Published : 30 Oct 2019 05:15 PM
Last Updated : 30 Oct 2019 05:15 PM

சுஜித் - 82 மணிநேர லைவ்; டிஆர்பிக்காகவா?- காட்சி ஊடக நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?

அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.40.

2 வயதுக் குழந்தை சுஜித் திருச்சி, நடுக்காட்டுப் பட்டியில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். மழையால் அங்கு மூடப்படாமல் விட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் மண் உள்வாங்க, அதற்குள் தவறி விழுந்தான். சுஜித்தை மீட்க மதுரை, திருச்சி, கோவை மீட்புக் குழுக்கள், தீயணைப்புத் துறை, மாநிலப் பேரிடர் மீட்புத்துறை, தேசியப் பேரிடர் மீட்புத்துறை, ஓஎன்ஜிசி மற்றும் என்எல்சி இயந்திரங்கள் மீட்க முயன்றன.

8-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள், 82 மணி நேரப் போராட்டம், ஏராளமான உள்ளங்களின் கசிந்துருகும் பிரார்த்தனைகள் என எல்லாவற்றையும் கடந்து சுஜித், பூமித் தாயிடமே நிரந்தரமாகத் துயில் கொண்டான்.

தமிழகக் காட்சி ஊடகங்களில் சில, சுஜித்துக்காக நடந்த மீட்புப் பணிகளையும் உறவினர்களின் அழுகையையும் தொடர் நேரலையாகக் காட்டின. நாடு முழுவதும் நடந்தேறும் ஆழ்துளைக் கிணற்றுத் துயரங்களுக்கு மத்தியில் சுஜித் குறித்து பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் பேசினர். தேசிய கவனம் கிடைக்கவும் தமிழகத்தில் அதீத முக்கியத்துவம் பெறவும் ஊடக வெளிச்சமே முக்கியக் காரணம் என்று குரல்கள் எழுந்தன. எனினும் உணர்வு வயப்பட்ட ஒரு சூழலில், டிஆர்பிக்காகவே சுஜித்துக்கான நேரலைகளும் செய்திகளும் பின்னணி இசையோடு அரங்கேறின என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த உயர் நீதிமன்றம், தொடர் நேரலை செய்ததைத் தவிர எந்த ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படவில்லை. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என அதிருப்தி தெரிவித்தது. இவை அனைத்தையும் பிரதான காட்சி ஊடகங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

'நேரலையில் கிடைத்த கவனக்குவிப்பு'- கார்த்திகைச் செல்வன், நிர்வாக ஆசிரியர்- புதிய தலைமுறை

''சுஜித் தொடர்பான செய்தி கிடைத்தபோது சாமானியர்களின் மனநிலையில்தான் நாங்களும் இருந்தோம். 2 வயதுக் குழந்தை என்பது அதிகப் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுஜித்திடம் அசைவு இருந்தது, அம்மாவுக்குப் பதில் சொன்னது ஆகியவற்றால் 10-12 மணி நேரத்துக்குள் மீட்டுவிட முடியும் என்று நம்பினோம்.

இதற்கு முன்னதாக தலைவர்களின் மரணத்துக்குத்தான் தொடர் நேரலைகள் செய்திருக்கிறோம். காவிரி விவகாரம், ஒக்கி புயல், சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகளுக்கும் லைவ் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. உணர்வு சார்ந்த விவகாரம் என்பதால் இதையும் நேரலை செய்தோம்.

6 குழுக்கள் இதற்காகவே இயங்கின. தென், மத்திய மண்டல ஊழியர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர். ஷிஃப்ட் முறையில், 24/7 தொடர்ந்து 82 மணி நேரம் நேரலை செய்தோம். காட்சி ஊடகத்தின் வீச்சும் தாக்கமும் அதிகம். அதை மக்களுக்கான விழிப்புணர்வாக மாற்ற ஆசைப்பட்டதாலேயே இவ்வாறு செய்தோம்.

ஆனால் சுஜித்தின் பெற்றோரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். சுஜித்தின் அம்மாவிடம் துணிப்பை குறித்து எடுத்த பேட்டியை இதுவரை நாங்கள் வெளியிடவே இல்லை. நிபுணர்களைக் கொண்டு விவாதம் நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அடுத்தகட்டமாக BeTheChange என்ற பெயரில் விழிப்புணர்விலும் ஈடுபட உள்ளோம்.

நடிகர் சங்கத்துக்கு எதற்கு லைவ் என்று கேட்டால், அதில் குறைந்தபட்ச நியாயம் இருக்கிறது. இதுவே நேரலை போடவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்? பிரபலம் அல்லது அரசியல்வாதியின் குழந்தை என்றால் லைவ் போட்டிருப்பார்கள் என்பீர்கள். சாமானியருக்கான இழப்பை, எல்லோருக்குமான இழப்பாக மாற்றியது இந்த நேரலையும் அதன்மூலம் கிடைத்த கவனக் குவிப்பும்தான்.

எனினும் விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதில் ஆக்கபூர்வமான கருத்துகளை எடுத்துக்கொண்டு சரிசெய்து கொள்கிறோம். தனிப்பட்ட வகையில் விமர்சனங்களை ஆராய்ந்து, அதற்கேற்ற எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்'' என்றார் கார்த்திகைச் செல்வன்.

'நீதிமன்ற விமர்சனம் சரியே'- ஷீலா பாபு, செய்தி ஆசிரியர்- நியூஸ்18

''குழந்தை சுஜித் தொடர்பான செய்திகளில் நாங்கள் தொடர் நேரலை செய்யவில்லை. ஆனால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முழுமையான தகவல்களை அளித்தோம். ஆனால் அந்தச் செய்தியுடனே நிற்கவில்லை. மற்ற செய்திகளையும் வழங்கினோம். செய்தியை செய்தியாக மட்டுமே பார்க்க வேண்டும், உணர்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது இதழியலின் பால பாடம். எனினும் இதில் மனிதம் இருந்தது.

கடந்த காலங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அப்போது இத்தனை ஊடகங்கள் இல்லை என்பதால் அதீத கவனம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் நிமிடத்துக்கு நிமிடம் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வம் மக்களுக்கும் இருந்தது. நாட்கள் கடந்த பிறகு நடைமுறையில் காப்பாற்றுவது கடினம் என்று தெரிந்தாலும் நம்மைத் தாண்டி ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற அற்ப ஆசை இருந்தது. ஆனால் நடக்கவில்லை.

நீதிமன்றம் விமர்சித்தது 100 சதவீதம் சரியானது. பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் இடத்தில் உள்ள ஊடகங்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் அதைக் குறித்துப் பேசுகிறோம். இதுகுறித்து முன்னதாகவே பிரச்சாரங்களைச் செய்திருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். அரசால் மட்டும் இதைத் தனியாகச் செய்துவிடமுடியாது. இதுகுறித்து நியூஸ்18, விழிப்புணர்வை மேற்கொள்ளும்.

டிஆர்பிக்காகவே நேரலை செய்யப்பட்டது என்பதை இந்தச் செய்தியில் என்னால் ஏற்க முடியாது. தீபாவளியைக் கூடக் கொண்டாடாமல் பத்திரிகையாளர்கள் பணிபுரிந்தனர். மீட்புப் பணி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையையும் பொதுமக்களிடம் சேர்த்துக் கொண்டிருந்தோம். அடுத்தகட்ட நகர்வுக்காக தமிழகமே காத்திருந்தது. சின்னச் சின்னத் தகவல்களும் மக்களுக்கு சொல்லப்பட்டன. இது என்றைக்கும் டிஆர்பிக்கானதல்ல!'' என்றார் ஷீலா பாபு.

'ஊடகங்களின் பொறுப்பு'- கோசல் ராம், நிர்வாக ஆசிரியர்- நியூஸ்7

''எந்தவொரு விவகாரத்திலும் ஊடகங்களுக்கென பொறுப்பு உள்ளது. சுஜித் மீட்பு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யவே நேரலை செய்தோம். சென்சேஷனுக்காக அதைச் செய்யவில்லை. மக்கள் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையிலும் நேரலை செய்யப்பட்டது.

சுஜித்தின் உடல் அடங்கிய பெட்டி

குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்னும்போது கூடுதல் கவலையுடன் அதைச் செய்தோம். இரண்டாவது, மூன்றாவது நாட்களிலேயே காப்பாற்றுவது கடினம் என்று தெரிந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தோம். அரசு மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் சரியா, தவறா என்று விவாதிப்பதைவிட, நேரலை மூலம் அதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தோம். உடனுக்குடன் என்ன நடக்கிறது என்று அறிய மக்களும் ஆசைப்பட்டனர்.

ஊடகங்களில் வெறும் நேரலை மட்டும் நடத்தப்படவில்லை, நிபுணர்களைக் கொண்டு விவாதங்களும் நடந்தன. ஊடகச் செய்திகள் காரணமாகவே ஆட்சியர்கள், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடச்சொல்லி உத்தரவிட்டனர். அரசு, தான் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட்டது. ஊடகங்களில் வந்தால்தான் சில வேலைகள் நடக்கின்றன.

ஒரேயொரு சேனல் மட்டும் நேரலை செய்தால், அதை டிஆர்பிக்காகச் செய்தது எனலாம். எல்லோருமே நேரலையில் ஒளிபரப்பும்போது அது எப்படி டிஆர்பிக்காக இருக்க முடியும்? எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பரிதவிப்பில், பாதுகாப்பு உணர்வில் செய்ததுதான் நேரலை'' என்றார் கோசல்ராம்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x