Published : 19 Aug 2019 06:58 PM
Last Updated : 19 Aug 2019 06:58 PM

இன்றுவரை என்னை புறக்கணிப்பு துரத்துகிறது; கலையின் மூலமாக என் மக்களை மீட்டெடுக்கிறேன்: புகைப்படக் கலைஞர் பழனிக்குமார் பேட்டி

வியட்நாம் போர் முதல் சூடானில் பசியால் எலும்பும் தோலுமாக வாடியிருக்கும் குழந்தையின் அவலம் வரை முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இந்த உலகுக்கு புகைப்படங்கள் மூலமாகவே தெரியவந்திருக்கின்றன. அப்புகைப்படங்கள் இந்த சமூகத்தின் வழி ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகம்.

துப்புரவுப் பணியாளர்களின் சமூக அவலம், புறக்கணிப்பு, நோய்மை, இறப்பு, கையறுநிலையில் உள்ள மனைவி, ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவர்களின் பிஞ்சுக் குழந்தைகள் என, துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வியலை 'நானும் ஒரு குழந்தை' புகைப்படக் கண்காட்சியின் வழியாக சமூகத்திற்கு உணர்த்தியவர், புகைப்படக் கலைஞர் பழனிக்குமார்.

'நானும் ஒரு குழந்தை'க்குப் பிறகு, கஜா புயல், சென்னை வறட்சி என பேரிடர்களில் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களை, தொடர்ந்து தன் மூன்றாவது கண்ணான கேமரா வழி ஆவணப்படுத்திக் கொண்டே இருக்கிறார் பழனிக்குமார். தற்போது 'பெப் கலெக்டிவ்' அமைப்புடன் இணைந்து சுற்றுச்சூழல், சமூகம் தொடர்பான புகைப்படங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு பழனிக்குமாரிடம் பேசினோம். அவரின் புகைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த தன்னை இன்னும் பின் தொடரும் சமூகப் புறக்கணிப்பு என பலவற்றை அவர் பகிர்ந்துகொண்டார்.

நீங்கள் வளர்ந்த சூழல் என்ன? அந்த சூழல் தான் புகைப்படக் கலைஞராக உங்களை உருவாக்கியது என்று சொல்லலாமா?

மதுரை ஜவஹர்லால்புரம்தான் என் ஊர். அம்மாவும், அப்பாவும் மீன் வியாபாரிகள். இப்போதிருக்கும் சிறிய கடை கூட சிறுவயதில் இல்லை. மீன்களைத் தலையில் சுமந்துகொண்டு அம்மாவும் அப்பாவும் வியாபாரம் செய்வர்.

மதுரையில் தனியார் பள்ளியில் 7-8 ஆம் வகுப்புப் படிக்கும்போது பள்ளிக் கட்டணம் செலுத்த முடியவில்லை. பள்ளியில் காலை வணக்கம் முடிந்தவுடனேயே கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல், அங்கேயே நிற்க வேண்டும் என்று கட்டளையிடுவார்கள். என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் இருப்பார்கள். கட்டணம் செலுத்த முடியாமல் வெளியே இருந்தால் வகுப்புக்குச் செல்ல வேண்டாம் என, எனக்கு முதலில் ஜாலியாக இருந்தது. வீட்டில் கஷ்டமான சூழ்நிலை காரணமாகத்தான் கட்டணம் செலுத்த முடியவில்லை என்ற எண்ணமே எனக்கு அப்போது இல்லை.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மற்ற மாணவர்கள் வகுப்புக்குச் செல்வதும், நான் வெளியே இருப்பதும் வருத்தமாக இருந்தது. கட்டணம் வாங்கிக்கொண்டு வர பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அம்மா, அப்பா மீன் வியாபாரம் செய்வதால் நான் என் வீட்டுக்குச் செல்ல மாட்டேன். வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். மற்ற நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வேன். அவர்களின் வீடுகளில் உள்ள கஷ்டத்தைப் பார்க்கும்போதுதான், என் வீட்டின் ஏழ்மையான சூழல் எனக்குப் புரிந்தது.

நான் விளையாட்டுப் போட்டிகளில் வென்று பரிசுகள் வாங்க வேண்டும் என்று என் அம்மாவுக்கு ஆசை. அதனால், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் வந்தது. விளையாட ஆரம்பித்த பிறகுதான் ஒரு நம்பிக்கை பிறந்தது. பள்ளித் தாளாளர் நான் படிக்க உதவி செய்தார். 10-வது முடித்த பின்பு ஐடிஐ-யில் சேர வேண்டும் என விரும்பினேன். ஆனால், சில சமூக அரசியல் காரணங்களால் என்னால் அங்கு படிக்க முடியவில்லை. நான் ஏன் ஒதுக்கப்பட்டேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது. பின்புதான் எனக்குத் தெரியவந்தது.

இறந்த துப்புரவுப் பணியாளரைத் தூக்கிச் செல்கின்றனர், படம்: பழனிக்குமார்/பெப் கலெக்டிவ்

ஆரம்பத்தில் எனக்கு புகைப்படக் கலையின் மீது ஆர்வம் இல்லை. டிப்ளமோ படிக்கும்போது கதை, கவிதைகளில் ஆர்வம். சினிமா மீது தான் பெரிய ஈடுபாடு இருந்தது. திரைப்படம் இயக்க ஆசைப்பட்டேன். டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என நினைத்தேண். ஆனால், அம்மாவின் விருப்பத்திற்காக ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தேன். அந்த சமயத்தில் விஸ்காம், புகைப்படக் கலை, நுண்கலை குறித்த பாடப்பிரிவுகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. அதைச் சொல்லவும் எனக்கு யாரும் இல்லை. எங்கள் ஊரிலேயே நான் தான் இரண்டாவது பொறியியல் பட்டதாரி என நினைக்கிறேன். கல்லூரியிலும் கவிதை, கதை என்றே என் செயல்பாடுகள் இருந்தன.

சினிமா மீது ஆர்வம் கொண்ட நீங்கள் எப்படி புகைப்படக் கலைஞராக மாறினீர்கள்? ஆரம்பத்தில் எத்தகைய புகைப்படங்களை எடுத்தீர்கள்?

கல்லூரி மூன்றாம் ஆண்டில் எனக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதில் வந்த பணத்தின் மூலம் முதன்முதலில் நிக்கான் 5100 கேமரா வாங்கினேன். அதற்கே சுமார் 70,000 ரூபாய் செலவானது. கால்பந்து விளையாட்டை விட, கேமரா தான் எனக்கு கல்லூரி அளவில் அடையாளத்தை ஏற்படுத்தியது. கல்லூரி நிகழ்சிகளில் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். கல்லூரிப் பேராசிரியர்கள் உட்பட பலரிடம் எனக்கு இணக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்திலிருந்தே, மக்களைப் படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா, அப்பாவை புகைப்படங்கள் எடுப்பது, எங்கள் ஊரைப் புகைப்படங்கள் வழி ஆவணப்படுத்துவது என எனக்குத் தோன்றியவற்றை புகைப்படங்களாக எடுத்தேன்.

அப்போது, புகைப்படக் கலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தொழில்நுட்பம் தெரியாது. எந்தப் புகைப்படக் கலைஞர்கள் குறித்தும் தெரியாது. எனக்குப் பிடித்த விஷயங்களை என்னுடைய பார்வையில் பார்க்க ஆரம்பித்தேன். அனுபவங்களின் மூலமாகத்தான் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டேன். கேமராவும் மொபைல் போன்றுதான். ஆனால், மக்களைக் குறித்து கற்க, நாம் மக்களுடன் பயணம் செய்தால் மட்டுமே முடியும். கல்லூரி படிக்கும்போது சாலையில் ஒரு புகைப்படக் கண்காட்சி வைத்தேன். அதிலிருந்து, என்னுடன் கல்லூரியில் முன்பு என்னுடன் பேசாதவர்களும் வந்து பேசினர். அந்த நிகழ்ச்சிதான், என் புகைப்படங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகக் காரணமாக இருந்தது.

'நானும் ஒரு குழந்தை' என உங்கள் முதல் கண்காட்சியிலேயே துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் காட்சிப்படுத்தியிருந்தீர்கள். அதற்கான எண்ணம் எப்படி உதித்தது?

கல்லூரி முடிந்தவுடன் நுண்கலையில் இருந்த குணா மற்றும் நண்பர்கள் மூலமாக ஓவியம் வரைவதிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அவர்களுடன் பயணம் செய்ய ஆரம்பித்தேன். 'களிமண் விரல்கள்' என்ற குழுவில் உள்ள எழிலரசன் அண்ணன்தான் எனக்கு இந்த உலகத்தையே காட்டினார். புகைப்படக் கலை மட்டுமல்லாமால் ஓரிகாமி உள்ளிட்ட மற்ற கலைகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். பழங்குடியினக் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக் கொடுப்பது, உறைவிடப் பள்ளி, அரசுப் பள்ளிகள், மாற்றுத்திறனாளி பள்ளிகள் என பல இடங்களுக்குப் பயணம் செய்தேன். குழந்தைகள் மூலமாகத் தான் புகைப்படக் கலையை நான் உணர ஆரம்பித்தேன். அந்தக் குழந்தைகள் தான் எனக்கான புதிய உலகத்தை உருவாக்கிக் கொடுத்தனர்.

துப்புரவுப் பணியாளரின் கைகள், படம்: பழனிக்குமார்/பெப் கலெக்டிவ்

'நானும் ஒரு குழந்தை' கண்காட்சிக்கு 'வானவில்' பள்ளியின் பிரேமா ரேவதியும், அவரது இணையர் நடராஜனும் உறுதுணையாக இருந்தனர். லலித்கலா அகாடமியில் அந்தப் புகைப்படக் கண்காட்சியை நடத்தினோம். இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம்' அமைப்பு ஏற்பாடு செய்தது. அப்போது, புகைப்படங்களை எங்கே பிரிண்ட் போடுவது என்பது கூட எனக்குத் தெரியாது. புகைப்படங்களை எடிட் செய்வது, பிரேம் போடுவது தெரியாது. எனக்குத் தெரிந்த இடங்களில் பிரிண்ட் போட்டேன். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அதற்காக எனக்கு செலவு அதிகமானது. நானே 120-140 புகைப்படங்களை பிரேம் போட்டேன்.

'நானும் ஒரு குழந்தை' புகைப்படங்கள் மூலமாக, நீங்கள் இச்சமூகத்திற்குச் சொல்ல விரும்பியது என்ன?

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை புகைப்படங்கள் எடுக்க, கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் பயணித்தேன். அம்மா உணவகத்தில்தான் அப்போது சாப்பிடுவேன். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். 20-25 ஆண்டுகளாக சென்னையில் இப்படி ஒரு கண்காட்சி நடக்கவில்லை என பலர் என்னிடம் கூறினார்கள். லலித்கலா அகாடமியில் கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் கண்காட்சியும் இதுவரை நடந்தது கிடையாது எனக் கூறினர். பயத்துடன் தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினேன். துப்புரவுப் பணியாளர்களின் இறப்பு, நோய்மை, வாழ்வியல் சூழல், குழந்தைகள் வாழ்வு கேள்விக்குறியாதல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அந்தக் கண்காட்சியை நடத்தினோம். இந்தக் குழந்தைகளுக்கு சமூகம் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்விக்குறிதான் என் புகைப்படங்கள். அக்குழந்தைகளின் பார்வை தான் அவர்கள் சமூகத்தை நோக்கி எறியும் கேள்வி.

'கக்கூஸ்' படத்திற்குப் பின்பு ஏகப்பட்ட துப்புரவுப் பணியாளர்களின் மரணங்களை புகைப்படங்களாக எடுத்துள்ளேன். இவர்களின் மரணங்கள் ஒரு சுழற்சியாக இருக்கிறது. அடுத்து, இதனை அவர்களின் குழந்தைகள் கையில் எடுப்பார்கள். இறந்தவர்களின் குழந்தைகள், அவர்களின் வாழ்வியல் சூழல் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளேன். அடுத்து இறக்கப்போவது இந்தக் குழந்தைகள் தான். என்னுடைய புகைப்படங்கள் மூலமாக என்னால் முடிந்தவரை இந்தக் குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும். இதுதான் என்னை உந்தியது.

துப்புரவுப் பணியாளர்களை புகைப்படம் எடுக்கும்போது ஏதேனும் சிரமங்களை உணர்ந்தீர்களா?

திவ்யபாரதியின் 'கக்கூஸ்' ஆவணப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படம் முடிந்த பின்பும், துப்புரவுப் பணியாளர்களின் வாழ்விடங்கள் பலவற்றுக்கு நான் தனியாகச் செல்ல ஆரம்பித்தேன். தனியாகப் பயணம் செய்தபோது, மக்களை நன்றாக உள்வாங்க முடிந்தது. கழிவறை சுத்தம் செய்பவர்களிடம் பேசும்போது பலர் “இந்த வேலை செய்வது என் பிள்ளைகளுக்குத் தெரியாது, யாரும் என்னுடன் சாப்பாடு சாப்பிட மாட்டார்கள்" என்று கூறினர். அப்போது அதன் பாதிப்பு எனக்குப் புரியவில்லை.

ஆனால், 'கக்கூஸ்' படம் முடிந்தவுடன், மிகப்பெரிய வலி ஏற்பட்டது. துப்புரவுப் பணியாளர் ஒருவரின் புகைப்படத்தை அவரது மகன் பார்த்தால் தன் தந்தையைப் புரிந்துகொண்டிருப்பானா அல்லது புறக்கணித்திருப்பானா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்தன. மக்களை எப்படி பார்ப்பது, எப்படியெல்லாம் பார்க்கலாம் என்று நிறைய கர்றுக்கொண்டேன். அவர்களின் வலியை புகைப்படங்களின் வழி எப்படிக் கடத்துவது என அறிய ஆரம்பித்தேன்.

படம்: பழனிக்குமார்/பெப் கலெக்டிவ்

துப்புரவுப் பணியாளர்களின் முகம் தெரியாமல் அவர்களது கைகளையும், கால்களையும் புகைப்படங்களாக எடுத்தேன். இந்த சூழலில் நான் பணியாற்றும்போது எனக்கு டெங்கு, டைஃபாய்டு, அம்மை, எல்லாமே வந்தது. இப்போதும் எனக்குக் காலில் காயம் ஏற்பட்டால் உடனே ஆறாது. சமீபத்தில் எனக்கு காலில் ஏற்பட்ட அரிப்பு இன்னும் சரியாகவில்லை. எனக்கே இப்படி இருக்கும்போது, காலங்காலமாக அதிலேயே பணிபுரியும் மக்களுக்கு எவ்வளவு நோய்த்தொற்று இருக்கும்? அவர்களின் ஆயுட்காலம் குறைவுதான்.

சிறுவயதில் பல புறக்கணிப்புகளைச் சந்தித்ததாகக் கூறினீர்கள்? இப்போது ஒரு புகைப்படக் கலைஞராக உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?

புறக்கணிப்புகள் இல்லாமல் ஒரு கலைஞன் இருக்கவே முடியாது. புறக்கணிப்புகள் வந்தால் தான் இன்னும் அதிகமாக வேலை பார்க்க முடியும். அம்பேத்கர் ஒவ்வொரு முறையும் புறக்கணிக்கப்படும் போது தான் இன்னும் அதிகமாகப் படிக்க ஆரம்பித்தார். நான் புறக்கணிக்கப்படுவதால், ஓரமாக ஒதுங்கி விடவில்லை.

மக்களிடம் பயணிக்க ஆரம்பித்த பிறகு தான் அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க ஆரம்பித்தேன். இன்று வரை என்னை சமூகப் புறக்கணிப்பு துரத்துகிறது. புறக்கணிப்பால் தான் நான் சாதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். நாம் மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறோம், ஒரு குறிப்பிட்ட சமூகம் புறக்கணிக்கப்படும்போது, நம்மை நாமே மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. துப்புரவுப் பணிகளில், தலித் மக்கள் மட்டும் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர், இறக்கின்றனர் என்பது புரிந்தது. என் கலையின் மூலமாக, என் மக்களை மீட்டெடுக்கும் வேலையை நான் செய்தாக வேண்டும். இப்போதுதான் என்னை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். தொடக்கம் தான் எப்போதும் சிரமமாக இருக்கும். 'நானும் ஒரு குழந்தை' இல்லையென்றால் பழனிக்குமார் என்ற புகைப்படக் கலைஞர் இருக்கிறாரா என்பது யாருக்கும் தெரியாது.

புகைப்படக் கலைக்கு நீங்கள் வந்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டதா? இக்கலையால் நீங்கள் அடைந்தது என்ன?

என்னால் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது என்றாலும், விளிம்புநிலை மக்களின் வேதனையையும் வலியையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும். மக்களை நான் இன்னும் சரியாகக் காட்சிப்படுத்தவில்லை என்ற எண்ணம்தான் என்னுள் மேலோங்கியிருக்கிறது. எப்படி அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற புரிதலுக்கே இப்போதுதான் வந்திருக்கிறேன். 'நானும் ஒரு குழந்தை'க்குப் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை. கூடங்குளம் போராட்டத்தை ஆவணப் புகைப்படங்கள் எடுத்த கலைஞர் அமிர்தராஜ் ஸ்டீபன் மிகப்பெரிய உதவிகளைச் செய்தார். பல இணையதளங்களில் புகைப்படங்கள் வெளியாவதற்கு உறுதுணையாக இருந்தார். கஜா புயல், சென்னை வறட்சி குறித்து ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

சில என்ஜிஓக்களுக்கு நீங்கள் பணியாற்றுவது, உங்களின் அடையாளத்தைச் சுருக்கிவிடாதா?

என்ஜிஓக்களுக்கு அதிகமாக நான் வேலை பார்த்தது இல்லை. ஆனால், அவர்களின் மூலம் நம் கலையை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இறந்த துப்புரவுப் பணியாளரின் மனைவி, படம்: பழனிக்குமார்/பெப் கலெக்டிவ்

உங்கள் புகைப்படங்களால் சமூகத்தில் உண்டான தாக்கங்கள் என்ன?

'நானும் ஒரு குழந்தை' புகைப்படங்களைப் பார்த்துவிட்டு எப்படி இந்தப் புகைப்படங்களை எடுத்தீர்கள் என்று பலர் கேட்டனர். நான் அந்த சமயத்தில் துப்புரவுப் பணியாளராக அப்போது மாறியிருந்தேன் என்று கூறினேன். அவர்களுடன் ஒருவராக இருந்ததால் தான் அப்போது புகைப்படம் எடுக்க முடிந்தது. அவர்களை மக்களாகப் பார்க்க வேண்டும். சிலர் அதன்பிறகு துப்புரவுப் பணியாளர்களை சக மனிதர்களாக பார்ப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து ஒரு விவாதம் உருவாகியிருக்கிறது. சமூகத்தின் மீது இளைஞர்களுக்கு கோபம் வந்திருக்கிறது. இப்படிப்பட்ட இறப்புகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.

உங்களைப் பொறுத்தவரை புகைப்படம் எப்படி இருக்க வேண்டும்?

புகைப்படம் என்பது என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் விவாதத்தை உருவாக்க வேண்டும். மக்கள் சார்ந்த விஷயங்களை நம் புகைப்படங்கள் பிரதிபலித்தால், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். என் புகைப்படங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படி உண்மையாக இருந்தால்தான், நமக்கான அக்கீகாரம் கிடைக்கும். இப்போதுள்ள சமூகம் சமத்துவமின்றிக் கிடக்கிறது. சமூகத்தில் சமத்துவத்திற்காக ஏற்கெனவே நிறைய பேர் உழைத்திருக்கின்றனர். இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். நான் அவர்களுடன் சேர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றேன்.

சிறந்த புகைப்படக் கலைஞருக்கு உண்டான திறமை என எதனைச் சொல்வீர்கள்?

அப்படி எதுவும் குறிப்பாக இல்லை. அவர்களுக்குப் பிடித்ததை அவர்கள் செய்யலாம். விதிகள் என்று எதுவும் இல்லை. நீ எப்படி மக்களைப் பார்த்திருக்கிறாயோ, அப்படியே உன் புகைப்படங்கள் இருக்கின்றன என்று என்னைப் பாராட்டுவார்கள். எந்தப் புகைப்படக் கலைஞரின் தாக்கமும் இல்லை எனக் கூறுவார்கள். எல்லோருக்கும் புரியும்படி என் புகைப்படங்கள் இருக்கின்றன. அப்படி எடுக்கத்தான் நான் முயல்கிறேன். நான் நல்ல புகைப்படம் எடுக்க இன்னும் 10 ஆண்டுகளாகும். நான் இன்னும் மக்களிடம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

புகைப்படக் கலைஞராக பொருளாதார ரீதியில் சாதித்துள்ளீர்களா?

என் புகைப்படங்களை மக்களிடம் சேர்ப்பதே எனக்குப் பெரிய விஷயமாகத் தெரிகிறது. நிறைய பணம் இதில் வராது. ஆனால், அது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இதன் மூலம் வரும் பணம் எதையும் நான் செலவு செய்ய மாட்டேன். லென்ஸ், புகைப்படங்களை பிரிண்ட் போடுவது என, கேமராவுக்குச் செலவழிக்கத் தான் அதனைப் பயன்படுத்துவேன். பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அதனைக் காரணம் காட்டி சமூகத்திற்குச் செய்யும் விஷயங்கள் தடைபடக் கூடாது என்று எண்ணுகிறேன்.

கண் பார்வையற்ற மாணவர், படம்: பழனிக்குமார்/பெப் கலெக்டிவ்

பொருளாதாரத்தில் மேம்படுவோம். என் புகைப்படங்களை நான் நம்புகிறேன். அவை இல்லாமல் நான் இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்க முடியாது. என் அம்மாவின் அறுவை சிகிச்சை, தம்பியின் அறுவை சிகிச்சை, மனைவியின் கல்லூரிச் செலவு, என் பசியைப் போக்கியது என எல்லோரையும் என் புகைப்படங்கள் தான் காப்பாற்றின. என் புகைப்படங்களை நம்புகிறேன். என் வாழ்க்கையை அவைதான் வழிநடத்துகின்றன.

புகைப்படங்கள் எடுக்க செலவுமிக்க கேமராக்கள் வேண்டும் என நினைக்கிறீர்களா?

ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். 'நானும் ஒரு குழந்தை'க்குப் பிறகு எனக்காக நிதி திரட்டினார்கள். அதில் 50,000 ரூபாய் பணம் வந்தது. அதில் கேமரா வங்குவதற்கு முன்பு, என் தம்பியின் அறுவை சிகிச்சைக்காக 1 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியிருந்தோம். கேமரா வாங்க வைத்திருந்த பணத்தை நான் கொடுத்துவிட்டேன். என் பழைய கேமராவை வைத்துதான் கஜா புகைப்படங்கள் எடுத்தேன். நன்றாக வந்தன. அப்போதுதான் புரிந்தது. மக்களின் வாழ்வியலையும், வலியையும் பதிவு செய்ய பெரிய கேமராக்கள் தேவையில்லை என்பதை உணர்ந்தேன்.

தொழில்நுட்பம் பெருகிவிட்ட இக்காலத்தில், புகைப்படக் கலையின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

இந்தியாவில் புகைப்படக் கலைக்கு பெரிய சக்தி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், புகைப்படக் கலை ஒரு கருவி. புகைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புகைப்படக் கலைஞர்கள் சமூகத்தின் ஒரு தூணாக இருப்பார்கள்.

உங்களின் அடுத்தகட்டப் பணிகள் என்ன?

மலைகளும் குழந்தைகளும் என்ற பெயரில் மலைவாழ் குழந்தைகளை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மூத்தகுடி மக்கள் குறித்து ஆவணப்படுத்தி வருகிறேன்.

துப்புரவுப் பணியாளர், படம்: பழனிக்குமார்/பெப் கலெக்டிவ்

இனிவரும் இளம் புகைப்படக் கலைஞர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?

நாம் எதனைப் புகைப்படங்களாக எடுக்க விரும்புகிறோமோ அதுகுறித்துப் படிக்க வேண்டும். தொடர்பியலை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் புகைப்படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும்.

உங்களுக்குப் பிடித்த புகைப்படக் கலைஞர்கள் யார்?
அப்படியெல்லாம் சொல்லத் தெரியாது. நிறைய புகைப்படங்கள் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. சுதாரக் ஓல்வேயின் படைப்புகள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரும் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வியலை புகைப்படங்களாக காட்சிப்படுத்தியவர். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படங்களில் அம்மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறதோ, இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. ஒரு மாற்றமும் இல்லை. வளர்ந்து வரும் கலைஞர்கள் பலர், ஆழமான கருத்துகள் பொதிந்த புகைப்படங்களை எடுக்கின்றனர்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x