Published : 21 Nov 2019 07:12 PM
Last Updated : 21 Nov 2019 07:12 PM

ரஜினி - கமல் கூட்டணி: அரசியலிலும் நினைத்தாலே இனிக்குமா?

சினிமா உலகில் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் நிகழ்வில், 40 ஆண்டுகளுக்கும் மேலான தங்கள் நெருக்கமான நட்பை கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் பறைசாற்றிக்கொண்டனர். கமல்ஹாசனும் ரஜினியும் இணைந்து அரசியலிலும் பயணிக்கப் போவதாக ஊகங்கள் கிளம்ப, கமல்ஹாசன், "தமிழக நலனுக்காக இருவரும் இணைவோம், கொள்கை முரண்பாடு குறித்தெல்லாம் இப்போது ஏன் பேச வேண்டும்?", என்றார்.

ரஜினியும், "நான் கமலுடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன்," என கமல் கருத்தை வழிமொழிந்தார்.

இருவரும் இப்படிக்கூறிய இரண்டு நாட்களில், "தேவைப்பட்டால் இணைவோம்" என்றுதான் சொல்லியிருக்கிறோம் என பேட்டியளித்த கமல்ஹாசன் 'தேவைப்பட்டால்' என்பதை அழுத்திச் சொல்லியிருக்கிறார்.

1960-ல் 5 வயது சிறுவனாக 'களத்தூர் கண்ணம்மா'வில் நடித்த கமல்ஹாசனின் திரை வயது 60. 1975-ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானபோது, கமல்ஹாசன் ஏற்கெனவே பெரிய நடிகராக உயர்ந்திருந்தார். 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'நினைத்தாலே இனிக்கும்', 'அவள் அப்படித்தான்', '16 வயதினிலே' என பல திரைப்படங்களில் இணைந்து நடித்து தங்களுக்கென தனி முத்திரையைப் பதித்த இருவரும், 1979-ல் 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தில் கடைசியாக இணைந்து நடித்தனர். அதன்பின், மனக்கசப்பின்றி, தனித்தனிப் பாதைகளில் பயணிக்கத் தொடங்கினர். இருந்தாலும், இருவரும் தொடர்ந்து நட்பு பாராட்டினர். ஒருவரை மற்றொருவர் தாழ்வாக எங்கும் பேசியதில்லை. கமல்ஹாசன் திரை வாழ்வில் நுழைந்த 50-வது ஆண்டு நிறைவடைந்த போது நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில், "கலைத்தாய் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் சென்றால், கமலை மட்டும் இடுப்பில் வைத்துக்கொண்டு செல்கிறாள்" என சக கலைஞனும் நண்பனுமான ரஜினி பேசியதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் காட்சியில்

2017-ல் இருவரும் அரசியலில் வருவதற்கான சூழல் தென்பட்டது. 2017 டிசம்பர் 31-ம் தேதி, "நான் அரசியலுக்கு வருவது உறுதி. 2021-ல் 234 தொகுதிகளில் போட்டியிடுவோம்," என ரஜினி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்', சிவாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படம் என சினிமாவில் ஆக்டிவாக உள்ளார் ரஜினி.

ஆனால், தான் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த இரண்டே மாதங்களில், 2018, பிப்ரவரி மாதம், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிவிட்டார். ஓராண்டு கழித்து, 2019 மக்களவைத் தேர்தலையும் எதிர்கொண்டார். கடந்த மக்களவைத் தேர்தலில் 3.72% வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் பெற்றது.

இந்நிலையில் தான், இருவரும் "தேவைப்பட்டால் இணைவோம்" என்று கூறியிருக்கின்றனர். இருவரும் நிச்சயம் இணைவார்களா, இணைந்தால் இருபெரும் திராவிடக் கட்சிகளான அதிமுக, திமுகவுக்குச் சவாலாக உருவெடுக்க முடியுமா என்பது குறித்து ரஜினிக்கு ஆலோசனைகள் கூறி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனிடம் பேசினோம்.

தமிழருவி மணியன்

"ஊடகங்கள் இருவரிடமும் இதுகுறித்து கேள்வியெழுப்பின. நாகரிகம் கருதி, 40 ஆண்டுகால நட்பை மதித்து சேர்ந்து செயல்படுவோம் என்றார்கள். தேர்தல் வருவதற்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடக்கும். தேர்தலுக்கு 3 மாத காலத்துக்கு முன்பு உருவாகும் அணிகள்தான் தேர்தலைச் சந்திக்கும்.

இருவரும் இணைந்தால் பெரிய தாக்கம் ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக ஊழல் மடிந்த ஆட்சியைக் கொடுத்த இரு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளார். இன்னொருவர் ஆரம்பிக்க இருக்கிறார். நேர்மையான, ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம். கமல்ஹாசனுக்கு முன்பே 'சிஸ்டம் சரியில்லை' என்பதை ரஜினி சொல்லிவிட்டார். காலப்போக்கில் அவர்கள் இணைந்து செயல்பட்டால் அது இயல்பான விஷயமாகத்தான் இருக்கும். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று தமிழருவி மணியன் கூறினார்.

கமல்ஹாசனுக்கும் ரஜினிக்குமான கொள்கை முரண்பாடுகள், இருவரும் இணையும் போது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, "ரஜினி ஆத்திகர். கமல் நாத்திகர். அவ்வளவுதான் வித்தியாசம். தனிப்பட்ட நம்பிக்கைக்கு அரசியலில் இடமில்லை. மதம், சாதி, பணம்தான் தேர்தலில் முக்கியமான சக்திகள். இந்தச் சூழலை மாற்றும் மாற்று அரசியலை உருவாக்குவதுதான் ரஜினியின் நோக்கம். அதுதான் கமலுக்கும் நோக்கம் என்றால் இதைவிடப் பெரிய கொள்கை தேவையில்லை" என்றார் தமிழருவி மணியன்.

இருவரும் இணைந்து செயல்படுவதற்கு முன்பே யார் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபிரியா, "இருவரும் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளராக இருப்பார்" என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இணைவதற்கு முன்பே முரண்கள் எழுகின்றனவா எனக்கேட்டால், "ஸ்ரீபிரியா கூறியது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். பொதுமக்கள் ஆதரவை வைத்துதான் முடிவு செய்ய முடியும். இருவரும் தங்கள் கட்சிகளை ஒன்றாக இணைக்கப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவார்களா என்பதுதான் கேள்வி," என்றார் தமிழருவி .

இன்னும் 5-6 மாதங்களில் ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார். அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன என்று தமிழருவி மணியன் கூடுதல் தகவல்களைத் தந்தார்.

"2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் ரஜினி கட்சி தொடங்கலாம். அதற்கான வேலைகள் முடிந்துவிட்டன. ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக்கிவிட்டார். 234 தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு 2,500 பேர் என பூத் வாரியாக கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் வாரியாக கமிட்டிகளை அமைக்கும் சக்தி திமுக, அதிமுகவுக்குத்தான் உண்டு. அதற்கடுத்து, கட்சியைத் தொடங்காமலேயே இந்த நிலையை அடைந்திருப்பது ரஜினிதான். இதில் இன்னும் 20% வேலைகள் தான் உள்ளன. அவை நடைபெற்று வருகின்றன" என்கிறார் தமிழருவி.

கமல்-ரஜினி இருவரும் இணைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.

"எங்கள் கட்சித் தலைவர் கூறியதை நிர்வாகிகள் அனைவரும் ஏற்கிறோம். இருவரும் எந்தக் குழப்பமும் இல்லாமல் ஒரே கருத்தைத் தெளிவுபட கூறியிருக்கின்றனர். இருவரும் இணைந்தால் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். ஸ்ரீபிரியாவின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதலின்படி நடப்போம். அவர்களைப் பிரிக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அது நடக்காது. மக்கள் நலனை நோக்கமாகக்கொண்டு செயல்படும்போது கொள்கைகளை முன்வைக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் நலன் கருதி இணைவரும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது" எனக் கூறினார்.

ரஜினி இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறார், பாஜகவுக்கு இணக்கமாக இருக்கிறார் என்ற விமர்சனங்கள் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து செயல்படத் தடையில்லையா என்ற கேள்விக்கு, "ரஜினி பாஜக ஆதரவாளர் எனக் கூறுகின்றனர். அவர் அப்படிச் சொல்லவில்லை. அரசின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறார். இதுதான் எங்களின் கொள்கையும் கூட" என்று மகேந்திரன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம், கட்சியைக் கட்டமைப்பதில் தொடர்ச்சியாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் முதல் நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் மகேந்திரன் கூறினார்.

சினிமா வாழ்க்கையில் நட்புடன் விளங்கும் இருவரும் அரசியலிலும் ஒற்றுமையுடன் பயணிப்பார்கள் என்பது மகேந்திரனின் நம்பிக்கை.

அரசியல் சாத்தியங்கள், அசலான கள நிலவரம் போன்றவற்றைக் கடந்து ரஜினி - கமல் இணைப்பு அவர்களின் ரசிகர்களைப் பொறுத்தவரை நினைத்தாலே இனிக்கும் ரகமாக இருப்பதை இருதரப்பிடமும் பேசியதிலிருந்து அறிய முடிகிறது. ஆனால், இதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x