Published : 26 Dec 2019 06:35 PM
Last Updated : 26 Dec 2019 06:35 PM

பெண் விடுதலையின் ஆணிவேர் அன்னை மீனாம்பாள்

அன்னை மீனாம்பாள்

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்திருப்போம். சிலர் அதுகுறித்து விவாதித்திருக்கலாம். இன்னும் சிலர் அதனைச் சத்தமில்லாமல் கடந்திருக்கலாம். "உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் முதல் முறையாக 50 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் வேட்பாளர்களைத் தேடுவதில் கட்சிகள் திணறல்" என்பதுதான் அந்தச் செய்தி.

பெண்கள் பல துறைகளில் முன்னேறிவிட்டதாகப் பேசிக்கொண்டிருக்கும் பொதுச்சமூகம், அவர்களின் அரசியல் அதிகாரம் குறித்து கேள்வியெழுப்பத் தயங்குகிறது. அதிலும், குறிப்பாக தலித் பெண்களை அரசியல் அதிகாரப்படுத்துவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் இன்றும் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படியிருக்கும் போதுதான், 1930-களிலேயே குறிப்பிடத்தக்க அரசியல் பணிகளை மேற்கொண்டு, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த அன்னை மீனாம்பாளின் நினைவு எழுகிறது.

அன்னை மீனாம்பாளின் 115-வது பிறந்த நாள் இன்று (டிச.26) அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில், மீனாம்பாள் மேற்கொண்ட பணிகளையும், அவர் விட்டுச் சென்ற மரபையும் தொடர்வதன் அவசியம் குறித்தும் அறியலாம்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான அன்னை மீனாம்பாள், 1904-ம் ஆண்டு, டிச.26 அன்று பிறந்தார். அன்றைய பர்மாவின் ரங்கூனில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் மீனாம்பாள். அவருடைய குடும்பமே சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் களம் கண்டதில் முன்னோடிகளாக அறியப்பட்டவர்கள். மீனாம்பாளின் தாத்தா பி.எம்.மதுரைப்பிள்ளை, கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்பட்டு செல்வந்தராகத் திகழ்ந்தவர். மீனாம்பாளின் தந்தை தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல் முறையாக சென்னை மாநகராட்சிக்குப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசுதேவப் பிள்ளை ஆவார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முக்கியத் தலைவராகவும் அறியப்பட்டவர்.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய அன்னை மீனாம்பாள், தனது 16-வது வயதில் 1918 இல் பட்டியலின இயக்கத் தலைவர் ந.சிவராஜை மணந்து கொண்டார்.

அக்காலத்திய இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மீனாம்பாள், அதன் பிறகு தமிழகம் வந்தார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத் துணிந்த அன்னை மீனாம்பாள், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்டு பணியாற்றத் தொடங்கினார்.

1928-ம் ஆண்டில், இந்தியாவில், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தச் சட்டம் எவ்வாறு செயல்படுகின்றன, அடுத்தகட்டமாக என்ன மாதிரியான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவதற்காக, சைமன் குழு இந்தியா வரவிருந்தது. பெரும்பாலான தலைவர்கள், சைமன் குழு இந்தியா வருவதை விரும்பவில்லை. குழு வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். ஆனால், சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி வரவேற்றவர், அன்னை மீனாம்பாள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக மீனாம்பாள் மேற்கொண்ட முதல் அரசியல் பணி என இந்நிகழ்வைச் சொல்லலாம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் மீனாம்பாள் புலமை பெற்றிருந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம், பட்டியலின மக்களின் விடுதலைக்கான போராட்டம் போன்றவற்றில் முன்னிலை வகித்தவர் அன்னை மீனாம்பாள்.

திராவிட இயக்க வரலாற்றில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னோடிகளாய் இருந்த பெண்கள் எத்தகைய வீரம் செறிந்த போராட்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள் என்பது குறித்து 'கருஞ்சட்டைப் பெண்கள்' எனும் புத்தகத்தை எழுதியவர் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா. அவரிடம் அன்னை மீனாம்பாள் குறித்துப் பேசினோம்.

ஓவியா, பெண்ணியச் செயற்பாட்டாளர்

"தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியாக முதன்முதலாக கப்பலோட்டிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னை மீனாம்பாள். தேச சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு வரும்போது, முதலில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தான் இணைகிறார். பெரியாரிடம் மிகவும் அன்பு பாராட்டியவர். பெரியாருடன் இணைந்து பல பணிகளில் செயல்பட்டவர்.

காஞ்சிபுரத்தில் 1938, டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பெரியார் கலந்துகொண்டார். மீனாம்பாள் தான் அந்த மாநாட்டில் கொடி ஏற்றுகிறார். நீலாம்பிகை அம்மையார்தான் தலைமை தாங்குகிறார். இப்படி பல பெண்கள் இருக்கின்றனர். அந்த மாநாட்டில் "பெரியாரை இனி 'பெரியார்' என்று மட்டுமே அழைக்க வேண்டும்" என அந்தப் பெண்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இது மிகவும் வித்தியாசமான தீர்மானம். வேறு எப்படியும் பெரியாரை அழைக்கக்கூடாது என்பதுதான் அந்தத் தீர்மானம்" என்றார் ஓவியா.

சாதிய ஒடுக்குமுறைகளுக்காக அன்னை மீனாம்பாள் ஆற்றிய பணிகள் ஏராளம். அதற்கு உதாரணமாக, 1937-ல் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆதி திராவிடர் மாநாட்டில் மீனாம்பாள் பேசியதை இங்கே நினைவுகூரலாம்.

"ஒரு குடும்பமோ, ஒரு சமூகமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் மக்களிடம் ஒற்றுமை மிகவும் அவசியம். நம் நாட்டின் சாதியப் பாகுபாடுகள் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து நம் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது. நம் நாட்டில் சாதிகள் அறவே ஒழிய இன்னமும் பல காலம் ஆகலாம். நாமும் மற்றவர்களைப் போல மனிதர்களாக நடத்தப்பட, வாழ்வில் முன்னேற, எல்லா உரிமையும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்கும் பொருட்டு நாம் ஒற்றுமையாக இயங்க வேண்டும்" எனப் பேசினார்.

சாதி ஒழிப்பு குறித்த அன்னை மீனாம்பாளின் பேச்சு இன்றும் எவ்வளவு முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது.

பெண்கள், குறிப்பாக தலித் பெண்களில் முதலாவதாக அன்னை மீனாம்பாள் சிவராஜ் முக்கியமான பல பதவிகளை வகித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக செனட்டின் முதல் தலித் பெண் உறுப்பினர், ஏஐஎஸ்சிஎஃப் எனப்படும் அகில இந்திய பட்டியல் சாதிகள் சம்மேளனத்தின் முதல் பெண் தலைவர். இந்த அமைப்பின் தேசிய பெண்கள் மாநாடு சென்னையில் 1944-ல் நடைபெற்றது. அம்பேத்கர் கலந்துகொண்ட இந்த மாநாட்டுக்கு அன்னை மீனாம்பாள் தலைமை தாங்கினார். 1945-ல் மகாராஷ்டிராவில் அதே அமைப்பு மாநாடு நடத்தியதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இந்த மாநாடுகளில் அவர் பேசியது சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை, பெண்களின் விடுதலை குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலை மற்றும் அரசியல் அதிகாரம் குறித்துத்தான்.

மெட்ராஸ் மாகாணத்தின் கவுரவ மாகாண நீதிபதி, தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியமான பதவிகளை அன்னை மீனாம்பாள் வகித்துள்ளார்.

பெரியார், அம்பேத்கர் ஆகியோருடன் பல பணிகளில் இணைந்து செயலாற்றியவர் அன்னை மீனாம்பாள்.

இவரது ஆளுமை குறித்துப் பேசும் ஓவியா, "காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் சட்ட அமைச்சராகப் பதவி வகிக்க வேண்டுமா என்று அம்பேத்கர் தயங்கியபோது, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றவர் மீனாம்பாள் அம்மையார். இறுதிக் காலத்தில் அவரும் அவருடைய கணவர் சிவராஜும் அகில இந்திய அரசியலை நோக்கி நகர்ந்தனர்" என்றார்.

அவர் மேற்கொண்ட பணிகளை விட, அதிலிருந்து இப்போது நாம் என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ரவிக்குமார்.

ரவிக்குமார், எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி

"அந்தக் காலத்தில் ஆதி திராவிட சமூகத்திலிருந்து மீனாம்பாள் மேற்கொண்ட பணிகளையும், இப்போது அச்சமூகப் பெண்களின் நிலைமையையும் ஒப்பிட வேண்டும். அரசியல் அதிகாரத்தில் இப்போது அப்பெண்களின் பங்கு என்ன? மேம்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்களா? கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக அவர்களின் தற்சார்பு அதிகமாகியிருக்கலாம். ஆனால், அரசியல் அதிகாரத்தில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

அரசியல் கட்சிகளில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் முக்கிய இடங்களுக்கு வரவில்லை. தலித் பெண்களில் தமிழகத்தில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் என்றால் நாம் மீண்டும் மீனாம்பாள், சத்தியவாணி முத்து போன்றவர்களிடம்தான் செல்ல வேண்டும். இந்தியா முழுமையும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. தலித் கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சிகளுக்குள் தலித் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும்" என்றார், ரவிக்குமார்.

தலித் பெண்களின் அரசியல் அதிகாரம் மேம்பட தேர்தல் ஆணையம் விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

"அரசியல் கட்சிகள் ஜனநாயகத்துடன் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதற்கான விதிகளை வகுக்க வேண்டும். ஒரு கட்சியில் 50% பதவிகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விதிகளை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தை அரசியல் கட்சிகள் தானே வழிநடத்துகின்றன. தலித் பெண்களை பொறுப்பில் அமர வைக்க மாட்டோம் என சொல்லும் கட்சிகள் அரசாளும் போது, நாட்டில் அத்தகைய பெண்களின் நிலை எப்படி இருக்கும்?" என்று கேள்வியெழுப்புகிறார் ரவிக்குமார்.

ஆம், மீனாம்பாள்கள் விட்டுச் சென்ற ஒடுக்கப்பட்ட பெண்களின் அரசியல் அதிகாரத்தையும் அம்மக்களின் விடுதலையையும் முன் நகர்த்திச் செல்ல வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x