த்தனை செய்வோம். அதைக் கேட்டே கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெண்களின் முன்னேற்றத்திற்கான பணிகள்

காந்தியவாதிகள் எளிமையான வாழ்க்கை முறையில் இருந்தாலும் மிக பாதுகாக்கப்பட்ட சூழலிலேயே அவர்கள் இருப்பதாக விமர்சனம் இருக்கிறதே?

காந்தியவாதிகளால் தங்களால் முடிந்தவரை மக்களுக்கு நல்லது செய்கின்றனர். இப்போது யாரும் காந்தியவாதிகள் இல்லை. என்னைப் போன்றவர்கள் அசந்து உட்கார்ந்து விட்டோம். எனக்கு 94 வயதாகி விட்டது.

இத்தனை ஆண்டுகால போராட்டங்களில் உங்களின் இலக்கை அடைந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?

எல்லோருக்கும் நிலம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றி அடைந்திருக்கிறேன். எப்படியாவது நிலமற்ற பெண்களுக்கு நிலம் வாங்கித்தர வேண்டும் என நினைத்தேன். அதை வெற்றியுடன் செய்திருக்கிறேன். கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும் பெண்களின் நிலைமையைச் சரிசெய்ய திட்டம் வைத்துள்ளேன். அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் கால்கள் இன்னும் ஓயவில்லை

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x