Last Updated : 05 Sep, 2019 06:25 PM

 

Published : 05 Sep 2019 06:25 PM
Last Updated : 05 Sep 2019 06:25 PM

கணினி வகுப்பை கலகல வகுப்பாக மாற்றிவரும் மதுரை பேராசிரியர் பாண்டிகுமார்

"ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் ரொம்பவே சேதமடைந்து இருந்ததாம். அப்போது, ஊர் பெரியவர்கள, தர்மகர்த்தா எல்லாரும் சேர்ந்து கூட்டம் போட்டிருக்காங்க. அந்தக் கூட்டத்தில் கோயிலைக் கட்ட சில தீர்மானங்களைப் போடிருக்காங்க. முதல் தீர்மானம் புதிய கோயில் கட்டுவது, இரண்டாவது தீர்மானம் கோயில் இருந்த இடத்திலேயே, அது அமைந்த திசையிலேயே, அதன் அளவிலேயே புதிய கோயிலையும் கட்டுவது, 3-வது தீர்மானம் கோயிலில் உள்ள சிலைகள், அலங்காரப் பொருட்களைப் புதிய கோயிலுக்கும் பயன்படுத்துவது. 4-வதாக ஒரு தீர்மானம் போட்டார்கள். அதாவது, புதிய கோயிலைக் கட்டும்வரை பழைய கோயிலை இடிப்பது இல்லை என்பதே அந்தத் தீர்மானம்"

பேராசிரியர் டாக்டர் பாண்டிகுமார் இந்தக் கதையைத் தனது கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் முதல் வகுப்பில் முதல் கதையாகச் சொல்கிறார்.

இளைஞர்கள் எல்லோருக்குமே எதிர்கால கனவு இருக்கும். ஆனால் அந்தக் கனவுக்கு எது தடையாக இருக்கிறதோ அதைவிட்டுத்தர மனம்தான் இருக்காது. செல்ஃபோன், ஃபேஸ்புக், முதிர்ச்சியற்ற காதல், கெட்ட சகவாசம் என பல்வேறு தடைகளுக்குள் நீங்கள் சிக்கியிருக்கலாம். பழைய கோயிலை இடிக்காமல் புதிய கோயில் கட்டமுடியாது என்பதுபோலத்தான் உங்கள் குறைகளைக் களையாமல் முன்னேற முடியாது என்பதை உணர்த்தவே அவர் இதனை முதல் கதையாகக் கூறிக்கொண்டிருக்கிறார். கதை, மீம்ஸ் என்று கணினி அறிவியலை கலகல வகுப்பறையாக மாற்றிக் கொண்டிருக்கிறார் இந்த பேராசிரியர்.

ஆசிரியர் தினமான இன்றைய நாளை சிறப்பிக்க பாண்டிகுமார் போன்ற வித்தகர்களை மாணவர் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதைவிட வேறு வழி இருக்க இயலாது.

இந்து தமிழ் இணையதளத்துக்காக பாண்டிகுமார் அளித்த பிரத்யேக பேட்டி:

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். உங்களை அறிமுகப்படுத்துங்களேன்.

எனது பெயர் பாண்டிகுமார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம்தான் எனது சொந்த ஊர். சிறுவயதிலேயே வேலை நிமித்தமாக தந்தை, தாய் திருப்பூருக்கு பெயர்ந்ததால் சிறு வயதிலேயே நானும் அங்கு சென்றுவிட்டேன். அங்குதான் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம். எம்.சி.ஏ படித்தேன். பின்னர் எம்.ஃபில் முடித்துவிட்டு. கணினிஅறிவியலில் முனைவர் பட்டம் பெற்றேன். ஆரம்பத்தில் சிவகாசியில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தேன். கடந்த 4 ஆண்டுகளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியாக இருக்கிறேன்.

உங்களுக்கு எப்படி வகுப்பறையை கலகல அறையாக மாற்ற வேண்டும் என்று தோன்றியது?

படிக்கும்போது நான் ஆவரேஜ் ஸ்டூடண்ட். கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் சேர்ந்தபோது பல நாட்கள் பாடம் புரியவே புரியாது. சில நாட்கள் புரிந்து கொள்ளவும் மனம் விரும்பாது. பாடப்புத்தகத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும். சந்தேகம் கேட்க தயக்கமாக இருக்கும். கடைசி ஆண்டில்தான் ஏதோ கொஞ்சம் புரிவதுபோல் இருந்தது.
அதனாலேயே நான் பேராசிரியாக ஆனபோது என்னைப் போன்ற மாணவர்களுக்கும் எளிதில் பாடம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். மாணவர்களை அவர்களின் வழியிலேயே சென்று சேர முயன்றேன். அதன் விளைவாகவே கதைகளும், மீம்ஸ்களும் வகுப்பறைக்குள் வந்தன.

மாணவர்கள் எப்படி ஒத்துழைக்கிறார்கள்..

எனது வகுப்பறைக்கு செல்லும்போது ஒரு பாக்கெட் மிட்டாய்களுடனேயே செல்வேன். வகுப்பில் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொல்வதற்கு முன்னதாகவே அவர்களுக்கு அந்த இனிப்பை வழங்கிவிடுவேன். கைதூக்கிய மாணவன் பதிலே சொல்லாவிட்டாலும்கூட இறுக்கம் உடைந்துவிட்டதால் தனது சந்தேகத்தைக் கேட்க எழுந்து நிற்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் வகுப்பறையில் கவனிக்கிறார்கள், புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

கதை சொல்லப் போகிறேன் என்றவுடன் மாணவர்களின் உடல் மொழியில் ஒரு மாற்றம் தெரியும். வெறுப்புடன் அமர்ந்திருந்தவர்கள் ஓகே சார் என்ற ஒருமித்த குரலுடன் உற்சாகமாக அமர்வார்கள்.

கதைகளும், மீம்ஸ்களும், மிட்டாய்களுமே எனது வகுப்பறையின் கருவிகள். ஒரு செமஸ்டருக்கு 90 நாட்கள். 90 நாட்களுக்கு 90 கதைகளைச் சொல்கிறேன். அவர்களுடைய ஒத்துழைப்பு காரணமாகத் தான் இதுவரை இரண்டு புத்தகங்களை தொகுத்து வெளியிட்டுள்ளேன். முதல் புத்தகத்தில் எனது கதைகளும் மாணவர்களின் கதைகளும் இடம் பெற்றிருக்கும். அதன் பெயர் மாணவர் பண்புக் கதைகள். இரண்டாவது புத்தகம் வகுப்பறை கதைகள்.

அவ்வளவு கதைகளை எங்கிருந்து சேகரிக்கிறீர்கள்?

எனக்கு வாசிப்பில் அதிக நாட்டம் உண்டு. நான் வாசிக்கும் புத்தகங்களில் வரும் கதைகளையே பெரும்பாலும் கூறுகிறேன். தென்கச்சி சுவாமிநாதன் கதைகளை வகுப்பறையில் அதிகமாகக் கூறுகிறேன். எல்லா கதைகளும் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு மிகாது.

மீம்ஸ்களை நீங்களே உருவாக்குகிறீர்களா?.. இல்லை வெளியில் இருந்து பெறுகிறீர்களா?

நானேதான் உருவாக்குகிறேன். அவ்வப்போது நிலவும் ட்ரெண்ட் அடிப்படையில் மீம்ஸை உருவாக்குகிறேன். ஓஎஸ்- ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருந்தேன். இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சி++ கணினி மொழியை மீம்ஸ் மூலம் விளக்கும் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறேன். இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டார். ஒரு கணமான பாடத்தை எளிமைப்படுத்தி மாணவர்களிடம் சேர்க்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். மாணவர்களின் பயத்தைப் போக்குவதே முதல் கடமையாகக் கருதுகிறேன். அதன்பின்னர் அரவணைப்புடன் அறிவுரை கூறினால் எப்படிப்பட்ட மாணவர்களும் கேட்டுக் கொள்வார்கள்.

மாணவர்களுக்கு, இந்தக்கால இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?

அறிவுரை என்பதைவிட வேண்டுகோள் என்பேன். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவிடுவதைவிட அதிக நேரத்தை அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்காக செலவிடுகின்றனர். அதன் மதிப்பை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் குடும்பத்தினருடன் செலவழிக்க மறுத்த காலத்தை எப்படி மீட்டெடுக்க முடியாதோ அதேபோலத்தான் நீங்கள் உங்கள் கடமையை செய்ய மறுக்கும் காலத்தையும் மீட்டெடுக்க முடியாது. மதுரையில் 16 வயது முதல் 26 வரை உள்ள இளைஞர்களே குற்ற வழக்குகளில் அதிகமாகக் கைதாகின்றனர் என்ற புள்ளிவிவரம் அறிந்தபோது வேதனையாக இருந்தது. இருகை இணைந்தால்தான் ஓசை எழும். இங்கு உங்களை அரவணைத்து வழிநடத்த ஆசிரியர்கள் ஏராளமாக உள்ளனர். என்ன்னைப் போன்று என்னென்னவோ நூதன முறைகளுடன் காத்து நிற்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து பயணித்து பயன் பெறுங்கள் என வேண்டுகிறேன்.

இவ்வாறு பாண்டிகுமார் கூறிமுடித்தார். அவர் கூறிய கோயில் கட்டும் கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கையின் எந்த காலகட்டத்தில் இருப்பவருக்கும் சிறந்த படிப்பினையே. உங்கள் இலக்கை அடைய தடையாக இருக்கும் எதுவாக இருந்தாலும் அதை தகர்த்து முன்னேறுங்கள் முடங்கிவிடாதீர்கள்.

தொடர்புக்கு:- bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x