Published : 02 Dec 2019 19:22 pm

Updated : 02 Dec 2019 19:22 pm

 

Published : 02 Dec 2019 07:22 PM
Last Updated : 02 Dec 2019 07:22 PM

கடற்கரையில் பனி போன்ற வெண் நுரைப்படலம்: காரணம் என்ன?

foams-near-marina-beach
பட்டினப்பாக்கத்தில் படர்ந்திருக்கும் நுரையுடன் விளையாடும் குழந்தைகள் | படம்: எல்.சீனிவாசன்

சென்னையில் கடந்த 4 தினங்களாக மெரினா கடற்கரை முதல் திருவான்மியூர் கடற்கரை வரை பனி போன்று வெள்ளை நுரைப்படலம் படர்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு ஏதோ வெளிநாட்டில் குளிர்காலங்களில் படர்ந்திருக்கும் பனி போல இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும், குழந்தைகளும் அதனை ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர்.

நம் முழங்கால் உயரம் வரை இருக்கும் இந்த வெள்ளை நுரைப்படலத்தின் அடர்த்தியும், அளவும் அதிகமாக இருப்பதால் மீன்களின் பெருக்கம் பாதிக்கப்படலாம் என மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலோரத்தில் வாழும் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்படுகின்றனர். ஆனால், இந்த நுரை அசாதாரணமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கும் வேளையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மழை நீரைக் காரணம் காட்டுகின்றனர்.


சென்னை கடற்கரைகளில் இந்த வெள்ளைப் படலம் ஏற்படுவது ஏன்?

சென்னை கடற்கரைகளில் இத்தகைய வெள்ளை நுரைப்படலம் ஏற்படுவதற்கு மழை நீருடன் முழுமையாக சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவு நீர் கடலில் கலப்பதே காரணம் என்று கடற்கரை வள மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜா குமார் கூறுகிறார்.

"சென்னை கடற்கரைகளில் திடீரென்று இந்த நுரைப்படலம் ஏற்படவில்லை. 2014-ம் ஆண்டில் இருந்தே ஆண்டுதோறும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை காலகட்டத்தில்தான் இம்மாதிரியான நுரைப்படலம் ஏற்படும். இதற்குக் காரணம் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து கடலில் கலப்பதே.

உதாரணத்திற்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றின் தாங்கும் அளவு 100 லிட்டர் என வைத்துக்கொள்வோம். மழைக்காலத்தில் மழை நீருடன் சேர்ந்து 150-200 லிட்டருக்கு கழிவு நீர் அந்த ஆலைக்குச் செல்லும். அதனால், அந்த ஆலையால் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் அளவு குறைந்துவிடும். அதனால் போதுமான அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீரும், சென்னையில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயில் சேரும் கழிவு நீரும் கடலில் கலக்கும்போது, கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். அதனால்தான் இந்த நுரை உருவாகிறது.

இதனை நகரத்தில்தான் பார்க்க முடியும். நகரத்திற்கு வெளியே பார்க்க முடியாது. இதனைத் தடுக்க பெரிய அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க வேண்டும். நகரம் இன்னும் வளரும் போது இந்தப் பிரச்சினை அதிகரிக்கும். கடற்கரையில் இந்த மாதிரியான நுரைப்படலம் ஏற்படுவதை மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் பார்க்கலாம்" என்றார்.

வீட்டுக் கழிவு நீரில் பெரும்பாலும் சோப்பு, டிடெர்ஜெண்ட் தூள் ஆகிய கழிவுகள் அதிகமாக இருப்பதால், அவை கடலில் கலக்கும் போது நுரைப்படலம் ஏற்படும் என்று பூஜா தெரிவித்துள்ளார்.

"மழைக்காலம் அல்லாத பருவங்களிலும் கடலுக்குள் கழிவுநீர் கலக்கின்றது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். கோடை காலங்களில் இதுபோன்று கடற்கரையில் நுரை ஏற்படவில்லையென்றாலும் கழிவுநீர் கலந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும் சூழல் சீர்கேட்டின் தொடக்கம் இது" என்கிறார் பூஜா.

நுரைப்படலம் ஏற்படும்போது நீர் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச்செல்லும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அந்த நுரை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பொதுவெளியில் வெளியிட மறுக்கிறது என்றும் பூஜா குற்றம் சாட்டுகிறார்.

"இந்த நுரைப்படலம் ஏற்படுவதற்கு தொழிற்சாலைக் கழிவுகளின் பங்கு என்ன என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். எல்லா வீடுகளிலும் கழிவுநீர் இணைப்பு இருப்பதை மெட்ரோ வாட்டருடன் இணைந்து உறுதிப்படுத்த வேண்டும். கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் தனியார் லாரிகள், கழிவுகளை நேரடியாகக் கடலில் கலப்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். கழிவுகளை ஆறுகளில், கடலில் கலக்கவிடக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அதை யாரும் கடைப்பிடிப்பதுமில்லை, கண்காணிப்பதுமில்லை" என்கிறார் பூஜா.

இடம்: பட்டினப்பாக்கம், படம்: எல்.சீனிவாசன்

இந்த நுரையால் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் பாரதி கூறினார்.

"இயற்கையாகவே நன்னீரும் கடல் நீரும் ஒன்று சேரும் நேரங்களில் கடற்கரையில் நுரை ஏற்படும். ஆனால், அப்படி இயற்கையாகத் தோன்றும் நுரையால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், இப்போது ஏற்பட்டிருப்பது போன்று இதுவரை பார்த்ததில்லை. இந்த நுரையின் அடர்த்தியும், அளவும் அதிகம். நம் முழங்காலுக்கும் மேல் இந்த நுரை உயரமாக இருக்கிறது. கடற்கரையை ஒட்டியுள்ள தொழிற்சாலைகள், வேதிக்கழிவுகளை மழைக்காலங்களில் மழை நீருடன் சேர்ந்து கடலில் கலந்துவிட்டால் யாருக்கும் தெரியாது என நினைக்கின்றனர். அதனால், கழிவுகளைச் சுத்திகரிக்காமல் மழை நீருடன் கலந்து திறந்து விடுகின்றனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு மழையைக் காரணம் காட்டுகிறது. ஆனால், 2015-ம் ஆண்டில் சென்னை வெள்ளத்தின் போதே நுரை உருவாகவில்லை. தொழிற்சாலை நிறுவனங்கள் தவறு செய்கின்றன. மழைக்காலத்தில் தான் மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் முக்கியமான காலகட்டம். மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடலை நோக்கிச் செல்லும். இந்தக் காலத்தில்தான் மீன்கள் முட்டையிடும். அதனால், மீன்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கடற்கரை ஓரத்தில் வாழ்பவர்களில் சிலருக்கு தோல் அரிப்பு ஏற்படுவதாகச் சொல்கின்றனர். அரசு யாரையோ காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கக் கூடாது" என்றார், பாரதி.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, மழை குறைந்ததும் கடற்கரையில் ஏற்பட்டிருக்கும் நுரைப்படலமும் குறைந்துவிடும் என்றார்.

"கடல் நீரில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இருக்கலாம். நீர் மாதிரிகளை ஆய்வு செய்தோம். அதில், பாஸ்பேட், நைட்ரேட் ஆகியவற்றின் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது. சோப்பு, டிடெர்ஜெண்ட் கலக்கும்போது, கொந்தளிப்பு காரணமாக நுரை ஏற்படுகிறது. மழையின் அளவு குறைந்தால் நுரைப்படலமும் குறைந்துவிடும். தொழிற்சாலைக் கழிவுகள் எல்லாம் ஒன்றுமில்லை. சென்னையில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அதிகரிக்க வேண்டும். உள்ளாட்சித் துறைக்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பியுள்ளோம். கழிவு நீர் சுத்திகரிப்பைக் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.inகடற்கரை நுரைப்படலம்மெரினா கடற்கரைபட்டினம்பாக்கம்திருவான்மியூர் கடற்கரைபூஜா குமார்கடற்கரை வள மையம்மாசு கட்டுப்பாட்டு வாரியம்மீனவர்கள் சங்கம் பாரதிBeach foamMarina beachPattinambakkamTiruvanmiyur beachPooja kumarTNPCBFishermen association bharathi

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x