Published : 05 Aug 2019 11:04 AM
Last Updated : 05 Aug 2019 11:04 AM

'அறம் பழகு' எதிரொலி: கபடி வீராங்கனைகளின் ஓராண்டு படிப்புச் செலவை ஏற்ற கோபிநாத்!

படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.

இதில் வேலூரில் உள்ளூர் மற்றும் தேசிய கபடிப் போட்டிகளில் விளையாடி பரிசு பெற்ற 7 மாணவிகள் படிக்க வசதியில்லாமல், கல்லூரியில் சேரக் காத்திருக்கும் செய்தி வெளியானது.

இச்செய்தியைப் படித்த 'நீயா நானா' கோபிநாத், மாணவிகளின் ஓராண்டுக்கான படிப்புச் செலவை ஏற்றுள்ளார். கல்லூரியில் கட்டணம் கட்டுவதற்காகத் தேவைப்பட்ட ரூ.58 ஆயிரத்தையும் காசோலையாக அளித்துள்ளார். இத்தொகையை மாணவிகள் படிக்க உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கே நேரடியாகச் சென்று அளித்துள்ளார் கோபிநாத். 

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார் மாணவிகளின் பயிற்சியாளர் சஞ்சய் காந்தி.
''காலேஜ் சார்பா 10 சீட்டுகளை கொடுத்தாங்க. மாணவிகளோட விளையாட்டு திறமைகளைப் பார்த்து உணவு, ஹாஸ்டல் வசதிகள் இலவசம்னு சொல்லிட்டாங்க. பெத்தவங்ககிட்ட பேசி ஏற்கெனவே சொல்லியிருந்த 7 பேரோட, இன்னும் 3 பேரையும் காலேஜ்ல சேர்த்துட்டோம். மகளிர் காங்கிரஸ்ல இருக்கற லக்‌ஷ்மி மேடம் உதவி பண்ணாங்க.

'இந்து தமிழ்'ல செய்தி வந்து கொஞ்ச நாள்ல கோபி சார்கிட்ட இருந்து போன் வந்துச்சுங்க. அப்போ, வேல்ஸ் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கறதைப் பத்தி சொன்னேன். கொஞ்ச நேரத்துக்கே காலேஜுக்கே எங்களை நேரா வரச்சொல்லி இருந்தார். அவர் வருவார்னு யாரும் நம்பவே இல்லை. இருந்தாலும் நம்பிக்கையோட பிள்ளைங்களை அழைச்சுக்கிட்டு காலேஜ் போனேன். ஒரு வருஷ ஃபீஸ் ரூ.58 ஆயிரத்தை ஒரே செக்காகக் கொடுத்துட்டு, போய்ட்டார். 

கோபி சார்கிட்ட, ரொம்ப கஷ்டப்பட்டோம், நன்றி சார்னு சொன்னப்போ, ''நான் 'இந்து தமிழ்' செய்தியைப் படித்துவிட்டுத்தான் உதவ முன் வந்தேன். அக்கவுண்ட்டிலேயே பணத்தைப் போட்டிருப்பேன். என்னுடைய நண்பர் தீபக் கேட்டுக்கொண்டதால்தான் நேரடியாக கல்லூரிக்கு வந்தேன். நன்றாகப் படித்து முன்னுக்கு வாருங்கள். நீங்கள் முன்னே வந்துள்ளதுக்கு நிறையப் பேர் காரணமாக இருப்பார்கள்!''னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.

'இந்து'வால்தான் இது சாத்தியமானது. என்றைக்கும் நாங்க நன்றியோட இருப்போம்'' என்று நெகிழ்கிறார் சஞ்சய் காந்தி.

தேசிய கபடி வீராங்கனையும் மாணவியுமான திவ்யா கூறும்போது, ''ரொம்ப தேங்க்ஸ் கா, கண்டிப்பா ஏதாவது ஒரு போட்டியில மெடல் அடிச்சுட்டு வந்து உங்களைப் பார்ப்போம்'' என்று உறுதியுடன் சொல்கிறார்.

இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் 'இந்து தமிழ் திசை' இணையதளம் பெருமை கொள்கிறது. 

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x