Published : 20 Nov 2019 08:01 PM
Last Updated : 20 Nov 2019 08:01 PM

முரசொலி நில விவகாரம்: 'பஞ்சமி' நிலமா? பதுங்குவது யார்?

கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'அசுரன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அத்திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதில், "அசுரன் படம் மட்டுமல்ல, பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!" என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்க, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற புகாருக்குத் தகுந்த ஆதாரங்களை திமுக வெளியிடவில்லை எனவும், இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, தமிழக பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

இதையடுத்து, இதுதொடர்பான விசாரணைக்கு முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்தப் புகார் மனு மீதான முதல் விசாரணை நேற்று (நவ.20) சென்னை, சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.எஸ்பாரதி, மனுதாரர் ஸ்ரீனிவாசன், தமிழக அரசு சார்பாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வருவாய்த் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர் ஓடெம் டெய், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி ஆகியோர் ஆஜராகினர். விசாரணை குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கு, விசாரணையைப் பார்வையிட அனுமதி தரப்படவில்லை.

விசாரணை முடிந்த பிறகு, ஆர்.எஸ்.பாரதி, ஸ்ரீனிவாசன் இருவருமே செய்தியாளர்களைச் சந்தித்தனர். "இதுகுறித்து விசாரிக்க இந்த ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. புகார் அளித்தவர் ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் வாய்தா கேட்கிறார்" என ஆர்.எஸ்.பாரதியும், "பொது வாழ்க்கையில் புகார் வரும்போது புகார் அளித்தவரிடம் ஆவணங்களைக் கேட்காமல் தாமாக அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்" என ஸ்ரீனிவாசனும் மாறி மாறி தங்கள் தரப்புக் கருத்துகளைக் கூறினர்.

விசாரணை மேற்கொண்ட முருகன், "புகார் அளித்தவரும், மாநில அரசும் சில ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இன்னும் நேரம் கேட்கின்றனர். அதனால், அடுத்த விசாரணை, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில், புகார் அளித்த ஸ்ரீனிவாசன் விசாரணையின் பாதியிலேயே வெளியேறிவிட்டதாக, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அவரிடமே கேட்டபோது, "நான் ஆணையத்திற்கு வரவில்லை, பாதியிலேயே சென்றுவிட்டேன் என திமுகவினர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். நான் விசாரணையில் கலந்துகொண்டேன். விசாரணை முடிந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டுதான் வந்தேன்" என்றார்.

முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரான ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என ஸ்ரீனிவாசன் கேள்வியெழுப்பினார்.

"நிர்வாக இயக்குனருக்குத்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் ஆஜராகாமல், அறங்காவலராக இருக்கும் ஆர்.எஸ்.பாரதி ஏன் ஆஜரானார் எனத் தெரியவில்லை. விசாரணைக்கு வராமல் தவிர்த்தது ஸ்டாலின்தான். ஆர்.எஸ்.பாரதிதான் ஆஜராவார் என எந்தக் கடிதமும் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை. அப்படியில்லாமல் ஆர்.எஸ்.பாரதியை அனுமதித்தது ஆணையத்தின் பெருந்தன்மை என நினைக்கிறேன்," என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

ஒருவர் மீது புகார் அளித்தால் இந்திய சாட்சியங்கள் சட்டப்படி அவரிடம் ஆதாரம் இருக்க வேண்டுமே. நீங்கள் என்னென்ன ஆதாரங்களைச் சமர்ப்பித்தீர்கள், எதற்காக வாய்தா கேட்டீர்கள் என்று சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினோம்.

"நான் ஆணையத்தில் வாய்தா கேட்கவில்லை. அரசியல் வாழ்க்கையில் அவர்களே ஆதாரங்களைத் தாமாக சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் எங்கெல்லாம் பஞ்சமி நிலங்கள் இருந்தன என்பதற்கான ஆவணங்களை நாங்கள் கொடுத்திருக்கிறோம். உரிய நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்போம் என்றார் ஸ்டாலின். ஆனால், நேற்று சமர்ப்பிக்காதது ஏன்? ஆணையத்திற்கு திமுக ஒத்துழைக்கவில்லை.

முரசொலி அலுவலகம் குறித்த ஆவணங்களை எடுப்பதற்கு திமுக ஒத்துழைக்காததால், அரசுக்குச் சுமை கூடுகிறது. திமுக தங்களிடம் உள்ள ஆவணங்களைக் கொடுத்தால் எளிதாக இருக்கும். என் மீது அவதூறு வழக்குத் தொடுப்போம் என மிரட்டுகின்றனர். அதனையும் நான் சட்டப்படி சந்திப்பேன். முரசொலி அலுவலகம் 'பஞ்சமி' நிலத்தில் கட்டப்பட்டது என நாங்கள் சொல்லவில்லை. அதுகுறித்த சந்தேகத்தை திமுக தெளிவுபடுத்தவில்லை என்றுதான் சொல்கிறோம். தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் இந்த ஆணையம் தலையிடலாம்" என்றார்.

தமிழக பாஜகவின் செயலாளர் ஸ்ரீனிவாசன் இவ்வாறு கூறிய நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு இதுகுறித்து விசாரிக்க அதிகாரமே இல்லை என்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

அவரிடம் இதுதொடர்பாகப் பேசியபோது, "நாங்கள் எந்தவித ஆவணங்களையும் ஆணையத்தில் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள்தான் எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். அவர்கள்தான் முதலில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு நாங்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிப்போம். புகார் அளித்த ஸ்ரீனிவாசன் ஒரு ஆவணத்தைக் கூட சமர்ப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரமே கிடையாது. இது நில உரிமை தொடர்பான பிரச்சினை. ஆனால், இந்த ஆணையம் தாழ்த்தப்பட்டோர் உரிமை மீறல்கள் தொடர்பாகத்தான் விசாரிக்க முடியும். இந்த ஆணையம் விசாரிக்கக் கூடாது என்பதற்கான ஆட்சேபத்தையும் ஆணையத்தில் அளித்திருக்கிறோம்," என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

திமுக மீது எழுப்பப்படும் தொடர் விமர்சனங்கள் குறித்து பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "திட்டமிட்டு ஒரு கூட்டம் வரலாற்றை மறைப்பதற்கும் தியாகத்தை மறைப்பதற்கும் சதி செய்துகொண்டிருக்கிறது. காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்று சிலர் கேட்கும் காலம் இது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது," என்றார்.

இறுதியாக அவரிடம், முரசொலி பஞ்சமி நிலம் இல்லை என்பதை திமுக நிரூபிக்குமா என்ற கேள்விக்கு 'கட்டாயமாக நிரூபிக்கும்', என்று பதிலளித்தார்.

விசாரணை குறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் முருகனிடம் கேட்டோம். புகார் அளித்தவர் ஆதாரங்களைக் கொடுத்தாரா, என்னென்ன ஆவணங்கள் கொடுத்திருக்கிறார் என்பது குறித்தும் விசாரணை எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் முருகன் பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆணையத்திற்கு இதுகுறித்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்ற விமர்சனத்திற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x