Published : 12 Nov 2019 06:52 PM
Last Updated : 12 Nov 2019 06:52 PM

சென்னை காற்று தூய்மையானதா?

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கடந்த ஒரு வாரகாலமாக காற்று மாசு, மக்களை மூச்சுத் திணற வைத்தது. காற்று மாசு குறித்து மக்களிடையே அச்சம் பரவிய நிலையில், காற்றின் தரம் மோசமான அளவை எட்டி 8 நாட்கள் கழித்து நேற்று (நவ.11) வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிகாரிகள், வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படுகிறபோது, குறிப்பாக சமீபத்தில் ஏற்பட்ட 'புல்புல்' புயலால் சூரியக் கதிர்கள் முழுமையாக உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. அதேபோல, கடல் காற்றின் ஈரப்பதம் அந்த சமயத்தில் குறைவாக இருக்கும்.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எல்லா மாசுக் கட்டுப்பாட்டு தர ஆய்வு நிலையங்களிலும் காற்றின் தரம் மோசமான நிலையில் இல்லை. 1-2 இடங்களில் மோசமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காற்று மாசால் சுவாசக் கோளாறுகள் வந்திருப்பதாக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என, சுகாதாரத் துறை நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறது. 2-3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்த நிலை இப்போது இல்லை. படிப்படியாக மாறி வருகிறது" எனத் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த ஒருவார காலமாக நிலைத்திருந்த காற்று மாசுக்கு பருவநிலை மாற்றம் தான் காரணமா என, சென்னை ஐஐடி, சுற்றுச்சூழலியல் மற்றும் நீர்வள பொறியியல் பேராசிரியர் எஸ்.எம்.சிவ நாகேந்திராவிடம் பேசினோம். இவர் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வல்லுநர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசும்போது , "பருவநிலை மாற்றம் தான் காற்று மாசுக்குக் காரணம் என அமைச்சர் கூறுவது உண்மைதான். காற்றின் வேகம், ஈரப்பதம், கடல் காற்றின் தன்மை ஆகிய காரணங்களால் காற்று மாசுபடும். இன்றைக்கு (நவ.12) காற்றின் தரம் மோசமாக இல்லை. கடல் காற்றின் மாற்றத்தினால் காற்று மாசு படிப்படியாகக் குறையும்" எனக் கூறினார்.

ஆலோசனைக்குப் பிறகு, வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையிலிருந்து ஏற்படும், காற்று மாசைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

காற்று தரக் குறியீடு என்பது, காற்றில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, டிரை ஆக்ஸிஜன், காற்று மாசுக்களின் மிக நுண்ணிய வடிவமான பி.எம்.2.5 துகள்கள், பி.எம்.10 துகள்கள், சல்ஃபர் ஆக்ஸைடு ஆகியவை அடங்கியதாகும்.

தேசிய காற்று தரக் குறியீட்டின்படி, இந்த அளவு 0-50 வரை இருந்தால் நன்றாக இருக்கிறது எனவும், 51-100 வரை இருந்தால் போதுமானது எனவும், 101-200 வரை இருந்தால் மிதமானது எனவும், 201-300 வரை இருந்தால் மோசமானதாக இருக்கிறது என்றும், 301-400 வரை இருந்தால் மிக மோசமானது எனவும், 401-500 வரை இருந்தால் தீவிரமாகவும், 501-க்கு மேல் இருந்தால் மிகத் தீவிரம் அல்லது அவசர காலநிலை எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு குறைந்துவிட்டது என, தமிழக அரசு சொல்லிய 24 மணிநேரம் கழித்தும் ஆலந்தூர், வேளச்சேரி, மணலி ஆகிய 3 இடங்களில் காற்றின் தரம் 50-ஐ தாண்டிய நிலையிலேயே உள்ளது என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. இதில், மணலியில், காற்று தர நிர்ணயம் 80 ஆகப் பதிவாகியுள்ளது.

சென்னையில் காற்று மாசு குறைந்துவிட்டதா, 200-300 என்ற அளவில்லாமல், 100-க்குள் அதன் தரம் இருப்பதால், மகிழ்ச்சியடையலாமா என சூழலியல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனிடம் கேட்டோம்.

"காற்று மாசைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசு இல்லையென்று சொன்னாலும், மக்களின் உடல்நிலை பொய் சொல்லாது. காற்று மாசைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்காததோடு, அதனை அதிகப்படுத்தும் வேலைகளிலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபடுகிறது.

ஏற்கெனவே இருக்கும் காற்று மாசை பருவநிலை அதிகப்படுத்துமே தவிர, புதிதாக காற்று மாசை உருவாக்காது. பருவநிலை தான் காற்று மாசுபடுதலுக்குக் காரணம் என்றால், மற்ற நாட்களில் ஏற்படும் காற்று மாசுக்கு என்ன காரணம்? இந்த ஆண்டு, ஆலந்தூரில் அதிகபட்ச காற்று மாசின் அளவானது மார்ச் மாதம் 1-ம் தேதி பதிவாகியுள்ளது. அப்போது என்ன பருவநிலை மாற்றம் ஏற்பட்டது? அப்போது 672 மைக்ரோகிராம்ஸ் பர் க்யூபிக் மீட்டர் என்ற அளவில் பி.எம். 2.5 துகள்களின் எண்ணிக்கை இருந்தது. மணலியில், கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு நவ.5-ம் தேதி வரை இருக்கும் 365 நாட்களில் 120 நாட்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகப் பதிவாகியுள்ளது.

நித்யானந்த் ஜெயராமன், சூழலியல் செயற்பாட்டாளர்

உலக சுகாதார மையத்தின் அளவுகோல் படி 25 தான் நல்ல காற்றின் தரம். இங்கு 50 என நிர்ணயித்துள்ளனர். அதனை அரசியல் ரீதியாக நிர்ணயித்துள்ளனர். அறிவியல் ரீதியாக நிர்ணயிக்கவில்லை.

சென்னையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 3 தர ஆய்வு நிலையங்கள் நன்றாக உள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிலையங்கள் மோசமாக உள்ளன. ஐஐடி சென்னை, ஆலந்தூர், மணலி ஆகிய 3 இடங்களில் தான் உள்ளன. சென்னையில் மட்டும் 39 இடங்களில் தர ஆய்வு நிலையங்கள் இருந்தால் சென்னையின் காற்றின் சராசரி தரத்தை அறியலாம்.

காற்று மாசு இருக்கிறது என ஒப்புக்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து பிரச்சினையே இல்லை என அமைச்சரும் அதிகாரிகளும் கூறுகின்றனர்," என நித்யானந்த் ஜெயராமன் தெரிவித்தார்.

இன்னும் மணலி, கொடுங்கையூர் போன்ற இடங்களில் காற்று மாசு மோசமாக உள்ளது எனவும், பருவநிலை நன்றாக இருக்கும்போதும் தொழிற்சாலைகள் காரணமாக எப்போதும் காற்று மாசால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.

மணலியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கூறுகையில், "அதிகாலையில் இருந்தே காற்று மாசு இந்தப் பகுதியில் தென்படுகிறது. நான் வேலைநிமித்தமாக அதிகாலை 3 மணியில் இருந்து, இரவு வரை மணலிக்கு வெளியில் தான் இருப்பேன். பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இங்கிருக்கும் தொழிற்சாலைகளில் அம்மோனியாவை அதிகமாக திறந்துவிடுவார்கள். அதனால், நேரடியாக மக்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் தாக்கம் மழை, குளிர்காலங்களில் அதிகமாக இருக்கும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, முன்கூட்டியே நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வருவார்கள். அதனால் தகுந்த ஏற்பாட்டுடன் அம்மோனியாவை திறந்துவிடாமல் தொழிற்சாலை நிறுவனங்கள் சுதாரித்துக்கொள்ளும். கடந்த 15 ஆண்டுகளாகவே இப்பகுதியில் காற்று மாசு அதிகம். ஆட்சியாளர்கள் எப்போதும் ஏசியில் இருப்பதால் அவர்களுக்குத் தெரியவில்லை," என்றார்.

அதேபோன்று, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில், குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்களும் ஆண்டுதோறும் காற்று மாசால் பாதிக்கப்படுகின்றனர்.

தொழிற்சாலை நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு செய்தல், விதிமுறைகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாசை எதிர்கொள்ள வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x