Published : 26 Jan 2020 03:33 PM
Last Updated : 26 Jan 2020 03:33 PM

அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 15 பெண்கள்: யார் தெரியுமா?

அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவில் இருந்த பெண்களுள் சிலர்

1950-ம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாள், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசும், மக்களும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்திய நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த பெண்கள் பற்றிய குறிப்புகள் வெகுசில தான் உள்ளன. அந்தக் குழுவில் பெண்கள் இருந்ததனால்தான் பெண்களுக்கு பல உரிமைகள் கிடைக்க வழிவகை ஏற்பட்டது.

அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 389 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள்தான் பெண்கள். அவர்கள் மற்ற உறுப்பினர்களுடன் வாதாடினர், விவாதித்தனர். நேர்மையான ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு சாத்தியமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.

அரசியலமைப்பு சட்ட வரைவை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்த இந்த 15 பெண்களை வெகு சிலருக்குத்தான் தெரியும். அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் எப்படி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் தனிப்பங்கு வகித்தனரோ அதே அளவுக்கு அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஹன்சா மேத்தா, பூர்ணிமா பானர்ஜி, துர்காபாய் தேஷ்முக் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்ட வீரர்களாக, வழக்கறிஞர்களாக, சமூக சீர்திருத்தவாதிகளாக, போராளிகளாக, அரசியல்வாதிகளாக எல்லோருக்குமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க இவர்கள் வழிவகுத்தனர். சிறுபான்மையினர் உரிமைகள், இட ஒதுக்கீடு, நீதித்துறை, வழிகாட்டும் நெறிகள், பெண்களின் இடஒதுக்கீடு, பள்ளிக்கல்வி ஆகியவற்றுக்கான கொள்கைகளை உருவாக்குவதில் இவர்கள் பங்காற்றியுள்ளனர்.

அம்மு சுவாமிநாதன்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனக்கரா எனும் கிராமத்தில் 1894-ம் ஆண்டு பிறந்தவர் அம்மு சுவாமிநாதன். அன்னி பெசன்ட், மார்கரெட் கசின்ஸ், மாலதி பட்வர்த்தன், தாதாபாய், அம்புஜம்மாள் ஆகியோருடன் இணைந்து, 1917-ம் ஆண்டு இந்திய பெண்கள் கூட்டமைப்பை தொடங்கினார். இதன்மூலம் பெண் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்க்க முற்பட்டார். 1934-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1943-ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்ற அம்மு சுவாமிநாதன், அதன் விளைவாக வேலூர் சிறையில் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார். வேலூர் சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறையில் நிலவிய சாதிய பாகுபாடுகளை அறிந்தார். உதாரணமாக, சிறையில் துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை சாதியின் பெயரால் அங்கிருந்தவர்கள் இழிவுபடுத்த நேர்ந்த போது, அதனை எதிர்த்துக் கேள்வியெழுப்பினார். தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் சாதிய பகுபாடுகள், தீண்டாமையை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருந்தார். 1946-ம் ஆண்டு மெட்ராஸ் தொகுதியிலிருந்து அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவ.24, 1949 அன்று, வரைவு அரசியலமைப்பை அம்பேத்கர் தாக்கல் செய்தபோது நடந்த விவாதத்தில், "இந்தியா தங்கள் நாட்டின் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதில்லை என வெளியில் இருப்பவர்கள் கூறுகின்றனர். நாட்டில் உள்ள மற்ற அனைத்து குடிமக்களுக்கும் இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தை நாமே இயற்றியுள்ளோம் என நாம் கூறிக்கொள்ளலாம்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார் அம்மு சுவாமிநாதன்.

மக்களவைக்கு 1952-ம் ஆண்டும், மாநிலங்களவைக்கு 1954-ம் ஆண்டும் அம்மு சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீவிர திரைப்பட ஆர்வலரான அம்மு சுவாமிநாதன், சத்யஜித் ரே தலைவராக இருந்த திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

தாக்‌ஷாயினி வேலாயுதன்

1912-ம் ஆண்டு, ஜூலை 4-ம் ஆண்டில் கொச்சியில் உள்ள போல்கட்டில் பிறந்தவர் தாக்‌ஷாயினி. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரான இவர், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக போராடினார். சிறு வயதிலிருந்தே தன் சமூக மக்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறைகளை கேள்வியெழுப்பினார். அவர் சார்ந்த சமூகத்தில் நாகரிகமான பெயர் வைப்பது கூட சாத்தியமற்றது. அதைத்தாண்டி அவரின் பெற்றோர்கள் துர்கா என பொருள்படும் தாக்‌ஷாயினி பெயரை அவருக்கு சூட்டினர். அந்த சமூகத்திலிருந்து உயர் கல்வி படிக்கும் முதல் தலைமுறையாக தாக்‌ஷாயினி கருதப்படுகிறார். மேலும், அச்சமூகத்திலிருந்து மேலாடை அணிந்த முதல் பெண்ணாகவும் தாக்‌ஷாயினி அறிதப்படுகிறார். புலையர் மகாஜன சபா என்ற அமைப்பினர் நடத்திய போராட்டங்களல் தாக்‌ஷயினி ஈர்க்கப்பட்டார்.

1940-ம் ஆண்டு தலித் தலைவரான கேலன் வேலாயுதன் என்பவரை தொழுநோயால் பாதிக்கப்பட்டவரின் தலைமையில், காந்தி, காஸ்தூரிபாய் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

மாநில அரசால் கொச்சி மாநிலங்களவை கவுன்சிலுக்கு தாக்‌ஷாயினி 1946-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் பெண் என்ற பெருமைக்குரியவர் தாக்‌ஷாயினி தான். அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களின் போது, தலித் மக்கள் சார்ந்த பல பிரச்சினைகளில் அம்பேத்கர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக இருந்தவர் தாக்‌ஷாயினி.

அந்நாட்களில் பாலின ரீதியாக எதிர்மறை கருத்துகளை எதிர்கொண்டவர். நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தாக்‌ஷாயினி பேச முற்பட்ட போது, சபை தலைவர் 'உங்கள் நேரம் முடிந்துவிட்டது. பெண் என்பதாலேயே நேரம் கடந்து பேச அனுமதிக்கிறேன்' என்றார். தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 17 உருவாக மிகவும் ஆதரவாக இருந்த தாக்‌ஷாயினி, சாதியை ஒழிக்க அம்பேத்கர், காந்தி ஆகியோரின் வழிகளை பின்பற்றினார். தன் இறுதிக்காலங்களில் அம்பேத்கரிய பெண்களை ஒருங்கிணைத்து மகிளா ஜக்ரிதி பரிஷத் எனும் அமைப்பை உருவாக்கி, குடிசைப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றினார்.

பேகம் ஐசாஸ் ரசூல்

உத்தரப்பிரதேச மாநிலம் மாலெர்கோட்லாவில் ராஜ வம்சத்தில் பிறந்த பேகம் ரசூல், நிலக்கிழாரான நவாப் ஐசாஸ் ரசூலை திருமணம் செய்துகொண்டார். அரசியலமைப்பு சபையில் இருந்த ஒரே முஸ்லிம் பெண் இவர் மட்டும் தான். முஸ்லிம் லீக் கட்சியில் இவரும் இவரது கணவரும் இணைந்து பணியாற்றினர். 1937-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப்பிரதேச தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் பேகம்.

1950-ல் முஸ்லிம் லீக் கட்சி கலைக்கப்பட்ட பின்னர், பேகம் ரசூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநிலங்களவைக்கு 1952-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக 1969-1990 வரை பதவி வகித்தார். 1969-1971 வரை மாநில சமூக நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது சமூக பங்களிப்புக்காக பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது.

துர்காபாய் தேஷ்முக்

இரும்புப் பெண்மணி என அறியப்பட்டவரான இவர், 1909, ஜூலை 15 அன்று ஆந்திரபிரதேசத்தின் ராஜமுந்திரியில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். 12 வயதிருக்கும் போதே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற இவர், 1930, மே மாதம் அப்போதைய மெட்ராஸில் உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும் பங்கேற்றார்.

1936-ம் ஆண்டு ஆந்திர மகிளா சபா என்ற அமைப்பை உருவாக்கி, மெட்ராஸ் மாகாணத்தில் கல்வி மற்றும் சமூக நலனுக்கான நிறுவனமாக அதனைக் குறுகிய காலத்திலேயே கட்டமைத்தார். 1942-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் சில காலம் இருந்துள்ளார்.

காந்தியை தன் தலைவராகக் கொண்ட இவர், தன் சொந்த ஊரில் பெண்கள் நெசவு மற்றும் நூற்பு வேலைகளைக் கற்பதற்கான பள்ளிகளை நடத்தினார். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்ட இவரை இந்திராகாந்தி பின்னாளில், 'இந்தியாவில் சமூக பணிகளின் தாய்' என புகழப்பட்டார்.

மத்திய சமூகநலத்துறை வாரியம், பெண் கல்விக்கான தேசிய கவுன்சில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கான தேசிய குழு, ஆகிய மத்திய அரசு அமைப்புகளின் தலைவராக இருந்தவர் துர்காபாய். நாடாளுமன்ற உறுப்பினராகவும், திட்டக்குழு உறுப்பினராகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் இவர்.

டெல்லியில் செயலட்ட ஆந்திர கல்வி சொசைட்டியிலும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கல்வியை பரப்புவதற்காக இவர் மேற்கொண்ட பணிகளுக்காக 1971- ல் இவருக்கு 'நேரு இலக்கிய விருது வழங்கப்பட்டது.1975- ம் ஆண்டு, பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். சமூக நலம் தொடர்பான பல சட்டங்கள் இயற்றப்பட காரண கர்த்தாவாக இருந்தவர் இவர்.

ஹன்சா ஜீவ்ராஜ் மேத்தா

ஜூலை 3, 1897-ல் சூரத்தில் பிறந்த ஹன்சா, பரோடா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் சமூகவியல் படித்தார். சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல் கல்வியாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். குஜராத்தி மொழியில் குழந்தைகளுக்கான பல கதைகளை எழுதியுள்ளார். 'குல்லிவர்ஸ் டிராவல்ஸ்' உட்பட பல ஆங்கில கதைகளை குஜராத்தி மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். 1926-ம் ஆண்டு பாம்பே ஸ்கூல்ஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1945-46 இல் அகில இந்திய பெண்கள் மாநாட்டு தலைவரானார்.

ஐதராபாத்தில் நடந்த அகில இந்திய பெண்கள் கருத்தரங்கில் அவர் ஆற்றிய தலைமை உரையில் பெண் உரிமைகளுக்கான சாசனத்தை முன்மொழிந்தார். பல பல்கலைக்கழகங்களில் 1945-1960 காலகட்டத்தில் துணைவேந்தர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார். 1937-1939, 1940-1949 பாம்பே தொகுதியிலிருந்து அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்து சட்ட மசோதா உருவாக்கப்பட்டதற்கான தேர்வுக்குழுவிலும் இருந்தார்.

கமலா சௌத்ரி

லக்னோவில் உள்ள பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும், கமலாவால் கல்வியை தொடர்வது போராட்டமாகவே இருந்தது. 1930-ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராக இருந்த கமலா, மக்களவைக்கு தன் 70-வது வயதில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாவலாசிரியராகவும் புகழ்பெற்ற கமலா சௌத்ரியின் கதைகள், இந்தியா நவீன தேசமாக உருவெடுப்பதற்கான பெண் குரலாக பேசியது.

லீலா ராய்

அசாமின் கோலாராவில் 1900-ம் ஆண்டு பிறந்தவர் லீலா ராய். 1921-ல் பெதுனே கல்லூரியில் பட்டம் பெற்றார். அனைத்து வங்காள பெண்கள் வாவாக்குரிமை கமிட்டியின் துணை செயலாளராக பெண்களின் உரிமைகளைக் கோருவதற்கான பல கூட்டங்களை நடத்தினார். முஸ்லிம் பெண்களின் கல்விக்காகவும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

1923-ம் ஆண்டு தன் நண்பர்களுடன் இணைந்து, தீபாலி சங்கா எனும் அமைப்பை ஆரம்பித்தார். முக்கிய தலைவர் பங்கேற்ற அரசியல் கூட்டங்களை நடத்தும் அமைப்புகளையும் தோற்றுவித்தார். 1926-க்குப் பிறகு டாக்கா மற்றும் கொல்கத்தாவில் உள்ள மாணவிகளின் கூட்டமைப்பான சாத்ரி சங்கா எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். ஜெய்ஸ்ரீ எனப்படும் இதழின் ஆசியராகவும் இருந்துள்ளார்.

1937-ம் ஆண்டு, காங்கிரஸில் இணைந்த இவர், அதற்கடுத்த ஆண்டில் வங்க மாகாண காங்கிரஸ் பெண்கள் அமைப்பை ஏறபடுத்தினார். 1946-ம் ஆண்டு அரசியலமைப்பு சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட லீலா ராய், வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் ஆவார். எனினும், இந்திய பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை சில மாதங்களிலேயே ராஜினாமா செய்தார். இந்திய பிரிவினைக்குப் பிறகு, கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்காகவும் கிழக்கு வங்கத்திலிருந்து வந்த அகதிகளுக்கும் இல்லங்களை நடத்தினார். நேதாஜியின் நெருக்கமான நண்பராக அறியப்பட்டவர் லீலா ராய்.

மாலதி சௌத்ரி

1904-ம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் பிறந்தவர் மாலதி. அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் நிரம்பிய குடும்பத்தைச் சேர்ந்த மாலதி, வழக்கமான அரசியல் பாதையை தேர்ந்தெடுக்காமல், மக்களுக்காக மக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்தார். 16 வயதில் சாந்திநிகேதனில் அனுமதிக்கப்பட்டதால், சிறு வயதிலேயே ரபீந்திரநாத் தாகூரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார்.

கிராமப்புற வளர்ச்சிக்காக ஒரிசாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். விவசாயிகளுக்கான அமைப்பை உருவாக்கிய இவர், அதன் மூலம் ஜமீன்தார் முறையை ஒழிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். உப்பு சத்தியாகிரகத்தின் போது தன் கணவர் நபாக்ருஷ்ணா சௌத்ரியுடன் இணைந்து கங்கிரஸில் சேர்ந்தார்.

1933-ல் 'உத்கல் காங்கிரஸ் சோசியலிஸ்ட் தொழிலாளர்கள் லீக்' அமைப்பை நடத்தினார். இது இந்தியாவின் சுதந்திரமாக இயங்கும் முதல் பொதுவுடைமை அமைப்பாகக் கருதப்படுகிறது. மார்க்ஸிய கொள்கைகளால் கவரப்பட்டவரான மாலதி, இந்த அமைப்பின் மூலம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைய முற்பட்டார். டிச.9, 1946-ம் ஆண்டில் அரசியலமைப்பு சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், இதிலிருந்து குறுகிய காலத்திலேயே விலகி காந்தியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியது குறித்து பின்னர் குறிப்பிட்ட மாலதி, "ஆண் நீதிபதிகளின் முன்பு உதவியற்ற பள்ளி மாணவியாக" தான் அச்சபையில் உணர்ந்ததாக குறிப்பிட்டார். 1975-ல் நெருக்கடி நிலையின் போது இந்திராகாந்தியை கடுமையாக விமர்சித்தார். அதன் விளைவாக சிறையிலும் தள்ளப்பட்டார். 1997-ம் ஆண்டு மாலதி இறந்தார்.

பூர்ணிமா பானர்ஜி

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர் பூர்ணிமா. 1930, 40-களில் சுதந்திர போராட்டத்தில் முன்னிலை வகித்தவர். சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக சிறை சென்றவர். அரசியலமைப்பு சபை விவாதங்களில் பொதுவுடைமை கருத்துகளை மொழிந்ததில் முக்கிய நபராவார்.

ராஜ்குமாரி அம்ரித் கவுர்

1889-ம் ஆண்டு, பிப்ரவரி 2-ம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அம்ரித் கவுர் பிறந்தார். இந்தியாவின் முதல் சுகாதாரத் துறை அமைச்சரான இவர், பத்தாண்டுகளுக்கு இப்பதவியை வகித்தார். இங்கிலாந்தில் படித்த இவர், மகாத்மா காந்தியின் செயலாளராக 16 ஆண்டுகள் பணியாற்றினார். மிகவும் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவியவர் இவர்தான். எய்ம்ஸின் தன்னாட்சி அதிகாரத்துக்கும் போராடினார்.

இந்திய காசநோய் சங்கம், தொழுநோய் ஆராய்ச்சி மையம் முதலியவற்றை ஏற்படுத்தினார். 1964-ம் ஆண்டு அவர் இறந்த போது, தன் தேச சேவையில் இளவரசியாக திகழ்ந்தவர் என 'தி நியூயார்க் டைம்ஸ்' புகழாரம் சூட்டியது. கோபால கிருஷ்ண கோகலேவால், இந்திய விடுதலை போராட்டத்திற்குள் நுழைந்தவர். 1930-ல் தண்டி போராட்டத்தில் பங்கேற்றார்.1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது போலீஸின் தடியடியால் பாதிக்கப்பட்டார். பெண்களுக்கு கல்வி புறக்கணிக்கப்படுதல், குழந்தை திருமணம் உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் போராடினார்.

ரேணுகா ராய்

லண்டனில் படித்த ரேணுகா ராய், லண்டன் பொருளாதார பள்ளியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அகில இந்திய பெண்கள் மாநாட்டின் உறுப்பினராக இருந்தார். 1943-1946 அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக இருந்தார்.

சரோஜினி நாயுடு

1879-ம் ஆண்டு, பிப்.13 அன்று ஐதராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகத் திகழ்ந்தவர். இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழப்பெற்றவர். காங்கிரஸ் இயக்கத்திலும், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்று இந்திய விடுதலை போரட்டத்திற்கு தன் பங்கை செலுத்தினார். இந்தி, ஆங்கிலம், பெர்சியன், உருது, தெலுங்கு, வங்கம் என 6 மொழிகளில் புலமைப் பெற்றவர். The Golden Threshold, The Bird Of Time, The Broken Wings ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தன் அரசியல் தொடர்பாகவும், பெண் உரிமைகள் தொடர்பாகவும் பல கட்டுரைகளை எழுதியுள்கார்.

சுசீதா கிருபாளனி

ஹரியானாவின் அம்பாலாவில் 1908-ம் ஆண்டு பிறந்தவர். 1942-ம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தன் தீவிர பங்குக்காக அறியப்படுபவர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியை 1940-ல் உருவாக்கினார். சுதந்திரத்திற்கு பிறகு புதுடெல்லியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழிலாளர் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். இவரே இந்தியாவின் முதல் பெண் முதல்வராவார். 1946-ல் அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜயலஷ்மி பண்டிட்

ஆகஸ்ட் 18, 1890 இல் அலகாபாத்தில் பிறந்தவர் விஜயலஷ்மி. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் சகோதரி ஆவார். விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக, 1932-33, 1940, 1942,43 ஆகிய காலங்களில் சிறைத்துன்பம் அனுபவித்தார்.

1937-ம் ஆண்டு உள்ளாட்சி மற்றும் பொது சுகாதார அமைச்சராக ஆனார். இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சர் இவரே. ஐநா சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் ஆசியர் மற்றும் முதல் பெண்மணி இவரே.

அன்னி மஸ்கரினே

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். 1939-47 வரை இவரது அரசியல் நடவடிக்கைகளுக்காக பல முறை சிறை சென்றார். 1951-ம் ஆண்டு நடந்த முதல் பொது தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றார். கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்பி இவரே. நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன் மின்சாரம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.

தொடர்புக்கு: Nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x