Published : 05 Dec 2019 07:30 PM
Last Updated : 05 Dec 2019 07:30 PM

காலநிலை நெருக்கடி: நீளும் அபாயங்களின் பட்டியல்!

மனித குலம் சந்திக்கும் பெரும் அபாயமான காலநிலை நெருக்கடி குறித்து தொடர்ந்து சர்வதேச அளவில் அச்சுறுத்தும் ஆய்வறிக்கைகள் நம் கண்ணில் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் கடந்த பத்தாண்டுகளாக உலக நாடுகளின் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவை ஆராய்ந்து வருகிறது. 2019-ம் ஆண்டுக்கான 'வாயு வெளியேற்ற இடைவெளி அறிக்கை'யை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், கடந்த பத்தாண்டுகளில் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் ஆண்டுக்கு 1.7 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து, புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 3.2 டிகிரி செல்சியஸுக்கு உயர்த்தும் மோசமான நிலைமைக்கு வழிவகுத்திருப்பதாக இந்த ஆண்டின் அறிக்கை கூறுகிறது.

அதிர்ச்சி தரத்தக்க இந்த அறிக்கை குறித்தும் தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கும் சமயத்தில், இந்த வாரம் இன்னொரு ஆய்வறிக்கையும் நமக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.

ஐநா சபையின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு ஸ்பெயினில் மேட்ரிட் நகரில் இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. வருகின்ற 13 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலக வானிலை அமைப்பு, உலகளாவிய காலநிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், 1850 தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த உலகளாவிய சராசரி வெப்பநிலையைவிட 2019 ஆம் ஆண்டின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்றும் 2019 ஆண்டு உலக வரலாற்றில் இரண்டாவது அல்லது மூன்றாவது அதிக வெப்பமான ஆண்டாக அமையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சர்வதேச வரலாற்றில் மிகவும் வெப்பமான பத்தாண்டுகளில் நாம் வாழ்ந்து வருவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18, 19-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவால் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு தொழிற்சாலைகள் முதற்கொண்டு அனைத்து மட்டங்களிலும் அதிகமாகின. தொழிற்புரட்சியின் விளைவாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டன. இது இப்போது நாம் சந்திக்கும் காலநிலை நெருக்கடிக்கு வித்திட்டது.

இதனைக் கட்டுப்படுத்த 2015-ம் ஆண்டு 'பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை' கொண்டு வரப்பட்டது. புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்கவும் அதற்கான நடவடிக்கைகளை பசுங்குடில் வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் 'பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை'. அமெரிக்கா இந்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறிவிட்டது.

பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கை உலக நாடுகள் எட்டுமா என்கிற சந்தேகத்தை உலக வானிலை அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆய்வில் 2019-ம் ஆண்டின் வெப்பநிலை அதிகரிப்பு, இந்த ஆண்டில் ஏற்பட்ட அதீத காலநிலை நிகழ்வுகள், சூழலில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கியமான பகுதிகளை நாம் அறிந்துகொள்வது, எப்படிப்பட்ட அபாயகரமான கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள உதவும்.

2015-2019 ஆண்டுகள்தான் புவியில் அதிக அளவில் வெப்பம் பதிவான ஐந்தாண்டுகள் எனவும், 2010-2019 ஆண்டுகள் தான் மிக அதிக வெப்பம் பதிவான 10 ஆண்டுகள் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டில், மூன்று முக்கிய பசுங்குடில் வாயுக்களான கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் உமிழ்வு அதிகரித்துள்ளது. தொழில் புரட்சியின் காரணமாக, 2018-ம் ஆண்டில் கார்பன் டை ஆக்ஸைடு 147 சதவீதமும், மீத்தேன் 259 சதவீதமும், நைட்ரஸ் ஆக்ஸைடு உமிழ்வு 123 சதவீதமும் அதிகரித்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளின் சராசரியை விட அதிகம்.

2019-ம் ஆண்டில் இந்த வாயுக்களின் உமிழ்வு எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது 2020-ம் ஆண்டின் அறிக்கையில்தான் தெரியவரும். ஆனாலும், ஹவாய், தஸ்மானியா போன்ற பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின்படி, இந்த வாயுக்களின் அளவு 2019-ம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் உயர வாய்ப்புள்ளது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

காலநிலை நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிப்புகளை எதிர்கொள்வது கடல் வாழ்வியல் தான் என்பது கடந்த கால பேரிடர்களில் இருந்து நிரூபணமாகியுள்ளது. 2019-ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் கடல் மட்டம் உயர்வது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1993-2019 வரையிலான 27 ஆண்டு காலத்தில், கடல் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.25 மி.மீ. என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

2019-ம் ஆண்டில் கடல் பரப்பு, ஒன்றரை மாதங்கள் அசாதாரண வெப்பத்தைக் கொண்டிருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், உலகின் 38 சதவீதக் கடல் பரப்பு அதீத ஆற்றல் கொண்ட வெப்ப அலைகளையும், 28 சதவீதக் கடல் மிதமான ஆற்றல் கொண்ட வெப்ப அலைகளையும் கொண்டிருந்தது. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அதிகப்படியான உமிழ்வு, கடல் நீரில் பி.ஹெச். அளவைக் குறைப்பதால் ஏற்படும் கடல் நீர் அமிலமயமாதல் விளைவைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் குறிப்பாக பவளப்பாறைகள், சிற்பியினங்கள் பெரும் அழிவைச் சந்திக்கின்றன. கடல் நீர் அமிலமயமாகுதல் தொழில் புரட்சிக்குப் பின்பு 26 சதவீதம் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, வெப்பம் அதிகரிப்பால் மத்திய மற்றும் கிழக்கு பெருங்கடலில் லா நினோ மற்றும் எல் நினோ விளைவுகள் ஏற்படக்கூடும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு இந்த ஆண்டு வெப்பத்தை எதிர்கொண்டது. அதற்கு நேரெதிராக வட அமெரிக்கா முன்பில்லாததை விட, குளிர் அலைகளைச் சந்தித்தது. ஐரோப்பாவில் ஜூன், ஜூலை மாத இறுதிகளில் அதீதமான வெப்ப அலைகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வெப்ப அலைகளின் தாக்கம் இந்தியாவை மட்டும் விட்டு வைக்கவில்லை. மே மாதமும் ஜூன் மாதத் தொடக்கத்திலும் இந்திய துணைக்கண்டத்திலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெப்ப அலைகள் உருவாகியுள்ளது. ஜூன் 10-ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வெப்ப அலைகள் மட்டுமின்றி, பனிப்பொழிவு, குளிர் அலைகள் தாக்கமும் அதிகரித்துள்ளது.

காலநிலை நெருக்கடியால் புவியின் சூழலுக்கு இத்தகைய விளைவுகள் ஏற்பட, மறுபுறம் மனித உயிர் வாழ்வதே பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. காலநிலை நெருக்கடியால், பாதுகாப்பின்மை, பொருளாதார மந்தநிலை, உணவு நெருக்கடி ஆகியவை அதிகரித்திருக்கின்றன.

2018-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 820 மில்லியன் பேர் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், 2019 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 10 மில்லியன் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

இதுதவிர்த்து வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றாலும் மக்கள் பேரழிவைச் சந்தித்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட 'இடாய்' புயல் இதுவரை ஏற்பட்ட புயல்களிலேயே சக்திவாய்ந்தது என நம்பப்படுகிறது. இந்தியாவின் ஒடிசா கடற்கரையில் கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட 'ஃபனி' புயல் மணிநேரத்திற்கு 100 நாட்டிக்கல் மைல் என்ற அளவில் வீசியதால் பெருத்த சேதங்களை உண்டாக்கியது. இந்த புயல் 2013-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த புயலாகும். அதேபோன்று அரபிக்கடலில் ஏற்பட்ட 'கியார்' புயலும் குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்தி விட்டுத்தான் சென்றது. 'ஃபனி', 'இடை' போன்ற புயல்களால் 7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் 'புல்புல் புயலால்' 2 மில்லியன் பேரும் சீனாவில் 'லெகிமா' சூறாவளியால் 2 மில்லியன் பேரும் தங்கள் சொந்த வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் வட இந்தியாவில் மோசமான வெள்ளம் இந்த ஆண்டில் ஏற்பட்டது. 1961-2010 வரையிலான சராசரியை விட, இந்த ஆண்டு ஜூன் - செப்டம்பர் மாதத்தில் 10% அதிக மழைப்பொழிவை இந்தியா கண்டது. இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் ஏறத்தாழ 1,000 பேர் இறந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி, இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதீத காலநிலை நிகழ்வுகளும், மனித குலத்துக்கும் இப்புவியின் சூழலுக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவே செய்யும் என்பதை, இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

வறட்சி, காட்டுத் தீ, கடல் வாழ்வியல் மற்றும் அதனைச் சார்ந்திருக்கும் மக்கள் சந்திக்கும் இடர்கள் என காலநிலை நெருக்கடியின் விளைவுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். வெப்ப அலைகளால் ஏற்படும் நோய்கள், இறப்புகள், தண்ணீரால் ஏற்படும் நோய்கள், காற்று மாசால் இதயம், சுவாசம் சம்பந்தமான நோய்கள், மன அழுத்தம், மனக்குழப்பம், இடம் பெயர்வு, வாழ்வாதாரம் அழிப்பு, சொத்துகள் சேதம், விவசாயம் பாதிப்பு என அபாயங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.

இனியாவது, உலக நாடுகள் காலநிலை மாற்றம் குறித்து விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டியதற்கான தருணத்தில் நாம் இருக்கிறோம்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x